Header Ads



மக்களுடன் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் இறங்க தயார் - ரிஷாத் பதியுதீன்

இலங்கையின் வடக்கே, வில்பத்து சரணாலயப் பிரதேசத்தை ஆக்கிரமித்து முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக கடும்போக்கு பௌத்த அமைப்புகள் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்துவருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், கடற்படை முகாம் அமைப்பதற்காக பெருமளவு நிலப் பிரதேசம் கையகப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காணிகளை இழந்துள்ள முஸ்லிம் குடும்பங்களே வில்பத்து சரணாலய பகுதியில் குடியேறி இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகளை மறுதலித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டுப் பிரதேசங்களில் கடற்படை முகாம் காரணமாக ஒரு குடும்பம் மட்டுமே இடம்பெயர நேரிட்டதாகவும், அந்தக் குடும்பமும் இப்போதும் சரணாலயப் பகுதிக்குள் குடியேறியுள்ள குடும்பங்களில் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சும் கடற்படையும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இடம்பெயர்ந்த ஒரு குடும்பத்துக்கும் மாற்றுக்காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

´நாட்டின் தேசியப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரை இந்தப் பிரச்சனைக்குள் இழுக்காமல், சிவில் அதிகாரிகள் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வார்கள்´ என்று நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பெருமளவு காணிப் பிரதேசங்கள் படைகளின் தேவைக்காக கையகப்படுத்தப்படுகின்றமை பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன 

ஆனால், மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டுப் பிரதேசங்களில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காரணமாக சுமார் 700 ஏக்கர் பரப்புடைய தமிழ் - முஸ்லிம் மக்களின் காணிகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிற்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 

மறிச்சிக்கட்டுப் பகுதியில் 300 ஏக்கர் காணியை கடற்படைத் தேவைக்காக அரசு கையகப்படுத்தியுள்ள நிலையில், காணிகளின் உரிமையாளர்களான 73 குடும்பங்களே தமது பாரம்பரிய காணிகளுக்கு சற்று தொலைவில் தற்காலிக கூடாரங்களில் வசித்துவருவதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார். 

இந்தக் குடும்பங்கள் வில்பத்து சரணாலயத்தின் எல்லைக்குள் குடியேற்றப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார். 

இந்த மக்களுக்காக பிரதேச செயலாளரால் அளிக்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளில் குடியேறுவதற்கும் இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

´சொந்தக் காணிகளுக்குள்ளும் வாழமுடியாமல், தற்போது தங்கியிருக்கும் பகுதிகளிலும் இருக்கமுடியாமல், மாற்றுக்காணிகளுக்கும் அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில் மக்கள் தத்தளிக்கின்றனர்´ என்றார் ரிஷாத் பதியுதீன்.  இரண்டு வாரகாலத்துக்குள் மாற்றுக்காணிகள் கொடுக்கப்படாவிட்டால் மக்களுடன் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் அமைச்சர் கூறினார். 

1 comment:

  1. you and Mr Asad shaly are the 2ed Ashraff ,we will support to you every time ,Allha's help with you

    ReplyDelete

Powered by Blogger.