Header Ads



மூழ்கிய தென்கொரிய படகில் இருந்து மீட்கப்பட்ட பள்ளி துணை முதல்வர் தற்கொலை

475 பயணிகளை ஏற்றிச்சென்ற செவோல் என்ற தென்கொரியப் படகு கடந்த புதன்கிழமை அன்று காலை அந்நாட்டின் ஜின்டோ என்ற இடத்துக்கு அருகே கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் 352 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். சியோலின் தெற்கே உள்ள அன்சன் நகரத்தில் செயல்பட்டு வரும் டன்வோன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இம்மாணவர்கள் கொரியாவின் தென்பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தீவான ஜெஜுவிற்கு சுற்றுலா செல்வதற்காக இந்தப் படகில் ஏறியுள்ளனர்.

படகு கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியபோது அதிலிருந்த 179 பேர் கடலில் குதித்து தப்பித்துள்ளனர். அவர்களில் அந்தப் பள்ளியின் துணை முதல்வரான கங் மின் கியு(52)வும் ஒருவராவார். இந்த விபத்தில் இன்னும் தேடப்பட்டு வரும் 268 பேரின் உறவினர்களும் அங்குள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கியுவும் தங்கி இருந்துள்ளார்.

இன்று காலை அங்கிருந்த ஒரு மரத்தில் இவர் பிணமாகத் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜின்டோ நகரின் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மூழ்கியதாகத் தேடப்பட்டு வருபவர்களில் பெரும்பான்மையான மாணவர்களும் அடங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.