Header Ads



மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்காரவின் விளக்கமும், இலங்கை கிரிக்கெட் சபையின் பதிலும்


மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்காரவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று தனது வருத்தத்தை தெரிவித்தது.

தமது நிறுவனத்தின் செயலாளரோ பிரதம நிறைவேற்று அதிகாரியோ சம்பந்தப்பட்ட வீரர்கள் தொடர்பாக ஊடகங்கள் முன்பாக தெரிவித்தது போன்று கருத்து வெளியிடவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, குறித்த இரண்டு வீரர்களும் இருபதுக்கு20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற எடுத்த தீர்மானம் தொடர்பில் தமக்கு தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் பதவியை வகிக்கும் அதிகாரி ஒருவர் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புமே பாதிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் மற்றும் குறியீட்டு தூதுவராக உயர்மட்ட அந்தஸ்த்துடைய இருவர் சரியாக விடயங்களை கேட்டறியாமல் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வருத்தமடைவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமது நிறுவனம் இனிமேலும் கலந்துரையாட எண்ணவில்லை என்றும் குறித்த பிரச்சினை இத்துடன் முடிந்தது எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபதுக்கு20 உலக சாம்பியனான இலங்கை அணி நேற்று நாடு திரும்பியதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்காரவும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதன்போது மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்ததாவது;

“பங்களாதேஷூக்கு சென்ற பின்னர் இது கடைசி உலகக் கிண்ணமா என்று கேட்டார்கள். எனக்கு தற்போது 38 வயதாகிறது. ஆகவே, என்னால் இன்னுமொரு உலகக் கிண்ணத் தொடரில் விளையாட முடியாது. எனவே, இது எனது கடைசி உலகக் கிண்ணத் தொடர் என்று அந்த தரப்பினருக்கு நான் பதிலளித்தேன். அந்தப் பதில் தொடர்பாக ஆராய்ந்து பார்க்காமல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும், செயலாளரும் எம்மிடம் கேட்காமல் தமது ஊடகத்துக்கு சென்று அவ்வாறு கூறியமை மிகுந்த வருத்தமளிக்கிறது.”

குமார் சங்கக்கார தெரிவித்திருந்ததாவது;

“த ஐலன்ட் பத்திரிகை என்னிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இது எனது கடைசி இருபதுக்கு20 உலகக் கிண்ணம் என கூறினேன். அதற்கு அப்பால் மஹேலவோ நானோ ஊடக சந்திப்பையோ அல்லது வேறெந்த விதத்திலுமோ அது தொடர்பில் எதனையும் கூறவில்லை. மஹேல கூறிய விடயத்தில் நானும் உடன்படுகின்றேன்.”

No comments

Powered by Blogger.