Header Ads



மதம் பிடித்தவர்களின் ஆட்சி..!


(நவாஸ் சௌபி)

இந்த நாடு உங்களுடையது 
எங்கள் பிறைச் சீலைகளை அவிழ்த்து
காவியைப் பறக்கவிடுங்கள்.

பாதைகளும் உங்களுடையதுதான் 
ஹஸனைக் கிழித்துவிட்டு 
தர்மபாலாவை ஒட்டுங்கள்.

நிலங்களும் 
நீங்கள் தந்ததுதான் 
வீட்டுக்கொரு அரச மரம் தாருங்கள் 
வாசலில் நடுகிறோம். 

நீங்கள் மதம் பிடித்தவர்கள் 
பள்ளிகளை இடித்து 
பண்சாலைகளைக் கட்டுங்கள் 
போதாது என்றால் 
எங்கள் வீட்டுக் கூரைகளிலும் 
ஏறி நின்று வணங்குங்கள்.

பசித்தால் 
எங்கள் அடுப்புகளில் கொதிக்கும் 
உலையை அள்ளிக் குடியுங்கள். 
பசி தீராவிடின்
குழந்தைகளுக்கு ஊற்றிய பாலிருக்கிறது
எடுத்துப் பருகுங்கள்.

களைப்பு வந்தால்
காலை நீட்டி 
எங்கள் திண்ணைகளில் உறங்குங்கள் 
விரல்களில் நெட்டியை முறித்துவிடுகிறோம். 

போகும் போதும் 
வெறும் வாய்யோடு போக வேண்டாம் 
மூத்தம்மாவின் வெற்றிலைத் தட்டிருக்கிறது
நாக்குச் சுவக்கச் சுண்ணாம்பைத் தடவி
நடு வீட்டுக்குள் சப்பித் துப்புங்கள்.

எல்லாம் செய்யுங்கள் 
எதுவும் கேட்க மாட்டோம் 
ஆனாலும் கொஞ்சம் நில்லுங்கள் 
என் மகன் ஒன்றை மட்டும் கேட்கிறான் 
பௌத்தம் என்றால் என்ன? என்று 
என்ன சொல்லப் போகிறீர்கள்.

இறைச்சி தின்னிகள்

இப்போது எல்லோரும் வாய்களில் 
இறைச்சியைக் கௌவித் திரிகிறார்கள். 
புனித ஸ்தலங்களிலும் 
அரச சபைகளிலும் 
இறைச்சியைத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

காஞ்ச இறைச்சிபோல் 
இறைச்சிபற்றிய கதையை
கடித்திழுத்துக் கதைக்கிறார்கள். 
பல்லில் சிக்கிய சிறுதுண்டையும் 
துப்பாமல் விழுங்கி ருசிக்கிறார்கள்.

இறைச்சியைவிடவும் ருசியானது
இறைச்சியின் கதைகள்.

இன்று
இந்தநாட்டின் நோய் இறைச்சிதான் 
பிறசர் எனும் இனவாதம் 
குழஸ்றோள் என்ற கொடும்பகை
மாரடைப்பு என்ற தீக்குளிப்பு
எல்லாம் இறைச்சியால் வருவதுதான்.

பசித்தாலும் புல்லைத் தின்னாத புலி 
தின்றுகொண்டிருந்த அதே இறைச்சியை
பின்னர் சிங்கமும் தின்னத் தொடங்கிற்று.

எதுவும் முடிந்தபாடில்லை
எங்களுடைய சகனில் 
ஒருசதைத் துண்டாகக் கிடந்த இறைச்சியை
தெருவெல்லாம் இரத்தவாடையோடு
இழுத்துத் திரிகிறது சிங்கம். 

2 comments:

Powered by Blogger.