Header Ads



மறிச்சிக்கட்டி முஸ்லிம்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சந்தித்தது


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மன்னார்- மறிச்சிக்கட்டி பிரதேசத்திற்கான இரண்டாவது விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்(NFGG) தலைமைத்துவ சபையினர் நேற்று (11.04.2014) மேற்கொண்டனர்.

மறிச்சிக்கட்டி பிரதேசத்திற்கு பொது பல சேனா அமைப்பினர் சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்ததன் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காகவும் அத்தோடு இம்மக்களுக்கான நிரந்தரத்தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுப்பதற்கேற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாககவுமே NFGG யின் இவ்விஜயம் அமைந்திருந்தது.

இந்த விஜயத்தில்  NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான நஜா முஹம்மத், சிறாஜ் மஸ்ஹூர், வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி), பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருடன் வட மாகாணசபை உறுப்பினர் சயந்தன், NFGG யின் செயற்குழு உறுப்பினர்களான முகம்மது சறூக், முஹம்மது ஜமீல் மற்றும் முஹம்மது பஸ்மின் ஆகியோர்  சென்றிருந்தனர்.

இவ்விஜயத்தின் முதற்கட்டமாக NFGG குழுவினர் முசலி பிரதேச செயலாளரைச் சந்தித்து இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக முசலி பிரதேச செயலகத்திற்குச் சென்றிருந்தனர். தமது வருகை தொடர்பில் முன்கூட்டியே பிரதேச செயலாளருக்கு அறிவித்து சந்திப்புக்கான நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டே NFGG குழுவினர் அங்கு சென்றிருந்த போதிலும் கூட பிரதேச செயலாளர் அங்கு இருக்கவில்லை. அதன்பின்னர் முசலி பிரதேச காணி விடயங்களோடு தொடர்புபட்ட உத்தியோகத்தர்களுடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் இவ்விடயம் தொடர்பான, போதுமான தகவல்களை வழங்குவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தயங்கியது தெளிவாகத் தெரிந்தது. பின்னர் கிடைத்த தகவல்களின்படி, NFGG பிரதிநிதிகளுடனான சந்திப்பை மேற்கொள்ள வேண்டாம் எனவும், எவ்வித தகவல்களையும் ஆவணங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் மேலிடத்து உத்தரவு வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மறிச்சிக்கட்டி- மரைக்கார்தீவு பகுதிக்கு குழுவினர் சென்றனர்.

இச்சந்திப்பின்போது கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள இம்மக்களுக்குச் சொந்தமான காணிப் பரப்பினை மீட்டெடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பான பல்வறு ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டன. வட மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி சயந்தன் இவ்விடயத்தை சட்டரீதியாக எவ்வாறு முன்னெடுக் வேண்டும் என்ற விரிவான ஆலோசனைகளை பிரதேச முஸ்லிம்  மக்களுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து NFGG குழுவினர் அப்பிரதேச மக்களுடன் இணைந்து அங்கு நடைபெற்ற ஜும்ஆ தொழுகையிலும் கலந்துகொண்டனர். கடற்படையினரிடம் தமது சொந்தக் காணிகளை இழந்து மீளக்குடியேறத் தவிக்கும் ஏறத்தாழ 129 குடும்பங்கள் தற்காலிக குடிசைகளை அமைத்து தங்கியிருக்கும் மரைகார்தீவு பிரதேசப் பொதுநோக்குக் கட்டடத்திலேயே இந்த ஜும்ஆ நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக நேற்றைய தினமும் ஜும்ஆ தொழுகை அங்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடலின்போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், வட மாகாணசபை உறுப்பினர்களான சட்டத்தரணி சயந்தன், அஸ்மின் அய்யூப், மற்றும் சிறாஜ் மஸ்ஹூர் ஆகியோர் உரையாற்றினார். இம்மக்களின் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு எவ்வாறான நடவடிக்கைகள் தம்மால் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும், இதற்கு எவ்வாறான ஒத்துழைப்புக்களை பொதுமக்கள் வழங்கவேண்டும் என்றும் தெளிவான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டன. 

கடந்த ஆறு வார காலத்தில், உணவு, நீர் உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி தாம் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமது சொந்த மண்ணை மீளப்பெறுவதற்காக கஷ்டப்பட்டு வருவதாகவும், NFGG வழங்கிய சில உதவிகளைத் தவிர எந்த உதவிகளையும் எவரும் வழங்கவில்லை என்றும் பொதுமக்கள் தமது விரக்தியினை வெளிப்படுத்தினர். இம்மக்களின் துன்பங்களைப் புரிந்துகொண்ட வட மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி சயந்தன் இம்மக்களுக்கான தனது பங்களிப்பாக தமது சொந்தப்பணத்திலிருந்து ஒரு தொகையினை அவ்விடத்தில் கையளித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. நன்றி சகோதரர்களே.... உங்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள். ஆனால் ஒரு கேள்வி... ஏன் தலைவர் ரவுப் ஹக்கீமையும் கூட்டிக்கொண்டு போகவில்லை. (அவருக்குத்தான் அந்த இடம் இலங்கையில எந்த இடம் என்று தெரியாதே.)

    ReplyDelete
  2. இன்னும் எம் தலைவர் Rasmin and Co. செல்லவில்லையே... அதுதான் வருத்தமா இருக்கு...

    ReplyDelete
  3. கட்சியின் பெயர் : NFGG யா ?? அல்லது PMGG யா ??

    ReplyDelete

Powered by Blogger.