Header Ads



புல்மோட்டை முஸ்லிம்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்காக கள விஜயம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி நேரில் கண்டறிவதற்கான விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை (03.04.2014) அப்பகுதிக்கு மேற்கொண்டனர்.

வட மாகாணத்தில் வாழும் பல்வேறு பிரதேச முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் பொருட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டிருக்கும் மூன்றுநாள் விஜயத்தின் முதற்கட்டமாகவே புல்மோட்டைக்கான இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இச்சந்திப்பில் மீனவர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாக சுமார் 50ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

கொக்கிளாய் ஏரியில் கடந்த மூன்று பரம்பரையாக தாம் மேற்கொண்டு வரும் மீன்பிடித் தொழிலினை செய்ய முடியாத வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலைகளை விபரித்த மீனவர்கள், ஏறத்தாழ கடந்த ஆறு மாத காலமாக தமது வாழ்வாதாரத்தை மாத்திரமன்றி மீன்பிடி உபகரணங்களையும் இழந்துள்ளதாக முறையிட்டனர். 

கொக்கிளாய் ஏரியில் மீன்பிடித் தொழிலினை மேற்கொள்வதற்காக 1981ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாம் உட்பட ஏரியைச் சூழவுள்ள ஐந்து கிராமங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், யுத்த காலங்கள் உள்ளிட்ட கஷ்டமான காலங்களிலும்கூட தாம் இன்று எதிர்கொள்வது போன்ற தொழில் இழப்புக்களைச் சந்திக்கவில்லை என்றும் உறுப்பினர்களிடம் புல்மோட்டை மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.

மேலும் யுத்தத்திற்குப் பின் கொக்கிளாய் ஏரியைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க ஆதரவுடனான குடியேற்றத் திட்டங்களும் தமது வாழ்வாதார இழப்பிற்கான காரணிகளில் ஒன்றாகும் எனக் குறிபிட்ட அவர்கள் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தந்து முக்கிய அரச அதிகாரம் கொண்டவர்களின் அனுசரணையுடன் தொழில் புரியும் மீனவர்களின் கெடுபிடிகளும் மேலாதிக்கமும் தமது வாழ்வாதார இழப்பிற்கான மற்றுமொரு காரணம் எனவும் சுட்டிக்காட்டினர்.

ஏரியில் மீன் பிடிக்கும்போது எவ்வாறான உபகரணங்களை பயன்படுத்த முடியாது என்ற சட்டதிட்டங்களையோ பாரபட்சமான முறையில் அரசாங்க அதிகாரிகளும் பொலிசாரும் பயன்படுத்துவதே தமது வாழ்வாதார இழப்பிற்கு அடிப்படைக் காரணம் எனவும் தெரிவித்ததோடு தமது பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்காக கவனஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியபோதிலும்கூட உரிய தீர்வுகள் இன்னும் கிட்டவில்லை என்றும் தமது விரக்தியினை வெளிப்படுத்தினார்கள். தாம் கவனஈர்ப்புப் போராட்டம் நடத்தியவேளை பல முக்கிய அமைச்சர்கள் தமக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும்கூட கடந்த ஆறு மாத காலமாக தொழில்களை இழந்து கஷ்டப்படும் தமக்கு சிறிய நிவாரணங்களைக் கூட பெற்றுத் தரவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.
  
மீனவர்களுடனான இச்சந்திப்பினைத் தொடர்ந்து மற்றுமொரு சந்திப்பினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவக் குழுவினர் புல்மோட்டை ஹபீர் பள்ளிவாசலில் மேற்கொண்டனர்.

புல்மோட்டைப் பிரதேச ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துஸ் ஸமது அவர்களின் தலைமையில் இடபெற்ற இச்சந்திப்பில் இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பல்லாண்டு காலமாகக் காடு வெட்டி, குடியிருந்து, பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வந்த பலநூறு ஏக்கர் காணிகள் அரச காணிகள் எனக் கூறப்பட்டு தம்மிடமிருந்து பறிக்கப்பட்டு தாம் விரட்டியடிக்கப்பட்டதாகவும், இதில் பெருந்தொகையான ஏக்கர் காணிகள் பாதுக்காப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் முறையிட்டனர். மாத்திரமன்றி அரச தரப்பினர்களால் வழக்குகள் பலவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் எந்தவொரு உயர்மட்ட முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் தலையிட்டு தமக்காகப் பேசி தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் தமது விரக்தியினை வெளிப்படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து புல்மோட்டை பிரதேச மக்களின் கல்வி எழுச்சியை நோக்காக் கொண்டு இயங்கும் புல்மோட்டை கல்வி அபிவிடுத்தி மையம் என்ற அமைப்புடனான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது புல்மோட்டைப் பிரதேச மக்களின் கல்வி அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.

புல்மோட்டை பிரதேசம் கிழக்கு மாகாண சபை எல்லைக்கு உட்பட்ட ஒரு பிரதேசம் என்ற வகையில் கிழக்கு மாகாண சபையினால் இதுவரை தமக்கு எவ்விதமான நிவாரணங்களும் தீர்வுகளும் கிட்டவில்லை என பொதுமக்கள் பரவலாகச் சுட்டிக்காட்டினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நாள் விஜயத்தின் தொடரில் வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் பிரதேசங்களிக்கான விஜயமும் மேற்கொள்ளப்பட்டன.

No comments

Powered by Blogger.