மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த பிரான்க்காய்ஸ் பொசைசை செலேகா முஸ்லிம் போராளிகள் அமைப்பின் துணை கொண்டு கடந்த 2013 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறக்கி மைக்கேல் ஜோடோடிடா ஆதிபர் பதவியைக் கைப்பற்றினார். ஆனால் பின்னாளில் அவரால் போராளிகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் போகவே அவரும் பதவி விலகினார். ஆனால் இந்த அரசியல் நெருக்கடி கிறிஸ்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட ஆண்டி பலேகா என்ற அமைப்பிற்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான இனக்கலவரமாக தற்போது மாறியுள்ளது. பிரெஞ்சுப் படையினருடன் ஐ.நா அமைதிப் படையினரும் ஆப்பிரிக்கப் படையினருடன் இணைந்து அங்கு அமைதியை நிலைநிறுத்த முயற்சி செய்துவரும் போதிலும் தொடரும் இனக்கலவரங்களால் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
வைரச் சுரங்கங்களுக்கும், வர்த்தக சந்தைக்கும் பெயர் பெற்ற போடா பகுதியில் தற்போது நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் பலேகா இயக்கத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து வெளியேறினாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற பயத்தில் உணவுப் பஞ்சத்துக்கு இடையில் தாங்கள் திண்டாடுவதாக அங்கு வாழ்ந்துவரும் ஒரு முஸ்லிம் தையல்காரர் குறிப்பிடுகின்றார். தங்களுக்கு வரும் பொருட்கள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் கிடைப்பவை எல்லாம் அதிக விலையில் இருக்கின்றன என்றும் கூறும் இவர் தாங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்குள் அவர்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேறவேண்டும் என்று குறிப்பிடும் பலேகா போராளிகளின் தலைவர்களில் ஒருவரான கேப்டன் டோபாணி பிர்மின் நீண்டகாலம் இவர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியாது. இவர்களைக் கொல்லுவது எங்கள் உரிமையாகும் என்றும் எச்சரிக்கின்றார். இங்கு தோன்றியுள்ள நெருக்கடியானது முன்னாள் பிரெஞ்சுக் காலனியான இந்நாட்டில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களுடன் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த ஒரு பெருமையான வரலாற்றினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதோடு இனப்படுகொலைகளுக்கான எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது என்பதே உண்மையாகும்.
Post a Comment