கிழக்கில் காணிகள் சுவீகரிப்பு - முஸ்லிம்கள் அநாதரவான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை
கிழக்கிலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல காணிகள், படையினரால் சுவீகரிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
வடக்கில் பொதுமக்களது காணிகளை படையினர் சுவீகரித்து வருவது போல கிழக்கிலும் சுவீகரிக்கும் நிலை தொடர்ந்து வருகின்றது. இது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல. எனவே இவை உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் பல காணிகள் படையினரின் தேவைக்காக சுவீகரிக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குச்சவெளி, புல்மோட்டை, கிண்ணியா என ஆரம்பித்த இச்செயற்பாடு தற்போது பட்டணமும், சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் சின்னம்பிள்ளைச்சேனை வரை விஸ்தரித்துள்ளது. இவற்றில் அதிகமாக காணிகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.
சின்னம்பிள்ளைச்சேனையில் பெருமளவு ஏக்கர் காணிகள் கடற்படைக்காக தற்போது சுவீகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காணிகளுள் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இக்காணிகள் இவர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாது இப்பகுதிக்குள் மூன்று முஸ்லிம் குடும்பத்தினரும் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்காணிகளை சுவீகரிப்பதால் இம்முஸ்லிம்கள் அநாதரவான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்ள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்தான். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதற்காக பொதுமக்களை நடுத்தெருவுக்கு அனுப்பி விட்டு படையினரை போசிக்கும் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. இந்தக் காணிகளெல்லாம் படையினருக்காக சுவீகரிக்கப்படாத நிலையில்தான் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது.
கிழக்கில் படையினரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பல்வேறு வகையான ஒத்துழைப்புக்களை வழங்கினர். இதனால்தான் மிக விரைவாக கிழக்கைப் படையினரால் மீட்க முடிந்தது. எனவே, இவற்றை நினைவில் வைத்து பொதுமக்களது காணிகளை சுவீகரிக்கும் நிலையைக் கைவிட வேண்டும்' என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment