" علم " (இல்ம்) என்ற பதம் எந்த வகையான கல்வியை குறிக்கும்...?
(Ash Sheikh M Z M Shafeek (UK)
மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரிக்கக்கூடாது அனைத்து வகைக் கல்வியும் சரிசமமானவையே என்ற கோஷத்துடன் Modern இஸ்லாமிய வாதிகள் இன்று களத்தில் குதித்துள்ளார்கள். குர்ஆனிலும் சுன்னாஹ்விலும் எங்கெல்லாம் " علم " (இல்ம்) என்ற வாசகம் பயன் படுத்தப் பட்டுள்ளதோ அது எல்லா வகையான அறிவையும் கலைகளையும் குறிக்கும். மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரிக்கக்கூடாது என்பதே அவர்களின் வாதம். அதே நேரம் மார்க்கக் கல்வி மட்டுமே அல்லாஹ்விடம் நன்மையையும் அருளையும் பெற்றுத் தரும். ஏனைய கலைகள் உலகத் தேவைகளுக்கு மாத்திரமே என சில கடும் போக்கு இஸ்லாமிய வாதிகள் கூறி வருகிறார்கள்.
உண்மையில் " علم " (இல்ம்) என்ற வாசகம் நுபுவ்வத்துடைய (நபித்துவ ) அறிவோடு சார்ந்த அறிவை மட்டுமே குறிக்கும் என்பதே சரியான கூற்று.
குர்ஆனில் ஆத்மீகம், மறுமை சார்ந்த விடையங்கள் மாத்திரமின்றி விஞ்ஞானம், புவியியல், வானவியல், மருத்துவம், ஆராய்ச்சி என பல் கலைகள் பற்றியும் கூறப் பட்டுள்ளதாலும் மனித வாழ்க்கைக்கு அவசியம் என்பதாலும் நுபுவ்வத்துடைய அறிவுடன் நேரடியாக சம்பந்தப் படாத கலைகளைக் கற்பது நன்மையைப் பெற்றுத் தரும் ( ஏன் அல்லாஹ்வின் பொருத்தத்தைக் கூட பெற்றுத் தரும்) என்று நிச்சியம் சொல்லலாம். அதற்காக அக் கலைகள் அனைத்தையும் " علم" (இல்ம்) என்ற அடைமொழிக்குள் கொண்டு வருவது பொருத்தமற்றதாகும்
கற்கும், கற்பிக்கும் விதம் ஆனது எந்த வகையிலும் இஸ்லாமிய அகீதாவைத் தகர்ப்பதாகவோ இஸ்லாமிய சட்டவியல், இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரனானதாகவோ அமையாது இருந்தால் மாத்திரம் இக்கலைகளைக் கற்பது அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுத் தரும். துரதிஷ்ட வசமாக முழு உலகிற்கும் பல காலமாக கல்விக் கோற்பாட்டை வரைபவர்களும் அறிமுகப் படுத்துபவர்களும் யூத, மேற்கத்தேய சதி காரர்களாக இருப்பதால் மேற்சொன்ன, சொல்லாத சகல கலைகளுக்குள்ளும் இஸ்லாமிய அகீதாவை தகர்க்கக் கூடிய ஏராளமான கொள்கைகளும் கருத்துக்களும் அடங்கி இருப்பதை தாராளமாகக் காணலாம். கிட்டத் தட்ட அனைத்தும் இயற்கைதான். கடவுள் கோற்பாடு என்பதெல்லாம் வெறும் வியூகமும் கற்பனையுமே என்ற நாஸ்தீக கொள்கையை உலகெங்கும் பரவச் செய்வதே இன்றைய கல்விக் கொள்கையாக இருக்கிறது.
பாடசாலை, கல்விக் கூடம், பல்கலைக் கலக்கம் என சகல கற்பித்தல் சார் இடங்களிலும் மிகக் குறிப்பிட்ட, விழிப்பாகவுள்ள சில முஸ்லிம் ஆசிரியர்கள் தவிரவுள்ள ஏனைய முஸ்லிம், முஸ்லிமல்லாத ஆசிரியர்கள் அனைவரும் இந்த நாஸ்தீகக் கல்விக் கொள்கையை அறிந்தோ அறியாமலோ கற்பித்து வருகிறார்கள். மேற்கத்தேய நாடுகளின் கற்பித்தல் முறைகளில் நாஸ்தீகக் கொள்கை மிகவும் வெளிப்படையாகவே வெளிப் பட்டு வரும் அதே வேலை இஸ்லாமிய, பௌத்த, இந்து மத சார் நாடுகளில் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும் இலகுவில் அறிந்து கொள்ள முடியா வண்ணமுமே சகல கலைகளிலும் நாஸ்தீக முலாம் பூசப் பட்டிருக்கிறது.
நாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருவதையிட்டு சந்தோஷமடைகிறோம். உண்மை தான். அதே நேரம் இந் நாடுகளில் இஸ்லாம் பரவிக் கொண்டிருக்கும் வேகத்தை விட சுமார் பத்து, பதினைந்து மடங்கு அதிகம் நாஸ்திகம் பரவிக் கொண்டிருக்கிறது. (இந் நாடுகளில் கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களை விட்டு விட்டு இஸ்லாத்தை ஏற்போர் மாதத்துக்கு 1000 பேர் என்றால் தம் மதங்களை விட்டு விட்டு நாஸ்தீகக் கொள்கையின் பக்கம் தாவுவோர் மாதத்திற்கு10,000 முதல் 15,000 வரை எனலாம்) மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்ற எமது சகோதரர்களில் (எல்லோரும் அல்ல) பலர் பெயரளவில் வெறும் இஸ்லாம் தாங்கிகளாக இருந்து வருவதோடு இஸ்லாத்திலோ, அல்லாஹ்விலோ எந்த வித நம்பிக்கையும் அற்றவர்களாக செயற் பட்டு வருவதை கண்டு வருகிறோம்.(கடவுள் கொள்கை அற்றிருப்பது மட்டும் நாஸ்திகம் அல்ல. வெறும் பெயரளவில் முஸ்லிமாக இருந்து கொண்டு சிறிதளவு கூட அல்லாஹ்வின் மீதும் இஸ்லாத்தின் மீதும் நம்பிக்கை அற்றிருப்பதும் ஒரு வகை நாஸ்தீகமே)
ஆக இந்தப் பின்னணியிலான இன்றைய உலகக் கல்விக் கோட்பாட்டை எவ்வாறு " علم " (இல்ம்) என்பது ??? " علم " (இல்ம்) என்பது நுபுவ்வத்துடைய அறிவோடு தொடர்பு பட்ட (அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய) அறிவை மட்டுமே குறிக்கும். அதே நேரம் கற்கும், கற்பிக்கும் விதம் ஆனது எந்த வகையிலும் இஸ்லாமிய அகீதாவைத் தகர்ப்பதாகவோ இஸ்லாமிய சட்டவியல், இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரனானதாகவோ அமையாது இருந்தால் மாத்திரம் இக்கலைகளைக் கற்பது ஆகும் என்பதற்கு அப்பால் நிச்சியம் அல்லாஹ்விடம் பெரும் நன்மையையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் மேற் சொன்ன வரையறைக்குள் பல் கலைகளையும் கற்ற அறிஞர்கள் நிச்சயம் எமக்குத் தேவை. அதற்காக இக்கலைகளை நுபுவ்வத்துடைய அறிவு என்றோ அல்லது " علم " (இல்ம்) என்ற வார்த்தை கொண்டோ அழைக்க முடியாது. நன்மை பயக்கும் கலைகள் என்று சொல்லலாம்.
(இதற்கு மாற்றமான கருத்துள்ளவர்கள் தாராளமாக இங்கே அதனைப் பதிவு செய்யலாம். இன்ஷா அல்லாஹ் பதில் வழங்குவோம்)
Post a Comment