Header Ads



அக்கரைப்பற்று - நுறைச்சோலை தென்னந் தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


(ஏ.ஜீ.ஏ.கபூர்)

அக்கரைப்பற்று நுறைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்திற்கருகாமையிலுள்ள தென்னந் தோட்டமொன்றினுள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை (04) புகுந்த காட்டு யானைக் கூட்டமொன்று தென்னந் தோட்டத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் இத் தோட்டப் பிரதேசங்களில் வசித்த மக்களும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்று- 03 ஐச் சேர்ந்த அல்-ஹாஜ் ஆதம்லெவ்வை சம்சுதீன் (நாகூர்த்தம்பி) என்பவரது தோட்டத்தினுள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள், பலா, வாழை,மரவள்ளி, அறுவடைக்குத் தயாராக இருந்த மிளகாய் செடிகள் முதலிய பயிர்களை முறித்தும் , மிதித்தும் நாசம் செய்து பாரிய சேதத்தை உண்டுபண்ணியுள்ளது. இதனால் பல இலட்சம் ருபா நஸ்ட மேற்பட்டுள்ளதாகவும் இது பற்றி அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்; அல்-ஹாஜ் ஆதம்லெவ்வை சம்சுதீன் தெரிவித்தார்.
இதே போன்று கடந்த சில வாரகாலமாக அக்கரைப்பற்று, நுறைச்சோலை, இசங்கணிச்சீமை. ஆலிம் நகர், பள்ளிக்குடியிருப்பு, மொட்டையான்ர வெளி, அட்டாளைச்சேனை தீகவாபி முதலிய கிராமங்களில் குடியிருப்புப் பிரதேசம் மற்றும் தென்னை முதலிய மேட்டு நிலப் பயிர் செய்கைகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை,வாழை,பலா,மிளகாய், மரவள்ளி முதலிய பயிர்களை நாசமாக்கி பாரிய சேதத்தையும், நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் குடியிருப்புப் பிரதேசங்களுக்குள்ளும், பயிர் நிலங்கள் தோட்டங்களுக்குள்ளும் வருவதனைத் தடுத்து நிறுத்தி தமது உயிருக்கும், பயிர் முதலிய சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதைத் தடுக்துப் பாதுகாக்க உதவுமாறும், யானைகளிடமிருந்து மக்களையும், பயிர்களையும் பாதுகாக்க மின்சார வேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, யாணை வெடிகளையும் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.



No comments

Powered by Blogger.