Header Ads



''வீட்டுக்கொரு ஆண் பட்டதாரி என்கின்ற ஓர் இலக்கை நோக்கி சமூகம் பயணிக்க வேண்டியிருக்கின்றது''

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தமட்டில் 2004ம் ஆண்டுக்கு பிற்பாடுதான் ஓரளவு கல்வியின்பால் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள் இதை நாங்கள் ஊக்கப்படுத்துவதன் மூலம் ஓர் தலை சிறந்த முஸ்லிம் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.

காத்தான்குடியில் இடம்பெற்ற  மில்லத் முன்பள்ளி பாலர் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்று மிக நவீனமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டிருக்கின்ற மில்லத் முன்பள்ளி பாலர் பாடசாலை எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியின் பங்குதாரராக மாறுகின்ற ஓர் சந்தர்ப்பமாக இதை நான் கருதுகின்றேன் 'இளமைக்கல்வி சிலையில் எழுத்து' என்று சொல்வது போல எமது சமூகத்தில் உள்ள முன்பள்ளி பாலர்களை சரியாக வழி நாடாத்துவதற்கும், ஒழுக்க சீலர்களாக மாற்றுவதற்கும், மார்க்க பக்தியுள்ளவர்களாக மாற்றுவதற்கும், எதிர்காலத்தில் இந்த சமூகம் சார்ந்த விடயங்களை ஓர் இலட்சியப்பாதையினூடாக  நகர்த்துவதற்குமான ஓர் அடிப்படை கல்வியாகவே முன்பள்ளி பாலர் பாடசாலையினுடைய கல்வி அமைப்பு இருக்க வேண்டும். 

அந்தவகையில் இன்று பெரும்பாலான தாய்மார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதால் உங்களிடம் ஒரு சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். 

இன்று எங்களது கையில் இருக்கின்ற இந்த சின்னஞ்சிறுசுகள் இன்னுமோர் 10 அல்லது 15 வருடங்களில் இந்த சமூகத்தினுடைய தேவைப்பாடுகளையும் இந்த சமூகத்தை வழிநாடாத்துபவர்களுமே ஆவார்கள். 

இப்பொழுது உங்கள் கைகளில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து வயது பாலகர்கள் நீங்கள் கற்றுக் கொடுக்கின்ற, வழி காட்டுகின்ற, செய்யத்தூண்டுகின்ற எல்லாவற்றினையும் உள்வாங்கி அதன்படி அவர்கள் செயற்படுவார்கள். அதனூடாக இன்று உங்களினுடைய குழந்தைகளை யாருக்காவது அறிமுகம் செய்கின்ற பொழுது இன்னாருடைய மகன் அல்லது இன்னாருடைய மகள் என்று அந்த பிள்ளைகள் அறிமுகப்படுத்தப்படுகின்ற அதேவேளையில் அவர்கள் இந்த சமூகத்தின் மதிப்புமிக்கவர்களாகவும், உயர்ந்த கல்வியைப் பெற்றவர்களாகவும், சமூகத்தலைவர்களாகவும் மாறுகின்றபொழுது இன்னாருடைய தாய் தந்தை இவர்கள் என்று உங்களை இந்த சமூகம் அறிமுகப்படுத்தும் அப்பொழுது உங்களுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கின்ற கௌரவம் இன்று நீங்கள் இந்த குழந்தைகளுக்காக படுகின்ற கஷ்டங்களுக்கும், அர்ப்பணிப்புக்களுக்கும் கிடைக்கின்ற சிறந்த கௌரவமாக இருக்கும். 

ஆகவே இன்று வளப்படுத்தக்கூடிய வயதில் இருக்கின்ற அவர்களை வளப்படுத்த தவறுவோமேயானால்  எதிர்காலத்தில் அவர்களுடைய நிலமைகளை பார்த்து மனம் வருந்துவதனூடாகவும் கவலைப்படுவதனூடாகவும்  அவர்களை  இன்று இருக்கின்ற மன நிலைக்கோ அல்லது இந்த வயதிற்கோ மீண்டும் கொண்டு வர முடியாது அவ்வாறு ஏற்பட்டு விடாமல் எல்லாம் வல்ல இறைவன் நமது சமூகத்தை காப்பாற்றுவானாக! 

இன்று உங்களது வறுமை உங்கள் பிள்ளையினுடைய கல்விக்கு தடை விதித்து விடக்கூடாது ஏனென்றால் மிகப்பெரும் உயர் அந்தஸ்துக்களில் உள்ள கல்விமான்கள், சமூகத்தலைவர்களில் 90மூ க்கும்  மேற்பட்டவர்கள் வறுமையின் கோரப்பிடியில் இருந்து கொண்டு போராடி ஜெயித்தவர்கள தான்;.

ஆகவே இன்று உங்களுக்கு இரண்டு ஆடைகள் இருக்குமாக இருந்தால் மூன்றாம் ஆடை ஒன்று வாங்குவதற்காக  செலவு செய்து அதனைப் பெற்று அணிவதனூடாக உங்களுக்கு கிடைக்கின்ற கௌரவத்தை விட உங்களது குழந்தையின் கல்விக்கு அதனை செலவு செய்வதனூடாக நீங்கள் இந்த சமூகத்தில் பெற இருக்கின்ற கௌரவம் உங்களுடைய அந்த மூன்றாவது ஆடை அணிவதன் மூலம் கிடைக்கின்ற கௌரவத்தை விட மிக மிக அதிகமானது. 

வீட்டுக்கொரு ஆண் பட்டதாரி என்கின்ற ஓர் இலக்கை நோக்கி இந்த சமூகம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. எதிர்கால சவால்களை எண்ணிப் பார்க்கின்றபொழுது இந்த சமூகம் இன்னுமோர் சமூகத்திற்கு அடிமையாகி விடுமோ என்று அஞ்சத்தோன்றுகின்றது. 1990லிருந்து 2004வரை உள்ள காலப்பகுதி இந்த சமூகத்திற்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. ஆனால் இந்த சமூகத்தை கல்வி ரீதியாக உயர்த்துவதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுப்பதற்கான எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அதை அக்கால கட்டங்களில் யாரும் முன்னெடுக்காமல் போனதில் இன்று நாங்கள் அரச நிர்வாக ரீதியாக அடக்கப்பட்டு அடிமைகள் போல் நடாத்த முற்படுகின்ற ஓர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.  இதனை நாங்கள் தடுத்து நிறுத்துவதென்பது இன்றிலிருந்தாவது அதற்கான பயணத்தை தொடர வேண்டிய கட்டாயம் எம் அனைவர்கள் மீதும் திணிக்கப்பட்டிருக்கின்றது. இனிமேலாவது இந்த சமூகம் தனக்கென ஓர் இடத்தை பிடிக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் முற்றுமுழுதாக கல்விக்கு பாடுபடவேண்டிய ஓர் சமூகமாக மாற வேண்டும்.

இதற்கு அப்பாலும்  குறுகிய காலத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் இந்த சமூகத்தில் பணத்தினால் அந்தஸ்து பெற வேண்டும் என்று மிக குறுகிய மனதுடன் சிந்தித்து இந்த சமூகம் ஓர் அதள பாதாள குழியில் விழுந்து விடாமல் இருக்க வேண்டும். இதற்கு ஓர் உதாரணம் மியன்மாரில் இருக்கின்ற முஸ்லிம் சமூகம் கல்வியைத்தவற விட்டதால் இனச் சுத்திகரிப்பிற்கு ஆளாகியிருக்கின்றது. அதேபோன்று உக்ரேனுடன் சேர்ந்திருந்த கிரைமியாவில் ஏற்பட்டிருக்கின்ற இனநெறுக்கள் என்பதும் இதற்கு உதாரணமாக சொல்ல முடியும் அதேபோன்றொரு சூழ்நிலை முஸ்லிம் சமூகம் கல்வி வளர்ச்சியிலிருந்து தவறுமாக இருந்தால் எங்களுக்கும் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது எதிர்காலத்தில் இந்நாட்டில் எங்களோடு சேர்ந்து வாழ்கின்ற பெரும்பாண்மை சமூகத்திற்கும் முதலாவது சிறுபாண்மை சமூகத்திற்கும்; சேவகர்களாக மாறவேண்டி ஏற்படும்.

ஓர் சமூகத்தின் உயர்வும் தாழ்வும் அந்த சமூகத்தினுடைய கல்வி வளர்ச்சியிலேயே தங்கியிருக்கின்றது. ஆகவே எங்களுக்கு என்ன சவால்கள் இருந்தாலும் எங்களது பிள்ளைகளை கல்வியின் பால் ஆர்வம் ஊட்டி அதில் அவர்கள் உயர்ந்து செல்வதற்கு நாங்கள் எல்லோரும் முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்.  

2 comments:

  1. Good thinking and a great visionary statement.

    ReplyDelete
  2. ஆமாம் ,
    அப்பொழுதான் திருமண சந்தையில் சோனகச்சாதி -ஆண் மாப்பிள்ளை (மாடு)களுக்கு நல்ல விலைபோகும்

    ReplyDelete

Powered by Blogger.