Header Ads



மீண்டும் ஒரு பல்டியடித்து, அரசுடன் இருப்பதை உறுதிப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

(தந்திமகன்)

மீண்டும் ஒரு பல்டியடித்து அரசுடன் இருப்பதை உறுதிப்படுத்திய முஸ்லிம்காங்கிரஸ் தலைவர்?
அரசியலில் எதுவும் நடக்கலாம். இந்தச் சாக்கடை அரசியலானது நண்பனை பகைவனாக்கும், பகைவனை நண்பனாக்கும். உறவை பிரிக்கும், பிரித்த உறவை இணைக்கும். ஒன்றாக இருந்த ஒரே சகோதர்கள்கூட அரசியலுக்காக பிரிவார்கள். பிரிந்தவர்கள் இணைவர்கள். இதனால்தான் அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று முன்னாள் முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அடிக்கடி மேடைகளில் கூறுவார். இந்த அரசியல் பின்னணியில் வந்தவர்களும் இந்த சாக்கடையில் விழுந்து எழும்புகின்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக டாக்காவில் நடைபெற்ற 20க்கு இருபது உலககிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டியில் இந்திய அணியினரை வீழ்த்திய இலங்கையணியினரை நேரில் சென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வீரர்களை வாழ்த்தியதன் மூலம் தான் ஆளும் அரசுடன்தான் ஒட்டிக் கொண்டிருக்கின்றேன். எத்தனை பள்ளிகள் உடைத்தாலும் பரவாயில்லை நாங்கள் மேடைகளில் பேசியதன்படி எங்களுடைய மேல்மாகாணத்துக்குரிய பங்கு மாகாணசபையில் கிடைத்துவிட்டது. சந்தோஷத்தைப் பகிர்வதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவேளை உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியினரை நேரில் வாழ்த்தியதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இலங்கையரசுடனும், பேரினவாதிகளின் பக்கமும்தான் இருக்கின்றனர் என்பதை இது உணர்த்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டுப்பற்றுமிக்க வீரர்களை வாழ்த்துவதில் எவ்விதமான தப்புமில்லை. ஆனால் எத்தனையோ அரசியல் வாதிகள் இருக்கும்போது இந்த முஸ்லிம்களின் தலைவருக்கு அப்படி என்ன சந்தோசம் வேண்டிக்கிடக்கு. பொதுபலசேனாவின் பொதுப்பிரச்சினை முஸ்லிம்களை விடுவதாக இல்லை. நாட்டில் இனரீதியில் பிரித்தாளும் தந்திரத்தை தன்னகத்தே கொண்டு கொழும்புவாழ் முஸ்லிம்கள் மாத்திரமன்றி சிங்களப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் ஆப்புவைக்கப்போவதாக கூறிவருகின்ற இந்த பேரினவாதிகளின் நிலைமையினை அரசின் தலைவரிடம் கூறி இதற்குரிய தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின்போது ஆளும் அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், ஏன் நாட்டின் ஜனாதிபதியும் வெளியேறுங்கள் என்று நேரடியாக முகாவின் தலைவரிடம் கூறியபின்னரும் அந்த கட்சியினுள் ஒட்டி உறவாடுகின்ற இவர்கள் அனுபவிக்கும் சுகபோக ராஜவாழ்வை விட்டுவிட்டு வெளியேறத்தான் முடியுமா?

கட்சிக்கு என்றொரு கொள்கை உண்டு. அந்தக் கொள்கையில்தான் கட்சி பயணிக்கிறது என்று அடிக்கடி கூறும் முஸ்லிம் கட்சியினர்களுள் வித்தியாசமான போக்கினை கொண்ட கட்சியாக மு.கா கட்சியினைக் கூறலாம். ஏனெனில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தன்னுடைய காலத்தில் நாட்டுப்பற்றுமிக்கவராகவே காணப்பட்டார். ஆளும் அரசுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்திக்காகவும், சமூகத்தின் விடியலுக்காகவம், இனப்பிரச்சினை தீர்வுவிடயத்திலும் பாரிய பங்களிப்பினை மேற்கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் இந்த பேரினவாதிகளின் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் நிலவரம்வேறுவிதமாகக் காணப்படுகின்றன. இனரீதியான பாகுபாடுகள் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களையும், அவர்களது மார்க்க விடயங்களையும், அவர்களது சொத்துக்களை முடக்கி, பொருளாதாரரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு சில பேரினவாதக் குழுக்கள் பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சில முஸ்லிம் கட்சிகளுக்கு எவ்விதமான கேள்வியும் இல்லை. அவர்களை மக்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.  ஆனால் முஸ்லிம்களுக்காக வேலை செய்கின்ற கட்சியினர் செய்கின்ற சிறுதவறும் பாரிய விருட்சமாகவே காட்சியளிக்கும்.

இந்நிலையில் கடந்த தேர்தலின்போது அரசுக்கு எதிரான பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு அரசின் தலையிடிக்குளான இந்த முஸ்லிம் அமைச்சர் தனது நாட்டுப்பற்றினையும், சிங்கள மக்களின்மீதும் எங்களுக்கு எவ்வித கோபதாபமும் இல்லை என்பதை பறைசாட்டுவதற்காக டாக்கா சென்றிருக்கலாம். எனவும் கூறப்படுகின்றது. அப்படியானால் முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்தப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை விலக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அண்மையில்கூட தம்புள்ள பிரதேசத்தில் மீண்டும் முஸ்லிம்கள்மீதும், அவர்களது மார்க்கத்தளம்மீதும் பிரச்சினைகள் வெளிக்கிளம்பின. மாவனல்ல பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பெயரிலான வீதியின் பெயரை மாற்றுகின்ற நடவடிக்கையில் பொதுபலசேனாவினர் பாரிய பிரச்சினைகளை மேற்கொண்டிருந்தனர்.

இன்று நாட்டில் வௌ;வேறு துறைசார்ந்த அடிப்படையில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றம்பெற்றுள்ளன. ஜெனீவாவில் இலங்கைமீது குற்றப்பிரேணை தொடுத்து எதி;ர்வரும் காலங்களில் விசாரணை எனும்பேரில் சர்வதேசம் இலங்கையினுள் நுழைவதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை எதிர்பார்த்திருக்கும் வேளையில் வடக்கு கிழக்கில் சர்வதேசத்தின் மையத்துடன் சில தீர்வுத் திட்டங்களை முன்வைக்கின்றபோது வடக்கு, கிழக்கில் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் கிடைக்கவேண்டிய பங்குகளை பங்கிடுகின்றபோது வாதம்புரிவதற்குரிய தலைமைகள் முடக்கப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தில் பாரிய பின்விளைவினை ஏற்படுத்திவிடலாம். தமிழர் தரப்பினர் சர்வதேசரீதியில் வடக்கு கிழக்கில் தங்களுடைய தாயகத்திற்காக போராட்டம் செய்து பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ள பிராந்தியங்களுக்குள் தமிழ்பேசும் மக்கள் என்கிற வகையில் தன்னுடைய பங்கும் கிடைக்க வேண்டுமாக இருந்தால் கொஞ்சமாவது தமிழர் தரப்பினருடனும் தங்களுடைய உறவுகளை மேற்கொள்ளவேண்டியதும் கட்டாயமானதொரு அம்சமாக இருக்கவேண்டும் என்பதை விரும்புகின்ற முஸ்லிம்களும் அப்பிராந்தியத்தில் இல்லாமலும் இல்லை.

ஆனால் இப்படியான பல்வேறு இடியப்பச்சிக்கல்களுக்குள் மாட்டியுள்ள இலங்கையின் திரிசங்கு நிலைக்குள் மீண்டும் மீண்டும் சென்று முஸ்லிம்களின் வாக்குகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பெற்றுக் கொண்டு வருகின்ற ஒரு கட்சியாக முகா காணப்படுகின்றது. இதனை மக்களும் அறியாமலும் இல்லை. தமது இனரீதியான உணர்வுகளை தனித்தும் காண்பிப்பதற்காக இவ்வாறு வாக்குகளை தனித்துவக் கட்சிக்கு இட்டிருந்தாலும் கொழும்புவாழ் முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கப்படுகின்றதா? என்கிற கேள்விகளும் கொழும்புவாழ் மக்களால் கேட்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் விடை அடுத்த தேர்தல் வரும் வரையிலும் பூச்சியமாகவே இருக்கும்.

கிரிக்கட் விளையாட்டு என்பதும் கட்சியரசியலைப்போல வென்றால் யாருக்கு இலாபம்! கஷ்டப்பட்டு விளையாடியவர்களுக்கு மட்டுமேயாகும். மற்றவர்கள் நித்திரைமுழித்து, உண்ணாமல் பருகாமல் நெருக்கடிப்பட்டு இந்த விளையாட்டின் முடிவில் நமது நாட்டினர் வென்றுவிட்டார்கள் என்பதற்காக மனதில் சந்தோஷப்படலாம். தேவையெனில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியினைத் தெரிவித்திருக்கலாம். இதனால் முஸ்லிம்களுக்கும் இந்த பொதுபலசேனாவுக்கும் இடையிலான பிரச்சினைகள் குறைந்துவிடுமா என்ன? இதனைத் தவிர்ப்பதற்காக அல்லது இவர்களின் அட்டகாசத்தினை முறியடிப்பதற்காக இந்த முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் என்கிறவர்கள் செய்த காரியம்தான் என்ன? ஆளுக்கொரு அறிக்கை, டாக்காவில் முஸ்லிம் தலைவர் நேரில் வாழ்த்து, முஸ்லிம் பிரதேசமெங்கும் இரவு என்றும் பாராமல் மகிழ்ச்சிப் பெருவாகம். இவையெல்லாம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக இஸ்லாமிய பற்றினை ஒருபுறம் வைத்துவிட்டு கும்மாளமிடுவதன் மூலம் தீர்வுகள் கிடைத்துவிடுமா? நடக்கவே நடக்காது என்பதை கடந்தகாலச் சம்பங்கள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே இருக்கின்ற இந்த இளைஞர்களுக்கு கொஞ்சமாவது விளங்கியிருக்க நியாயமில்லை.  

அதுமட்டுமா இன்று அம்பாரை மாவட்டத்திலுள்ள பல ஆயிரம் ஏக்கர் நெற்காணி நெல் சாகுபடி செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதற்குக்கூறப்படுகின்ற காரணம் நீர் பற்றாக்குறை. இருக்கலாம். தற்போது அதிக வெப்பம், மழையில்லை. ஆனால் செய்கை பண்ணப்படுகின்ற கரும்புக்கு நீர் வேண்டும் என்பதற்காக நெல் உற்பத்தியினை இப்பிராந்திய மக்களின் பொருளாதார முதுகெலும்பாகக் காணப்படும் விவசாயத்தை உடைப்பதற்கு விவசாயத் திணைக்களம் உறுதிபூண்டுள்ள நிலையில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய எந்த முஸ்லிம் கட்சியின் தலைவர்கள், மக்களின் வாக்கைப் பெற்று கொழும்பில் சகவாசம் நடாத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் இப்பக்கம் திரும்பித்தான் பார்த்தார்களா? அதுமட்டுமா! இன்று அரிசியின் விலை திடீரென்று விலை அதிகரித்துள்ளது. வயல் அறுவடை செய்து அடுத்த போகத்திற்கான வயல்வேலைகள் இப்போதுதான் நடைபெறுகின்றன. இன்னும் நான்கு மாதங்களின் பின்னர்தான் நெல்லைக் காணமுடியும். அரசியின் விலை இப்போதே ஏறினால் ஏழைமக்கள் என்னதான் செய்வார்கள்.

கிரிக்கட் வீர்களின் வரவுடன் இந்த அரிசியின் விலையும்  அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் சமூகத்தின் பற்றாளர்களாக வலம்வருகின்ற, ஒட்டி உறவாடுகின்ற முஸ்லிம் அமைச்சர்கள், டாக்கா சென்று அரசின் கைப்பாவையாக சென்று வந்த முஸ்லிம் அமைச்சர் இந்த நாட்டின் ஒரு பிரிவினராக காணப்படுகின்ற முஸ்லிம்கள் பற்றியும், அவர்களது பிரச்சினைகள் பற்றியும் எப்போதாவது எடுத்துக் கூறியுள்ளனரா? இதுவெல்லாம் சிறுபிரச்சினை என்று தட்டிக் கழிக்கின்ற ஒருநிலைமைக்கு முஸ்லிம் தலைமைகளை உருவாக்கிவிட்டவர்களின் தப்பா?

அண்மையில் நிகழ்வொன்றில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் அரசுக்கு ஒரு முகத்தையும் மக்களுக்கு இன்னுமொரு முகத்தையும் காட்டும் விலாங்கு மீனின் நிலையில்லாது மக்களின் நலன்களுக்காக ஒரு கொள்கையின் கீழ் செயற்படுமாறு அத்தகைய அசியல் பிரமுவர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வீர வசனங்களோடு  மேடைகளில் காட்சி கொடுத்துவிட்டு, தனித்துவத்துடன் இருக்கிறோம் என்று கூறியவர்கள்  மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைக்கு ஆளாகிவிட்டதை மக்கள் அறிவார்கள் அரசோடு இருக்கிறோம்  அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கிராமங்களில் ஆதரவுப் பேரணி நடத்துகிறவர்கள் நகரத்துச்குச் சென்று அரசை விமர்சித்து கட்சிக்காக வாக்குக் கேட்டு உறுப்பினர்களையும் பெறுகின்றனர். இந்த நயவஞ்ச அரசியல் என்றும் நிலைத்திருக்கும் என்று கனவு காண்கின்றவர்களுக்கு காலம் பதில் சொல்வதற்கு வெகுகாலம் செல்லாது என்றும், தேர்தலுக்காக மாத்திரம் உரிமை பற்றி பேசுகின்றவர்கள் தேர்தல் முடிந்த கையோடு பேசிவற்றையெல்லாம் மறந்து விட்டு வாக்களித்த மக்களின் நலன்களில் அக்கறைகொள்ளாது அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுக்காது தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலைப் புரிந்து வருவதைக் காண்கின்றோம். நாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களாகவே உணராத வரை இவர்கள் தொடர்ந்தும் இந்த ஏமாற்று அரசியலைத் தொடரத்தான் செய்வார்கள். என்று தெரிவித்திருந்தார் ஆரிப் சம்சுதீன்.

இந்தநிலையில் கடந்ததேர்தலின்போது அரசின் எதிராளியாக காட்சிப்படுத்தப்பட்டு தமது சொந்த மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நாடகமாடிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் இன்று டாக்காவின் கிறிக்கட் வீரர்களுக்காக நாமும் உங்களோடுதான் நிற்கிறோம் என்பதை ஜனாதிபதி மட்டுமன்றி நாட்டு மக்களும் அறிந்து கொள்வதற்காக பேரினவாதிகளிடம் மீண்டும் ஒரு பல்டியடித்ததன் மூலம் தன்னுடைய இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத்தான் முகாவின் தலைமையான அதன் தலைவர் நிரூபித்துள்ளார் என்பதைத்தான் உறுதியாகக் கூறமுடியும்.
(தந்திமகன்)

3 comments:

  1. Mr. தந்திமகன் ,
    இலங்கையில் முஸ்லிம்களுக்கு சமகாலத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது, எதிர்காலத்தை யோசித்து, சமூகத்தின் பாதுகாப்பை யோசித்து, சந்தர்ப்பங்களை சாணக்கியமாக பயன்படுத்த வேண்டும், இல்லாவிடில் இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, இருப்பையே கேள்விக்குரியாக்கிவிடுவர்கள் இந்த இனவாதிகள். நான் சொல்லவந்த விடயம் உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.
    (நன்றி)

    ReplyDelete
  2. ஏற்கனவே சவுதி அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் பறிபோய்விட்டது. இப்போது வில்பத்துவில் எமது மக்களின் அவலநிலை. பங்களதேசுக்கு ஓடிப்போன இவருக்கு வில்பத்துவுக்கு போவதற்கு நேரமில்லை. தேர்தலில் வேண்டுமானால் இவர் 'மக்களை ஏமாற்றிவிட்டேன்' என்று நினைக்கலாம். அல்லாஹ் இவருக்கு கொடுத்திருக்கும் அதிகாரம் ஒரு வரையரைக்குள்ளானது என்பது இவர் உணரும் தருனம் வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete
  3. தந்திமகன் என்ன சொல்ல வருகின்றீர்கள் பொதுபலசேனா போன்ரு முஸ்லிம்கலும் வீதியில் இறங்கி போராட வேன்டுமா இலங்கையில் வாழும் முஸ்லிம்களூக்கு முஸ்லிம் காங்ரஸ்தான் முதல் கட்சி என்பது உலக நாடுகளூக்கும்அதே இலங்கையில் வாழும் முஸ்லிம்களூக்கும் தெறீந்திருந்தும் இதை பலவீனபடுத்தி சிருசிரு கட்சிகளாக பிரிந்து இயங்கும் முஸ்லீம் தலைவர்கள் ஓருதடவையாவது ஒன்ரு சேர்ந்து பார்க்கட்டும் அப்போ தெரியும் இப்போ ஆடுபவர்களீன் ஆட்டம்

    ReplyDelete

Powered by Blogger.