இராயப்பு ஜோசப்புடன் இணைந்து செயற்பட, றிசாத் பதியுதீன் தயார்..!
(ஹாசிப் யாஸீன்)
மன்னார் மாவட்ட மக்களின் பொதுவான விடயங்களிலும், அபிவிருத்திப் பணிகளிலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்புடன் இணைந்து செயற்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் அதன் தலைமையும் எப்போதும் தயாராகவுள்ளது என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட வட்டக் கந்தல் ஆலம்குளம் பிரதேச மக்களால் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனுக்கு நேற்று (21) வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தாலும் சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்பதிலும், அதற்கான நிவாரணம் பெற்றுக் கொடுப்பதிலும் எமது கட்சித் தலைமை துரிதமாக செயற்பட்டுள்ளது.
எமது கட்சி கொள்கையுடனும், கோட்பாட்டுடனும் சமூகத்தின் உரிமைகளை முன்நிலைப்படுத்தி செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் எமது கட்சித் தலைமைக்கு எதிராக சிலர் இனச்சாயம் பூசுகின்றனர்.
முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் மன்னார் மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் நிம்மதியான வாழ்க்கை, மீள்குடியேற்றம், அபிவிருத்தி பணிகள் என்பவற்றை எமது கட்சித் தலைமை பல சவால்களுக்கு மத்தியில் தியாகத்துடன் செய்து வருகிறது. இதனை மழுங்கடிப்பதற்காக சிலர் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட மக்களினது எதிர்கால அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றம் என்பன தொடர்பான ஆலோசனைகளையும், முன்மொழிவுகளையும் மன்னார் மறைமாவட்ட ஆயரிடமிருந்து எதிர்பார்ப்பதுடன் அதனை அவருடன் இணைந்து அமுல்படுத்தவும் எமது கட்சித் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தயாராகவுள்ளார் என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சரியாக பயன்படுத்தி எமது சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக நாம் இணைந்து செயற்படவேண்டும். இதற்கான நேசக்கரத்தினை நாம் நீட்டுகிறோம் எனவும் தெரிவித்தார்.
Post a Comment