Header Ads



'முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களை, முஸ்லிம் காங்கிரஸ் காரர்களே தோற்கடிக்கின்றனர்'

(ஏ.எல்.ஜனூவர்)

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் அரசியலுக்காக நமது மக்களை ஒரு போதும் ஏமாற்றவில்லை. மாறாக மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிறாஸ் மீராஷாகிப் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட நிகழ்வு சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.சலீம் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் 

தலைவர் அஷ்ரப் அவர்கள்  நமது மக்கள் தொடர்பாக என்ன கனவுகள் கண்டாரோ அதனை நோக்கிய பயனங்கள் தொடர்கின்றன. குறிப்பாக வட-கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென தலைவர் அஷ்ரப் அவர்கள் கனவு கண்டார். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நமது நாட்டில் வாழும் பல்லின மக்களும் இன உறவுடன் வாழவேண்டுமென கனவு கண்டார். தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் தடம்புரண்ட நடவடிக்கைகளால் நமது மக்களுக்கு நிம்மதியினை பெற்றுக் கொடுக்க முடியாதென உணர்ந்து அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தேசிய காங்கிரஸ் எனும் புதிய கட்சியை உருவாக்கி வடகிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்றும், அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் நிருவாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட வேண்டும்,

கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் வரலாற்று இன ஐக்கியத்துடன் வாழும் நிலைமையை உருவாக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தார். அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாராவது கருத்துக்களைச் சொன்னால்  அடுத்த நாள் காலையில் மின்கம்பங்களில் ஜனாஸாக்களை தொங்கவிடப்பட்ட காலத்தில் துனிச்சலாக தனது உயிரையும் துச்சமென மதித்து நமது மக்களுக்காக குரல் கொடுத்தார். கிழக்கு மாகாணம் தனியாக பிரிந்தது, கிழக்கில் இன உறவு கட்டியெழுப்பப்பட்டு கிழக்கு மாகாண சபை நிதியைக் கொண்டு எல்லா இன மக்களுக்கும் கடந்த 5 வருட காலமாக வரலாற்று அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் தூர நோக்கான சிந்தனையால் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் இல்லாமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த சகோதர கிரமாங்களுக்கும் அரசியல் அதிகாரங்களை வழங்கி நமது அரசியல் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்கின்றார். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தேசிய காங்கிரஸின் வேட்பாளரை நிறுத்தி தேசிய காங்கிரஸின் அம்பாரை மாவட்ட வாக்கு வங்கிகளிலும் ஒரு சுதந்திரமான பாராளுமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யுங்கள் என்று சந்தர்ப்பம் வழங்கினோம். இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது வரலாற்று தவறு செய்தால் அடுத்து வரும் 6 ஆண்டுகளுக்கு இந்த வரலாற்று தவறின் பிரதிபலனை சாய்ந்தமருது மக்கள் சிந்திக்க வேண்டிவரும் எனக் கூறினோம். குறைந்தளவிலான வாக்கு வித்தியாசத்தினால் கல்முனைத் தொகுதிக்கு தலைமை கொடுத்து அரசியல் அதிகாரத்தினை செய்யக் கூடிய அரசியல் அடையாளத்தினை இல்லாமல் செய்து விட்டு இன்னும் ஒரு பாராளுமன்ற தேர்தல் வரும் வரை அதனை எண்ணிக் கவலைப்பட்டவர்களாக நமது சாய்ந்தமருது மக்கள் உள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸில் உள்ள பலபிரமுகர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் முரன்பட்டதுடன்  நாங்கள் தேசிய காங்கிரஸில் இணையப் போகிறோம், அமைச்சர் அதாஉல்லாவுடன் இணையப்போகிறோம் என்று ஒரு செய்தியை அனுப்பியவுடன் அவர்களை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உடனடியாக அழைத்து உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு இரண்டு மடங்காக ஏதாவது வழங்கும் போது மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களாக தங்களை அடையாளம் காட்டிய நிகழ்வுகள் சில காலங்கள் நடைபெற்று வந்தன.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர்; அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தேசிய காங்கிரஸ் ஊடாக பல முக்கியஸ்தர்களை உருவாக்கி நமது மக்களையும், நாட்டையும் நேசித்து எல்லா இண மக்களோடும் நிரந்தரமான இன உறவுடன் செயற்படுபவர்களை உருவாக்கியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கட்சியில் வளர்ந்து வருபவர்களை கழுத்தறுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிறாஸ் மீராஷாகிப் அவர்கள் கல்முனை மேயராக பதவி வகித்து தனது பதவி ஊடாக கல்முனைத் தொகுதிக்கு பெரும் பணி புரிந்தவர். அவர் வளர்ந்து வரும் போது இப்போது கழுத்தறுக்கப்பட்டிருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், மாகாணசபைத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் காரர்களே தோற்கடித்து ஓரம் கட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக மேயர் சிறாஸ் மீராஷாகிப் தேசிய காங்கிரஸில் இணையப் போகிறார் என்று பல முக்கியஸ்தர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் அவர்களிடம் கூறினேன் மேயர் சிறாஸ் மீராஷாகிப் அவர்கள் முதலில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலக முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்னர் நமது நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன இவைகளில் எந்தக் கட்சியில் அவர் இணைவதென்று முடிவு எடுக்க வேண்டும். இந்த தெரிவில் தேசிய காங்கிரஸில் இணைவதென்று முடிவு எடுத்தால் எங்களோடு இணையுங்கள் நமது மக்களின்

நலனுக்காக முடிந்தளவு முயற்சிகள் செய்து நமக்கான எல்லாவற்றையும் நாம் பெற்றுக் கொள்ளலாம் என ஆலோசனை கூறினேன். உண்மையில் நமது மக்கள்  தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவின் யதார்த்தமான கொள்கைகளை இப்போதுதான் உணர்ந்து வருகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் எமக்கு வாக்களித்த மக்கள், வாக்களிக்காத பிரதேசங்கள், அரசியல் அதிகாரமற்ற பிரதேசங்களை அடையாளம் கண்டு அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் எப்போதும் நமது கல்முனைத் தொகுதி மக்கள் மீது அன்பு வைத்திருப்பவர.; குறிப்பாக
சாய்ந்தமருது மக்கள் மீது எப்போதும் அன்பு காட்டுபவர். பல ஆண்டுகளுக்கு முன் தலைவர் அவர்கள் என்னிடம் சாய்ந்தமருது பல தடவைகள் நமது கட்சியுடன் வருகிறது பின்னர் மீண்டும் போகிறது என்றோ ஒரு நாள் உண்மையை இம் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று கூறினார்.

இறைவனின் உதவியால் மேயர் சிறாஸ் மீராஷாகிப் அவர்களின் தலைமையில் ஒன்று கூடி நமது மக்களின் அரசியல் அதிகாரத்தை அடையாளப்படுத்தி தேசிய காங்கிரஸில் இணைந்திருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைவதுடன் உங்களின் நியாயமான கோரிக்கைகளை எமது தலைவருடன் இணைந்து செயற்படுத்துவோம். தேசிய காங்கிரஸின் வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்பதில்லை. தலைவர் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்கள் யாரென்று பாராமல் இலக்கங்களுக்கு மாத்திரம் வாக்களிக்கும் பண்பு நமது தேசிய காங்கிரஸில்; மட்டும்தான் உண்டு எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.