மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், ஆட்சியை வேண்டி நிற்கும் தேர்தல் முடிவுகள்
(நவாஸ் சௌபி)
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மஹிந்த அரசாங்கத்தின் ஸ்த்திரத்தன்மையை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு முடிவாக அமைந்திருக்கிறது.
மேற்படி தேர்தல் நடைபெற்ற இரு மாகாணங்களும் மஹிந்தவின் அரசியலுக்கும் அரசாங்கத்திற்கும் மிகவும் முக்கியமான இரு மாகாணங்களாகும். மஹிந்தவைப் பொறுத்தவரை தென் மாகாணம் என்பது அவரது அரசியலுக்கு அடிப்படையான ஒரு மாகாணம், மேல் மாகாணம் என்பது அவரது ஆட்சிக்கு ஆதரவான ஒரு மாகாணம். இதன்படி இவ்விரு மாகாணங்களையும் மஹிந்தவுக்கு இரு கண்களாக உள்ள மாகாணங்களாகக் குறிப்பிடலாம்.
எனவே இவ்விரு மாகாணங்களின் தேர்தல் முடிவுகளைக் கொண்டு மஹிந்த அரசாங்கத்தின் ஸ்த்திரத் தன்மையை அல்லது அவரது ஆட்சியின் பின்னடைவை எதிர்வு கூர்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாகவும் கருத்தாகவும் அமைகிறது.
இந்நிலையில் இவ்விரு மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்பட்ட எதிர்கட்சிகளினதும் அரசியல் விமர்சகர்களினதும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான டலஸ் அழகப் பெரும, சுசில் பிரேமஜயந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.
அவர்களது கருத்துக்களின்படி நடைபெற்ற இத் தேர்தல் முடிவுகளை, யுத்தம் உச்ச நிலையில் இருந்த ஒரு அசாதாரண நிலையில் நடைபெற்ற 2009 இன் மாகாணசபைத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமற்றது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள் குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களின் தீர்ப்பாக அமைந்தாலும் அம்முடிவுகள் மக்களால் எடுக்கப்பட்ட தற்காலிகமான ஒரு முடிவாக அமைவதில்லை. மாறாக அது நீடித்த ஒரு ஆட்சியை தொடர்ச்சியாக அவதானித்ததன் விளைவாக ஏற்படும் அபிப்பராயத்தின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவும் அமைவதுண்டு. அதனுள் மக்களின் ஒன்றுதிரண்ட அபிப்பிராய வெளிப்பாட்டின் ஆதரவு அல்லது எதிர்ப்பு புலப்படும்.
இக்கருத்துக்கமைய, நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மகாணசபை தேர்தல்களில் மக்கள் அளித்த வாக்குகளை மக்களின் தற்காலிகமான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தும் வாக்குகளாக நாம் நோக்க முடியாது. மாறாக அதனை மஹிந்த அரசாங்கத்தின் இதுவரையான சுமார் 10 வருடகால ஆட்சியை அவதானித்ததன் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட அபிப்பிராயத்தின் முடிவை வெளிப்படுத்தும் வாக்குகள் என்றும் நாம் நோக்க முடியும்.
எனவே இத் தேர்தல் மூலம் மக்களின் அபிப்பிராயங்களும் மனநிலைகளும் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ற முடிவைத்தான் அராசங்கம் அவதானிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு ஆட்சியை மக்கள் உருவாக்க முயற்சிக்கும் ஆரம்ப கட்டத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதுதான் இத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் செய்தியாகும்.
இதனூடாக தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெற்ற 2009 மாகாணசபைத் தேர்தல், 2010 ஜனாதிபதித் தேர்தல். 2014 மாகாணசபைத் தேர்தல் ஆகிய அண்மித்த மூன்று தேர்தல் முடிவுகளுக்கும் அமைய மஹிந்த அரசாங்கத்தின் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளை மாகாண ரீதியாக நோக்கும் போது அரசாங்கத்தின் மீது மக்கள் அபிப்பிராயம் குறைந்துகொண்டு வருவதனை அவதானிக்கலாம். இதனை பின்வரும் புள்ளிவிபரம் காட்டுகிறது.
மேற்படி தேர்தல்களின் வாக்குகளை விகிதாசாரப்படியே நோக்க வேண்டும். அதன்படி 2009 இல் தென் மாகாணத்தில் 67.88 வீதமாக இருந்த வாக்குகள் 2014 இல் 58.06 வீதமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. அவ்வாறு மேல் மாகாணத்தில் 64.73 வீதமாக இருந்த வாக்குகள் 53.35 வீதமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. சுமார் 10 சதவீத வாக்குளை அரசாங்கம் இழந்திருக்கிறது. ஆனாலும் அரசாங்கத்தின் வாக்கு வீதமானது இதுவரையான தேர்தல்களின் அடிப்படையில் 50 சதவீதத்திற்கும் குறைவானதாக அமையவில்லை.
இருந்தபோதிலும் கடந்த 3 தேர்தல்களிலும் வீழ்ச்சிப் போக்கைக் காட்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களின் மனநிலைகளும் அபிப்பிராயங்களும் அவ்வாறே தொடரும் நிலையில் எதிர்வருகின்ற 2016 இல் நடைபெறுகின்ற தேர்தலில் அரசாங்க கட்சியானது 40 - 43 சதவீதமான வாக்குகளைத்தான் பெறும் என்ற எதிர்வுகூறலையும் இதன் மூலம் முன்வைக்கலாம்.
அரசாங்கத்தின் மீதான மக்கள் அபிப்பிராயங்கள் இவ்வாறு வீழ்ச்சிகண்டு செல்லும் நிலைக்கான காரணங்கள் பற்றி ஆராயும் போது அவற்றில் பின்வருவனவற்றை முக்கியமானவைகளாக வரிசைப்படுத்தலாம்.
· நீண்டகாலம் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஒன்றின் மீது மக்களுக்கு இயல்பாக ஏற்படுகின்ற தெவிட்டல் அல்லது சலிப்புத் தன்மை :
1977 முதல் 17 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நிலைத்திருந்த மக்கள் அதிலிருந்து விலகி 1994 இல் சந்திரிக்காவின் அராசங்கத்தை உருவாக்கினார்கள் அதிலிருந்து இன்றுவரையிலான மஹிந்தவின் ஆட்சி உள்ளடங்களாக 20 வருடகால அதிகப்படியான ஆட்சியினை இவ்வரசாங்கம் ஏற்றிருக்கிறது.
எனவே அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற மக்களின் இயல்பான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி அதற்கான ஆரம்ப கட்டத்தினை இத்தேர்தல் மூலம் முன்னெடுக்க அரசுக்கு எதிராக குறிப்பிட்ட ஒரு தரப்பினர் வாக்களித்துள்ளனர்.
· யுத்தம் முடிவுபெற்று விடுதலை பெற்ற பிறகும் மக்கள் நெருக்கடியான வாழ்க்கையை அனுபவிக்கும் இக்காலகட்டத்தில் விலை ஏற்றம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அடிப்படைச் செலவுகள் அதிகரிப்பு, சம்பள உயர்வுகள் இல்லாமை, போன்ற காரணங்களினால் அரசாங்கத்தின் மீது எதிர்ப்புக்கொண்டு தங்களின் அபிப்பிராயங்களை அரசுக்கு எதிராக வெளிப்படுத்தி ஒரு தரப்பினர் வாக்களித்துள்ளனர்.
· அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுவருகின்ற சிறுபான்மைச் சமூகங்கள் மீதான குறிப்பாக முஸ்லிம் சமூகங்கள் மீதான ஹலால், ஹபாய் பிரச்சினைகள், பள்ளிகள் மீதான தாக்குதல்கள், மாடு அறுத்தல் போன்ற விடயங்களில் ஏற்படுத்திய தடைகள் என்று பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புகள் நடத்திய அடக்குமுறைகள், வன்முறைகள் தொடர்பாக அரசாங்கம் பாராமுகமாக இருந்தமை அரசாங்கத்தின் மீது முஸ்லிம் சமூகம் கொண்டிருந்த நம்பிக்கைய அடியோடு குழிதோன்றிப் புதைத்துவிட்டது. இதனை அரசுக்கு உணர்த்தும் வகையில் மேல்மாகாணத்தில் அரசின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களை மக்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யாது நிரூபித்திருக்கிறார்கள். அதுபோன்று காலித் தொகுதியிலும் அரசை தோல்வியடையச் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம்கள் மீதான பௌத்த தீவிரவாத செயற்பாடுகள் முஸ்லிம்களை இத் தேர்தல்களில் அரசுக்கு எதிராக வாக்களிக்கச் செய்திருக்கிறது என்பதனை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன அவர்களும் ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்திருக்கிறார். எனவே முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாத செயற்பாடுகள் இந்த நாட்டில் தொடருமாயின் அது முஸ்லிம் மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கான எதிர்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்ற செய்தியையும் இத் தேர்தல் முடிவு கொண்டுள்ளது.
எதிர்காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் வடக்கு கிழக்கு உட்பட ஏனைய மாகாணங்களிலும்; அரசுடன் இணைந்துவருகின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அராசங்க கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்கைளையும் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கலாம் என்ற ஐயத்தையும் இது எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
· இன்றைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் அதிகாரமற்றவர்களாக மக்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களாக வேலை வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளைக்கூட முறையாக முன்னெடுக்க முடியாதவர்களாக காணப்படுகின்றமை அரசாங்கத்தின் பின்னடைவுக்கு ஒரு காரணம்.
பொருளாதார அமைச்சின் ஊடாகவே நாட்;டின் 90 சதவீதமான அபிவிருத்திப் பணிகளுக்குமான நிதிகள் பகிர்ந்தளிக்கப்படகின்றன. அமைச்சுகளின் கீழ் உள்ள நிதித் திணைக்களங்களில் 80 சதவீதமானவை பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன நிர்வாக பணிகளை மட்டுமே இன்றுள்ள அமைச்சுகள் மேற்கொள்கின்றன. நாட்டின் நிதி தொடர்பான பல்வேறு பணிகளும் பொருளாதார அமைச்சுதான் முன்னெடுக்கின்றது.
எனவே அதிகாரமும் அபிவிருத்தியும் மேற்கொள்வதற்கு பலமில்லாத அமைச்சர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அமைச்சர்கள் கைஏந்தி நிற்கும் ஒரு அரசாங்கத்தில் மக்கள் எதனை சாதிக்க முடியும் என்ற விரக்தி நிலை இன்று மக்களை அரசுக்கு எதிராக வாக்களிக்கச் செய்திருக்கிறது.
· எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில் எந்தப் பயனும் கிடையாது என்று வாக்களியாது வெறுப்புடன் நடந்துகொள்ளும் ஒரு தரப்பினர் வழமைபோன்று இத் தேர்தலிலும் ஆதரவும் இல்லாது எதிர்ப்புமில்லாது வெறுப்பை மட்டும் வெளிப்படுத்தி வாக்களியாதிருந்திருக்கின்றனர். எந்தக் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளாத இம்மக்களின் மனநிலைகள் குறித்து அரசியல்வாதிகள் கருத்தில்கொள்ள வேண்டும் குறிப்பாக அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும்.
ஏனெனில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு மாகாணங்களிலும் வாக்களியாதவர்களின் தொகை 11 60 519 ஆக இருந்த போதிலும் இத்தொகை நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் 19 76 816 ஆக அதிகரித்திருக்கின்றது.
இவ்வாறான பல்வேறு அவதானங்களின் படி அரசாங்கத்தின் வாக்குப் பலம் வீழ்ச்சி கண்டுவந்தாலும் அதற்கான எதிர்கட்சி பலம் என்பது இன்னும் முறையாக எழுந்து நிற்கவில்லை என்றே கூறவேண்டியிருக்கின்றது. எனவே ஆட்சி மாற்றத்திற்கான அவாவுடன் காணப்படுகின்ற எதிர்கட்சிகள் எதிர்வருகின்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அரசை வீழ்த்துவதற்கான சக்திமிக்க ஓர் எதிர்கட்சி அரசியலைத் தோற்றுவிக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இதில் அரசாங்கம் ஆட்சியைத் தக்க வைக்க தங்கள் நடைமுறைகளை மாற்றியமைக்குமா? அல்லது எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க பலமான ஒரு பொதுத் தலைமைத்துவத்தை உருவாக்குமா? இரண்டுக்கும் சாத்தியமான அரசியல் நிலவரம் காணப்படுகிறது. மக்களின் கால்களை உதையாமல் கோள்களை யார் அடிப்பாரோ?
Post a Comment