Header Ads



சிறுபான்மை அரசியல் தலைமைகளை சிந்திக்க வைத்த தேர்தல் முடிவுகள்...!

(சத்தார் எம் ஜாவித்)  

நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்கள் பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக இருந்தாலும் சிறுபான்மை மக்களின் கட்சிகளைப் பொருத்தவரையில் பின்னடைவையே காட்டியுள்ளது.

சிறுபான்மைக் கட்சிகள் தமக்குத்தமக்கு அதிக ஆசணங்களைப் பெற்றுக் கொள்ளவதற்கு தமக்கிடையே போட்டிபோட்டு தனித்தனியாக தேர்தல்களில் களமிறங்குகின்றமையே பின்னடைவிற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.
தமது விதண்டாவாதங்களை களைந்தெறிந்து விட்டு சரியான முறையில் சிந்தித்து தூர நோக்குடனான செயற்பாட்டை சிறுபான்மைக் கட்சிகள் மேற் கொண்டிருக்குமானால் இன்று பெரும்பான்மைக் கட்சிகளுக்கு தேவைப்பாடுடைய கட்சிகளாகவும்  அரசின் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வதற்கும் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் ஒரு புதுயுகத்தை தோற்றுவித்திருக்கக் கூடிய கட்சிகளாக மாறியிருக்கும் ஆனால் இன்று ஒற்றுமையற்ற தன்மைகளின் வெளிப்பாடு சிறுபான்மைக் கட்சிகளை பெரும்பான்மைக் கட்சிகள் ஓரங்கட்டுவதற்கு வழிவகுத்து விட்டது என்றே கூறலாம்.

தமிழ் கட்சிகளை எடுத்துக் கொண்டாலோ அல்லது முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டாலோ அவற்றைப் பார்க்கும்போது அவை ஒவ்வொன்றும் பிளவுபட்டு சிறுசிறு கட்சிகளாகவும் சுயற்சைக் குழுக்களாகவும் பிரிந்து தனித்தனியாக களமிறங்கியமை வரலாற்றில் சிறுபான்மை மக்களுக்கே பாரிய பின்னடைவுகளையும், தோல்விகளையும் எதிர் கொள்ளும் நிலைமைகளை ஏற்படுத்திவிட்டது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியுமே இதுவரை காலமும் பெரும்பான்மைக் கட்சிகளாக திகழ்ந்து வந்தன எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நிலமைகள் தற்போது சற்று வீழ்ச்சிப் போக்கை நோக்கிய நகர்வையும் மேலும் சில பெரும்பான்மையினரின் சிறுகட்சிகள் முன்னேற்றத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டு செல்லும் தற்போதைய நிலையில் என்னதான் தலை கீழாக நின்றாலும் சிறுபான்மை மக்களின் கட்சிகள் அவற்றை விஞ்சிவிட முடியாது என்றாலும் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தல்களில் போட்டியிடுமானால் அரசின் பங்காளிகளாக பெரும்பான்மைக் கட்சிகளின் ஆட்சிக்கு முக்கிய கர்த்தாக்களாகவும் ஆட்சியைத் தீர்மாணிக்கும் கட்சிகளாகவும் ஆகுவதற்கும் கூட வாய்ப்புக்கள் தாராளமாகவே காணப்படுகின்றன.

கடந்த கால அரசியல் வரலாறுகளை நோக்கும்போது பல அரசாங்கங்களுக்கு ஆட்சியைத் தீர்மாணிக்கும் முக்கிய கட்சிகளாக சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சில கட்சிகள் விளங்கியிருக்கின்றன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கிய காலஞ்சென்ற மர்ஹூம் அஷ்ரப் அவரது காலத்தில் தமது கட்சியின் வெற்றியின் மூலம் ஆட்சியைத் தீர்மாணிக்கும் பங்காளிக் கட்சிகளாக மாறி சிறுபான்மை மக்களுக்குரிய உரிமைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளமை தற்போது சிதறுண்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு நல்லதோர் படிப்பினையாகும்.

கௌரவங்களுக்காகவும், அரசியல் செல்வாக்குகளுக்காகவும் சிறுபான்மைக் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தல்களில் களமிங்கும் செயற்பாடுகள் தோல்வியின் ஆரம்பங்களேயன்றி வெற்றிக்கான படிகளல்ல என்பதனையே புலப்படுத்துகின்றது. இதனையே மாகாண சபைத் தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ன.

மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து களமிறங்கிய முஸ்லிம் வேட்பாளர்கள் கூட வெற்றியடையவில்லை மாறாக பாரிய தோல்லியைத் தழுவிய நிலை முழு முஸ்லிம்களுக்கும் அரசியல் விடயங்களில் பின்னடைவின் விம்பங்களாகவே தோற்றம் பெற்று வருகின்றன. முஸ்லிம்கள் பல கூறுகளாக பிரியும்போது எந்தக் கட்சியில் முஸ்லிம்கள் கேட்டலும் வெற்றியைக் கண்டு கொள்ள முடியாது என்பதனை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த தேர்தலை எடுத்து நோக்கும்போது சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தோல்வியின் ஆரம்பங்களாகவே நோக்கப்படுகின்றது. சிறுபான்மை மக்கள் மீதான இனவாதிகளின்  தற்கால தீய செயற்பாடுகளுக்கு பாடம் புகட்டுவதற்கான அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு களமாகவே தேர்தலை பயன்படுத்த சிறுபான்மை மக்கள் சிந்திக்க வேண்டும் அதற்கு சிறுபான்மை அரசியல் தலைமைகள் மக்களையும் தம்பால் ஒற்றுமையாக வழி நடாத்துவார்களானால்  அது ஒரு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும் விடயமாக அமையலாம்.

இலங்கையில் அரசியல் ஆதரவுடன் இனவாத செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படும் இத்தருணத்தில் அதனை மேலும் வழுவூட்டும் கைங்கரியங்களுக்கு கடந்த தேர்தலில் ஒரு சில இனவாதிகள் தேர்தலில் களமிறங்கி தோல்வி கண்டதும் மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை என்பதனையே வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக பொதுபலசேனா களமிறக்கிய இனவாதக் கும்பல்கள் படுதோல்வி கண்டமை அவர்களின் செயற்பாடுகளுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பாகவே அமைந்துவிட்டது. அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் மூன்று பேரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் ஒருவருமாக மேல்மாகாணத்தில் மொத்தமாக ஆறு முஸ்லிம்களே  தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனினும் ஆளுங் கட்சியில் எந்தெவாரு முஸ்லிம் வேட்பாளர்களும் தெரிவு செய்யப்படாதுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இம்முறையே ஆளுங்கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் பின்னடைவைக் கண்டமை அரசின் மீதான உறவில் இருந்து முஸ்லிம்கள் விலகும் நிலைமைகளைக் காட்டி நிற்கின்றன. இதற்கு மற்மொரு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் அடாவடித்தனங்களும் அது தொடர்பாக அரசு முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டவில்லை அல்லது கவனமெடுக்கவில்லை என்பவற்றின் விளைவுகளும் மற்றுமொரு    காரணமாக அமைந்திருக்கலாம் என்பதனையே தேர்தல் முடிவுகள் புலப்படுத்துவதாக அமைகின்றது.

இவ்வாறு முஸ்லிம்கள் மீதான இனவாதச் செயற்பாடுகள் ஆளுங்கட்சியில் உள்ள சில உறுப்பினர்களும், அமைச்சர்களும் விட்டபாடில்லை தொடர்ந்தும் தமது இனவாதத்தைக் கக்கிக் கொண்டு இலங்கையில் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதற்கான வழிகளையே வகுத்து வருவதை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது.

குறிப்பாக பாட்டளி சம்பிக்க ரணவக்க, அத்ரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்தும் முஸ்லிம்களை பழி வாங்கும் செயற்பாடுகளையே கொண்டுள்ளனர் இதற்கு நல்ல உதாரணம் கடந்த முதலாம் திகதி பாராளு மன்றத்தில் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்திற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர், இந்து, கிறிஸ்தவ, பௌத்த முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அத்துரலியரத்ன தேரர் பௌத்த சாசன மதவிவகார அமைச்சின் செயலாளரிடம் பௌத்த சாசன அமைச்சின் சுற்று நிறுபத்திற்கு அமைய அனுமதி பெறப்படாத பள்ளி வாசல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் இந்த சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தனது இனவாதச் செயற்பாட்டை பகிரங்கமாகவே கொண்டு வந்துள்ளார். அதற்கு ஹூனைஸ் எம்.பி  இன்று நாட்டில் எத்தனையோ அனாச்சாரங்கள் நிகழ்கின்றன மதஸ் தாபனங்களுக்கருகில் மதுபானச் சாலைகள், விபச்சார விடுதிகள், சூதாட்ட அமைப்புகள் போன்றன அமைக்கப் பட்டு மத வழிபாடுகளுக்கு இடைஞ்சல்கள் செய்யப்படுகின்றன இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் தேரர் எடுக்க வேண்டும் என தேரருக்கு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும்  பாராளுமன்ற உறுப்பினர்  தம்புள்ளை பள்ளிவாசல்களைத் தாக்கியது, மகியங்கனை பள்ளிவாசலிற்குள் பன்றியிரைச்சியைப் வீசியெறிந்தது, கிரேன்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல்கள் இவற்றையெல்லாம் செய்தது முஸ்லிம்களா? என்று கேள்வியை எழுப்பி முஸ்லிம்கள் மீது தேவையற்ற விதத்தில் உங்களைப் போன்றவர்கள் செயற்படும் விதத்தால் மக்கள் இன்று பிரச்சினையிலும் பாரியதொரு அபாய நிலைகளுக்குள்ளும்  இருப்பதைச் சுட்டிக்காட்டி தேரரின் வாயை அடைத்துள்ளார்.

மத வழிபாட்டுத் தளம் எந்த சமயத்திற்குச் சொந்தமானது என்றாலும் அதனை கௌரவப் படுத்துவதும், பாதுகாப்பதும் பெறுப்பு வாய்ந்தவர்களின் பொறுப்பு. ஆனால் இன்று சில  இனவாத குழுக்கள் இதனை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள். சட்டத்தை கையில் எடுத்து தான் விரும்பிய படி செயற்பட எவருக்கும் அனுமதியளிக்க முடியாது  அது எந்த தரப்பினராக இருந்தலும் சரி பேசித் தீர்க்கவேண்டிய விடயமாக இருக்கவேண்டும்.

இன்று பெரும்பான்மை என்ற அகர்வத்தால் நினைத்ததையெல்லாம் செய்துவிடலாம் யாரும் நம்மைக் கேட்கமுடியாது என்ற நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பான செயற்பாடுகளில் இனவாதிகள் செல்வது உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்புக்களைச் சந்திக்கவேண்டியது மட்டுமல்லாது இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளும் கூட இல்லாமல் போவதற்கான நிலைமைகளை உருவாக்கி ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுமளவிற்கு இனவாதிகளின் செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

இனவாதிகளுக்கு இன்று தேர்தலில் கிடைத்த தோல்வியானது இனிவரும் காலங்களில்  அதைவிடவும் மோசமானதொரு தோல்வியையே தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசாங்கம் தொடர்ந்தும் இனவாதிகளுக்கு பச்சைக்கொடி காட்டி முஸ்லிம்களை முடக்க நினைத்தால் இதைவிட பாரிய தேர்தல் தோல்விகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

கடந்த தேர்தல் முடிவுகள் கூட சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றினைய வேண்டும் என்பதனையே காட்டி நிற்கின்றது காரணம் பெரும்பான்மையின் அடக்கு முறையாட்சியின் மூலம் இந்த நாட்டில் சிறுபான்மைகள் அடிமைப்படுத்தப்பட்டு பர்மாவில் இடம்பெற்றமை போன்தொரு நாடகத்தை ஏற்படுத்தவே பொதபல சேனா உள்ளிட்ட தீவிரவாத என்னங் கொண்டவர்கள் திட்டங்களைத் தீட்டிவருவதும் பொதுபலவின் செயலாளர் பர்மாவிற்குச் சென்று  உலகின் பயங்கரவாத முகத்தைச் சந்தித்து வந்தமையும் (விராது தேரரை) இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை இல்லாதொழிப்பதற்கான ஒரு கட்டமாகவே நோக்கப்படுகின்றது.

ஞானசார தேரர் பர்மாவிற்கு சென்று வந்ததன் அடுத்த கட்ட நிகழ்வே மாவனல்லையில் முஸ்லிம்களின் வீதியின் பெயர்மாற்றமாகும் இவ்வாறு ஒவ்வொன்றையும் நோக்கும்போது இவர்கள் அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கைங்கரிய விளையாட்டாகவே நோக்கப்படுகின்றது மட்டுமல்லாது உண்மையும் அதுவாகத்தான் உள்ளதை ஊகிக்க முடிகின்றது.

மேற்படி நிலைகைளை நோக்கும்போது என்னதான் தலைகீழாக நின்றாலும் ஆளுங்கட்சியில் முஸ்லிம்கள் கைப்பொம்மைகளாகவும், வாய் கட்டப்பட்டவர்களாகவும் அவர்கள் வழங்கும் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளே தொடர்ந்து காணப்படும்.

சிறுபான்மையினரான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இனியும் சுகபோகங்களையும். வசதிவாய்ப்புக்களையும் விட்டுவிட்டு அழியப்போகும் நிலையில் இருந்து காப்பாற்ற ஒற்றுமைப்பட வேண்டியதை தேர்தல் முடிவுகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியே வந்து கொண்டிருக்கின்றன. எனவே சமய விளிப்புணர்வும், முஸ்லிம் சமுகத்தின் நலனுக்கான தூர நோக்குடனான மக்கள் அரவனைப்புச் செயற்பாடுகளும் திட்மிடப்பட்டு ஒரு குடையின் கீழ் ஒன்று சேராத வரை இஸ்லாத்தின் மீதான இனவாதிகளின் இனவாதச் செயற்பாடுகளை முடிவு கட்ட முடியாது என்பதனை முழு முஸ்லிம் சமுகமும் சிந்திக்கவேண்டும்.

1 comment:

Powered by Blogger.