எந்தவொரு இனமும் வேறு இனங்களை நசுக்கவோ, காட்டிக் கொடுக்கவோ இங்கு இடமில்லை - மஹிந்த ராஜபக்ஷ
எந்தவொரு இனமும் வேறு இனங்களை நசுக்கவோ, காட்டிக் கொடுக்கவோ இங்கு இடமில்லை. அதற்கு சிறிதளவேனும் இடமளிக்கப்படவும் மாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் மண்முனையில் தெரிவித்தார்.
படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கின்ற மண்முனைப் பாலம் 1870 மில்லியன் ரூபா செலவில் ஜெய்க்கா நிறுவனத்தின் ஒத்துழைப்போடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இப்பாலத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பங்கு கொள்ளக் கிடைத்தமையையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களது நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ளது. இதனை மறக்க மாட்டீர்கள். இப்பிரதேச மக்கள் பலவிதமான அசெளகரியங்களுக்கு மத்தியில் இப்பாதை ஊடாக பயணங்களை மேற்கொண்டனர்.
எனினும் அந்த அசெளகரியங்களை நாமே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இதற்கு முன்னர் பல அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் இங்கு வந்து பல விதமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு அடிக்கல்கள் நாட்டிச் சென்றுள்ளார்கள். இப்பிரச்சினையை நாமே தீர்த்து வைத்துள்ளோம்.
இவ்வாறான சூழ் நிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டால் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்று அரசியல் நோக்கத்தோடு கூறுகின்றனர்.
இது பிழையான பிரசாரமாகும். இதேவேளை பொய் பிரசாரம், வதந்தி என்பவற்றின் மூலம் இங்கு முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பல குழுக்கள் முயற்சி செய்கின்றன. சிறு குழுவினரின் கூற்றுக்களை பெரும் பிரச்சினைக்குரிய கூற்றுகளாகப் பூதாகரப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதனால் நாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வது மிக அவசியம்.
30 வருட யுத்தத்தை முடித்து துன்ப துயரங்களுக்கு முடிவுகட்டியுள்ளோம். எமது பிள்ளைகள் இங்கு நன்றாகக் கற்று இத்தாயக மண்ணில் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக வாழவேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இதேநேரம் நாட்டின் தேசிய இன ஐக்கியத்தைச் சீர்குலைப்பதற்கு சில வெளிநாட்டு சக்திகளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் சூட்சுமமான நடவடிக்கைகளின் வெளிப்பாடுகளோ தற்போதைய நிலவரங்கள்.
இவ்வாறான சூழலில் எம்மிடம் ஒரு பொறுப்புள்ளது. நாட்டு மக்களினது சுபீட்சத்திற்காக உழைக்க நீங்க தயார் என நான் நம்புகின்றேன். எமது அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் முதல் ஹிஸ்புல்லா வரை எல்லோரும் இந்நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் தொடர்பாக அடிக்கடி பேசி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரு மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் பiர் சேகுதாவூத்தின் இல்லத்தில் நடைபெற்ற திருமண வைபவத்திற்காக இங்கு வந்து சென்றேன், அந்தளவுக்கு எமக்கிடையில் இறுக்கமும், நெருக்கமும் மிக்க உறவு உள்ளது. இதேபோன்று 1970 களில் நான் மட்டக்களப்பு நீதிமன்ற வழக்குகளில் வாதாட வந்து இருக்கிறேன்.
அந்த சந்தர்ப்பங்களில் சட்டம் தொடர்பாக ஏதாவது தெளிவு தேவைப்பட்டால் உடனடியாக மறைந்த ஷாம் தம்பிமுத்துவின் நூலகத்திற்குச் சென்று அதனைப் பெற்றுக் கொள்வேன்.யார் என்ன சொன்னாலும் எதைச் செய்தாலும் எமது மக்களை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக முன்னேறுவோம் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment