Header Ads



வெட்கம்....!

(ஏ.எல்.நிப்றாஸ்)

புனிதஸ்தலங்களின் புனிதமும் பெறுமதியும் தெரியாமல் அவற்றின் கோபுரங்களின் மேற்பகுதியில் வந்தமர்ந்து கொஞ்சம்கூட வெட்கமின்றி எச்சமிட்டுச் செல்கின்ற காகங்களைப் போல, நல்லதொரு நல்லிணக்க நிகழ்விற்குள் பொதுபலசேனாவினர் புகுந்து நாசப்படுத்திவிட்டு போயிருக்கின்றனர். 

அழையாத விருந்துக்கு வந்துவிட்டு... தம்மையும் விருந்துக்கு அழைத்திருக்க வேண்டும். தமக்கும் சாப்பாடு தரவேண்டும.; இல்லாவிட்டால் வேறு யாரையும் சாப்பிட விடமாட்டோம் என்று கூறி, சோற்றுப் பானையையே குப்புற கவிழ்த்துவிட்டுப் போனதைப் போல அவர்கள் நடந்து கொண்டதை காண நேர்ந்தபோது பௌத்தமும் அதனோடிணைந்த நாகரிகமும் கூனிக் குறுகி வெட்கப்பட்டுப் போயின. 

பராக்குக் காட்டுதல்

ஒரு முஸ்லிமினால் பாடப்பட்ட 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற சிங்களவர்களின் தேசிய கீதத்திற்கு முழுமையாக அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத கூட்டம்தான் - வரலாற்றில் செய்நன்றி மறந்து, இன்று முஸ்லிம்களின் மத, இன அடையாளங்கள் மீது தமது பலத்தை பிரயோகிப்பதில் சிற்றின்பம் கண்டு கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினங்களை அடக்கி ஆளும் நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியான இந்த நடவடிக்கைகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தவணை முறையில் 'இவ்வார ஸ்பெஷலாக' அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. 

எப்போதும் இரண்டாம் இடத்தில் இருந்து கொண்டு முதலிடம் பற்றி யோசிப்பவனை விட முதலாம் இடத்தில் இருப்பவனின் பதற்றம் அதிகமாக இருக்கும். தமக்கு அடுத்த இடங்களில் இருப்பவர்கள் தமது இடத்தை கைப்பற்றிவிட்டால் எமது நிலை என்னவாகும்? ஏன்ற பயம் எவ்வேளையிலும் அவர்கள் மனதில் இருக்கவே செய்யும். இந்தப் பயமே சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. இஸ்லாமோ, இந்து மதமோ அல்லது கிறிஸ்தவமோ பௌத்தத்தை மேவி விடக் கூடாது என்ற பதற்றத்தில் சில கடும்போக்கு சிங்கள சக்திகள் தலைகால் புரியாமல் ஆடுகின்றனர். சுயலாபங்களுக்காக சில சிங்கள அரசியல்வாதிகள் பொதுபலசேனா, ராவண பலய, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களுக்கு ஊக்கமருந்து அளித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஒரு இனக்குழுமத்தை அடக்கி ஆள பெரும்பான்மை இனம் தலைப்படுமாயின், அதற்காக தமது இனத்தை உளரீதியாக தயார்படுத்தலே ஆரம்பக்கட்டமாகும். அந்தக் கோணத்தில் பெரும்பான்மை மக்கள் தூண்டிவிடப்படுவார்களாயின் அதன் அதிர்வுகள் நீடித்து நிலைத்துநிற்கும் என்பது அநாகரிக தர்மபால காத்திலிருந்தே கடும்போக்குவாதிகளுக்கு தெரிந்த உத்திதான். மதம் மற்றும் இன அடிப்படையில் சிறுபான்மை மக்கள் தம்முடைய பௌத்த மதத்தை கேவலப்படுத்துகின்றனர் என்ற தோரணையில் முன்னெடுக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்களும் அநாகரிகங்களும் இந்த தந்திரத்தின் வழிவந்தவையே.

மறுபுறத்தில் - சிங்கள மக்களுக்கு எதையாவது பராக்குக் காட்டி அவர்களை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அலசி ஆராய்ந்து சிந்திக்கத் தலைப்பட்டு விட்டார்கள் என்றால் துண்டங்களாக பிரிந்துவிடுவார்கள். இந்நிலையில், 5 வருடங்களுக்கு முன்னர் புலிகளை தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை பிரசார மூலதனமாக பயன்படுத்துவது இன்னும் எத்தனை வருடங்களுக்கு சாத்தியமென்று தெரியாதுள்ளது. இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றியையும் அரசியலுக்கு பயன்படுத்த இயலாது. ஆனால்; சிங்கள மக்களின் வாக்குகளே ஆட்சியாளர்களை தீர்மானித்து ஆட்சியை கொண்டு நடாத்துகின்ற சக்தியாக தொடர்ந்தும் இருக்கின்றன. 

இவ்வாறான பின்னணியிலேயே – அரசாங்கமும் ஆட்சியதிகாரமும் இனவாத அமைப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயக்கம்காட்டி வருகின்றன. இனவாத சாயல் தெறிக்கும் ஒரு அட்சரத்தை பேசியவன் கூட தேடிப்பிடித்து கைது செய்யப்பட்டு தேசத்துரோகியாக முத்திரை குத்தப்படுமளவுக்கு சட்டமும் நீதியும் போலோச்சுகின்ற ஒரு நாட்டில், பொதுபலசேனா போன்ற கடும்போக்கு காவியுடைக் காரர்களின் இன நல்லிணக்கத்திற்கு எதிரான காரியங்கள் எதுவுமே பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை.

இதற்கு காரணம் நாம் அறியாததல்ல. பௌத்த துறவிகளை பகைத்துக் கொண்டால் அவர்கள் சிங்கள மக்களுக்கு எதிரானதாக அரசாங்கத்தை சித்தரிப்பார்கள். சிங்கள மக்களை அரசாங்கத்திற்கு எதிராக திரட்டுவதற்கு மதத்தை நல்லதொரு ஆயுதமாக பயன்படுத்த தலைப்படுவார்கள். இதனால் சிங்கள மக்களின் ஆதரவை இழக்க வேண்டி நேரலாம். இப்படியான நிலைமை ஒன்று ஏற்படுவதற்கு எந்த ஆட்சியாளனும் விரும்ப மாட்டான். ஆக – கடும்போக்கு சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பயப்படுகின்றது என்பதை விடவும், தேரர்களையும் சிங்கள மக்களையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியான இருக்கின்றது என்பதே உண்மையென தோன்றுகின்றது. 

வெளிக்கிளம்பிய பூதம்

கடந்த ஒன்றரை மாதங்களாக பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தனர். அவ்வமைப்பு திருந்திவிட்டதாக பேசிக்கொண்ட சிலரின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. கடந்த மாதம் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தொடர் இடம்பெற்றது. இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றி மட்டுமன்றி, சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள் பற்றியும் அங்கு பிரஸ்hபிக்கப்பட்டது. 

இந்நிலையில், இலங்கையில் ஏக காலத்தில் பௌத்த அமைப்புக்களால் ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அரசுக்கு இன்னும் சிக்கலாகிவிடும். இந்தக் காரணத்திற்காகவே, இக்காலப்பகுதியில் இந்தப் 'பேய்' ஒரு போத்தலுக்குள் போட்டு மந்திரித்து அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இப்போது மந்திரம் காலாவதியாகி, பூதம்போல் மீண்டும் போத்தலை உடைத்துக் கொண்டு வெளிக் கிளம்பியிருக்கின்றது. 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதற்கு இடத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வில்பத்து சரணாலயத்தின் எல்லைப்புறத்திலேயே அவர்களை தற்காலிகமாகவேனும் குடிமர்த்துவதற்கான காணியைப் பெறக் கூடியதாக இருந்தது. அதனடிப்படையில் அங்கு அம்மக்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைக் கேள்விப்பட்டவுடன், பொது பலசேனாவுக்கு வன ஜீவராசிகள் மீதும் பௌத்த நினைவுச் சின்னங்கள் மீதும் அன்பும் அக்கறையும் பொத்துக் கொண்டு வந்துள்ளது. 

இதனையடுத்து பொது பலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவொன்று மேற்படி குடியேற்றம் மேற்கொள்ளப்படும் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு நேரில் சென்றனர். அவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றமும் வாய்த்தர்க்கமும் இடம்பெற்றது. 'தாம் பிரச்சினை ஏற்படுத்துவதற்கு அங்கு வரவில்லை' என்று தேரர் கூறிக் கொண்டிருந்தாலும், அவரது பேச்சுக்களை அவதானித்தால், சண்டைக்கு இழுப்பது மாதிரியே தெரிந்தது. 

ஒருவாறாக அங்கிருந்து கிளம்பி கொழும்பு திரும்பிய பொதுபலசேனா குழுவினர் ஊடகத்திற்கு தெரிவித்த கருத்துக்கள் அபத்தமானவை. 'வில்பத்து பகுதியில் பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் முயற்சியில் முஸ்லிம் அமைச்சர் ஈடுபடுகின்றனர். இலங்கையில் அனைத்து சிங்கள பிரதேசங்களிலும்  சட்டவிரோத குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. முஸ்லிம் நாடுகளின் தீவிரவாத கலாசாரம் இலங்கைக்குள் பரப்பப்படுகின்றது. கிழக்கிலங்கை முழுமையாக முஸ்லிம் இனவாதிகளின் பூமியாக மாறிவிட்டது. இதன் ஒரு கட்டமாகவே மன்னார் - வில்பத்து பகுதியில் முஸ்லிம்கள் அதிகளவில் குடியேற்றப்படுகின்றனர்' என்று கலகொட அத்தேஞான தேரர் தனது திருவாய் மலர்ந்து அருளியிருந்தார். இவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும் கனதியானவை, தனித்தனியாக ஆய்வுக்குட்படுத்தி பதிலளிக்க முடியும். இலங்கையில் உண்மையிலேயே நிலங்களை சூறையாடி குடியேற்றங்களை மேற்கொள்வது யார்? என்ற கேள்வியிலிருந்து அப்பதிலை ஆரம்பிக்க முடியும். ஆனால் அது தேவையற்றது. 

குறிப்பாக, அரசாங்கம் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அங்குமிங்குமாக மீளக் குடியேற்றி வருகின்றது. அந்த வகையிலேயே மேற்படி குடியேற்றமும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அரசாங்கத்திற்கு தெரியாமல் அல்லது சட்டத்தின் கண்களின் மண்ணைத் தூவிவிட்டு செய்வதற்கு இதுவொன்றும் கோழி திருடுகின்ற காரியமல்ல. மாறாக மீள் குடியேற்ற திட்டம். அதற்கொன அமைச்சு இருக்கின்றது, அதிகாரிகள் இருக்கின்றனர். அரசாங்கத்தின் ஒப்புதலின்றி அணுவும் அசைக்கவியலாது. 

மறுபுறத்தில், வனஜீவராசிகள் குறித்து அக்கறை கொள்வதற்கு பிரத்தியேகமாக அமைச்சும் அமைச்சரும் ஏகப்பட்ட அதிகாரிகளும் இருக்கின்றனர். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதைவிடுங்கள் - விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியென்றால் எந்த மடையனாவது மக்களைக் கொண்டு சென்று அங்கு குடியேற்றுவானா? இப்படியிருக்கையில், சட்டத்தையும் அதிகாரத்தையும் கையிலெடுப்பதற்கான கவசமாக காவியை உடுத்திக் கொண்டு எடுத்ததற்கெல்லம் கூப்பாடு போடுவது பௌத்தம் போதிக்கும் பிக்குகளுக்கு வேண்டாத வேலை. இதுதான் சிங்கள மக்களின் அபிப்பிராயமும் கூட.

இது இவ்வாறிருக்க – பொதுபலசேனாவைப் போன்று சத்தம்போட்டுக் கொண்டிருக்காமல் 15 முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து உடனடியாக மறுநாளே மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தன. வில்பத்து பகுதியில் முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது சட்டவிரோதமான முறையில் அல்ல என்று சுட்டிக்காட்டியிருந்த அவ் அமைப்புக்கள், அம்மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் மகஜரில் வலியுறுத்தியிருந்தன. இந்த நகர்வை பொதுபலசேனா எதிர்பார்த்திருக்கவில்லை போலும். இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்த சமயமே அந்நிகழ்வு இடம்பெற்றது. 

காவியுடையில் சண்டித்தனம்

வில்பத்து சரணாலய சுற்றுச்சூழலில் முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றப்படுவது தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு நிலமைகளை கண்டறிந்த  ஜாதிக பலசேனா அமைப்பு அது குறித்து விளக்கமளிப்பதற்காக கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை புதனன்று ஏற்பாடு செய்திருந்தது. இப்பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற முன்னரே அங்குவந்த பொதுபலசேனாவுக்கு ஆதரவான விதாரணதெனிய தேரர் தலைமையிலான பிக்குகள் சிலர் மேற்படி ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள தமக்கும் இடமளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். 

ஆனால், இதன் ஏற்பாட்டாளரான ஜாதிக பலசேனா அமைப்பின் மஹியங்கணை வட்டரக்க விஜித தேரரும் அங்கிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் அதனை நியாயபூர்மாக நிராகரித்தனர். 'இது நாம் நடாத்துகின்ற நிகழ்வு. நீங்கள் பார்வையாளராகக் கூட அழைக்கப்பட்டிராத நிலையில் கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்க முடியாது'   என ஏற்பாட்டாளர்கள் கூறினர். அப்போது ஞானசார தேரர் தலைமையில் ஒரு குழுவினர் அங்கு வந்து உரத்த தொனியில் பேசத் தொடங்கினர். 

'முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருந்தால் மௌலவிமாரை கூப்பிட்டு வைத்துப் பேசுங்கள். அதைவிட்டுவிட்டு பிக்குகளை ஏன் நீங்கள் கூப்பிட வேண்டும்? முஸ்லிம்கள் குறித்து தேரர்கள் பேச முடியாது.......' என்று பேசத்தொடங்கிய ஞானசார தேரர் விறைப்பான முகத்தை வைத்துக் கொண்டு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். 'இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும் நீங்கள் உண்மையான பௌத்தரல்ல. முஸ்லிம்களின் பணத்திற்கு சோரம்போய் இவ்வாறான காரியத்தில் இறங்கியுள்ளீர்' என்று பத்திரிகையாளர் மாநாட்டின் ஏற்பாட்டாளரான மகியங்கனை வட்டரக்க விஜித தேரரைப் பார்த்து கூறினார். அத்துடன் அங்கிருந்த முஸ்லிம், சிங்கள பிரதிநிதிகளை அதட்டும் தொனியில் பேசினார். இதனால் அங்கு வாய்த்தர்க்கம் முற்றியது. இதற்கிடையில் சில பிக்குகளும் முஸ்லிம் பிரதிநிதிகளும் அங்கிருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். 

அப்போது அவ்விடத்திற்கு கொம்பனிவீதி பொலிஸ் பொறுப்பதிகாரி வந்தார். 'இந்த ஹோட்டலுக்கு பணம் செலுத்தி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றனர். நீங்கள் இதற்கு அழைக்கப்படவில்லை. எனவே தயவுசெய்து வெளியேறுங்கள்' என்று பொறுப்பதிகாரி பொதுபலசேனா குழுவினரிடம் கோரி நின்றார். ஆனால் அவர்களோ எதனையும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. அவர்களது நடத்தையினதும் வார்த்தைப் பிரயோகத்தினதும் கட்டுப்பாட்டை இழந்திருந்தனர். வட்டரக்க தேரருக்கு அடிக்காத ஒன்றுதான் மிச்சம். மற்றப்படி எல்லா வகையிலும் அவர் வார்த்தை தாக்குதலுக்கு உள்ளானார். 
இப்படியான காரியமொன்றை நிகழ்த்தியமைக்காக வட்டரக்க தேரர் மன்னிப்புக் கோரியே தீரவேண்டும் என்று விடப்பிடியாக நின்றனர் பொது பலசேனாவினர். இதனால் கடுமையான இக்கட்டுக்குள் தேரர் சிக்குண்டு, பேச வார்த்தைகளற்று இருந்ததை காண முடிந்தது. பொது பலசேனாவினர் தன்னை ஒரு 'பௌத்த துரோகி' என முத்திரை குத்தும் நிலைகூட ஏற்படலாம் என்று அவர் பயந்திருக்க வேண்டும். கடைசியாக அவர் மன்னிப்புக் கோர வேண்டிய ஏற்பட்டுவிட்டது. 

'இவ்வாறான ஒரு நிகழ்வு நடந்தமைக்காக மகா சங்கத்தினரிடமும், பௌத்த தேரர்களிடமும் அதேபோன்று மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றேன்' என்று வட்டரக்க தேரர் தெரிவித்தார். 'முஸ்லிம்களிடம் பணம் வாங்கிவிட்டே நான் இப்படி நடந்து கொண்டேன்' என்று அவர் சொன்னதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால், இவ்வாறு சொல்லுமாறு ஞானசார தேரர் வட்டரக்க தேரருக்கு வற்புறுத்தி சொல்லிக் கொடுத்தாலும், மன்னிப்புக் கோரியபோது 'பணம்' (சல்லி) என்ற வார்த்தையை வட்டரக்க தேரர் பயன்படுத்தவில்லை என்பதை சம்பவ இடத்தில் நின்றிருந்த இரு நண்பர்கள் உறுதிப்படுத்தினர். 

உண்மையாகவே இப்படியான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களை அழைத்துவிட்டு வட்டரக்க தேரர் சுயமாக முன்வந்து மன்னிப்புக் கோரி முஸ்லிம்கள் பணம் தந்ததாக கூறுவாராயின் அவர் 'டபள் கேம்' ஆடுகின்றார் என்ற முடிவுக்கு வந்திருக்க முடியும். ஆனால், இங்கு மன்னிப்பு - கேட்டு வாங்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரின் திரைக்கதை வசனத்திற்கு வட்டரக்க தேரர் வாயசைத்துள்ளார் என்பதே யதார்த்தம். வட்டரக்க தேரர் இரட்டை நிலைப்பாட்டை கொண்டவராக இருந்திருந்தால், அங்கிருந்த நியாஸ் மௌலவியுடன் சென்று தன்னை பொது பலசேனாவினர் அவதூறாக பேசி, தாக்கி, 5 ஆவணங்களை பறித்துச் சென்றதாக கொம்பனிவீதி பொலிஸில் முறைப்பாடு செய்திருக்க மாட்டார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

தான் கண்ணுற்றவற்றை தெரிவிப்பதற்காக ஒரு தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு அழையா விருந்தினராக உள்ளே நுழைவதைவிடவும் அங்கிருந்தவர்களை அதட்டி அராஜகம் புரிவது அப்பட்டமான அநாகரிகம். களேபரத்தில் ஈடுபடுகையில் ஞானசார தேரரின் வார்த்தைகளில் அல்லது முகபாவத்தில் - ஒரு மதத்துறவிக்குரிய அடக்கமோ, பரிவோ, புனிதத்தன்மையோ மருந்துக்கும் இல்லவே இல்லை. காவியுடையை தவிர்த்துப் பார்த்தால்.... தெருச்சண்டை பிடிப்பவர்களை போல தெரிவதாக தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்த புலம்பெயர் நண்பர் ஒருவர் கூறினார். அப்படியாயின் உண்மையில் இப்படி நடந்து கொண்டமைக்காக பொதுபலசேனாவே மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும்.
புளியைக் கரைக்கும் செயல்

பொது பலசேனாவினர் கடந்த இரு வருடங்களாக மேற்கொண்டுவரும் இன ஒடுக்குமுறைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை. ஏனென்றால் அவர்கள் அடைய முடியாத ஒன்றை கனவு காணுகின்றனர். மலேசியாவில் இருந்து புறப்பட்ட வேளை காணாமல் போன விமானம் இரணைமடு ஒடுபாதையில் இறங்கியுள்ளது என்று கூறுவதைப் போல இருக்கும் இவர்களது சில கருத்துக்கள். ஆயினும் அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் சிறியதொரு தாக்கத்தையும் அதிர்வையும் இது ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை முற்றாக மறுக்கவியலாது. 

இந்த தருணத்தில்தான் வட்டரக்க தேரர் போன்ற வேறு சில பௌத்த தேரர்கள் மற்றும் சிங்கள முற்போக்கு அமைப்புக்களின் நிலைப்பாடுகள் சிங்கள கடும்போக்கு அமைப்புக்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிருக்கின்றன. இதனால் பொது பலசேனாவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் தலைகால் புரியவில்லை. ஆனால் ஒன்று – சிங்கள கடும்போக்கு சக்திகள் என்று நாம் வர்ணித்தாலும் அவை யாவும் தமது சமூகத்திற்காக எந்த அடிப்படையிலேனும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில், இவ்வளவு நடந்த பிறகும் முஸ்லிம் சமூகமும் அதன் மேய்ப்பர்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. 

வில்பத்து பிரதேச மீள் குடியேற்றப் பிரச்சினை தலைதூக்கிய போது மு.கா. செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி எம்.பி. ஒரு முக்கியத்துவமிக்க கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது 'மீள் குடியேற்ற விவகாரம் உள்ளடங்கலாக முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்குவாரங்களுக்கு தீர்வுகாண வேண்டுமாயின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கு பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இது ஒரு நல்ல யோசனை. ஆனால் இவற்றுக்கு எல்லா மேய்ப்பர்களும் உடன்படுவார்களா? என்றால் இல்லையென்ற பதிலே பொருத்தமானது. ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் சொன்னதால் இக்கருத்தை ஏனைய காங்கிரஸ் காரர்கள் ஒத்துக்கொள்ள மறுப்பது ஒருபுறமிருக்க, அந்தக் கட்சிக்குள்ளேயே சிலர் முரண்டுபிடிப்பார்கள் என்பதே நிதர்சனம்.

இனவாத அமைப்புக்களை பகைத்துக் கொண்டால் அரசாங்கத்தை பகைத்துக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்துக் கொண்டே இன்று வரைக்கும் காலத்தை கடத்தி விட்டார்கள். அதேபோல், முஸ்லிம் சமூகமும் உண்பதும் உடுப்பதும் மதத்தை வழிபடுவதும் மாத்திரமே தமக்கு விதிக்கப்பட்ட கடமைகள். அவற்றை செய்துவிட்டால் இந்நாட்டில் காலகாலத்திற்கும் வாழ்ந்துவிடலாம் என்ற நினைப்பில் இருக்கின்றது. ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்படுகின்ற போது கொழும்பு தெவட்டகஹ பள்ளிக்கு அருகிலும், கல்முனையிலும் ஆர்ப்பாட்டம் நடாத்தும் தொப்பி போட்டவர்களை - சமூகத்திற்கு அநியாயம் இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் காணக்கிடைப்பதில்லை. 

அநாகரிகமான இனவாதத்தை முடுக்கிவிட்டுள்ள அமைப்புக்களும், அதனை கட்டுப்படுத்த சுபநேரம் பார்க்கும் அரசாங்கமும், குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் கிடக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்காக வெட்கப்பட வேண்டும். 

இது ஒரு தேசத்தின் வெட்கக்கேடு.

1 comment:

  1. Antha perasai pidintha arasital wathihal eppathan unaruwanolo theriyathu.
    Islam ulahengum parawum walarenumentru pala thiyahangalukku maththiyil walartha islathai sotpa asaikkaha engalathu inathai pathuhakka thuppillatha arasiyal wathihal irukkum waraikum namathu samooham thalai thooka mudiyath.enewe muslims civil amaippukkela, eluththalarhale, jaffnamuslime neengalthan engal samoohathai pathukakka padupadawendiya nirpanthathil ullierhal. Ahawe Allahukkaha ungalathu paniyai niruthawenda.arabunaduhal sarwedesam waraikum eduthu sollungal.Allahu ungalukum ungalala kudumpam, soththukkalayum pathukappan.

    Melum emathu arasiyal thalaiwarhalan gourawa Mr Hisbullah.Mr athaulla, Mr faizer mustafa, Mr kader, siresta amaichar Mr fouzi, Hon Alavi moulana innum thoonkikkonde irukkirarhal. Iwarhal eppathan namathu samoohathaipatry sinthikka pohirarhalo. Ya allah engalai pathhappayaha, ya allah engalukkenru oruthalaimaithuwam illatha nilail engalaluku udhavi seywayaha Allahu.

    ReplyDelete

Powered by Blogger.