Header Ads



இலங்கைப் பிரச்சினையும், எதிர்கொள்ளும் வழிமுறையும்

(அபு இமான் ஸஹ்வி)

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேலெழுந்து வரும் பௌத்த மதப் பயங்கரவாதமும் அதை எதிர்கொள்ளும் வழிமுறையும் தொடர்பாக ஒரு விளக்கக் குறிப்பை காலத்தின் தேவை கருதி இங்கு பதிவிட விரும்புகின்றேன்.

“அன்பே கடவுள்” என்று போதித்த புத்தரின் போதனைகளை புறந்தள்ளிவிட்டு “சுத்த பௌத்த தேசத்தை நோக்கி - எதிர்கால இலங்கை” என்ற கோஷத்துடன் மத குருக்கள் என்ற வேஷத்துடன் இரத்த தாகத்துடன் வம்பைத் தேடி சிலர் இலங்கை முழுவதும் அலைந்து திரிகின்றனர். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை உடைப்பது, மார்க்க விவகாரங்களை சிதைப்பது, பௌத்தர் மத்தியில் முஸ்லிம் விரோத விஷத்தை விதைப்பது இதுவே இவர்களின் நோக்கமாகும்.  

இவர்கள் விதைத்த விஷ வித்துக்கள் இன்று சிங்களவர்கள் மத்தியில் படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி வேர்விடத் தொடங்கிவிட்டது.  இலங்கையில் முஸ்லிம் விரோத போக்கு, இன முறுகல் சிந்தனை என்பது புதிய வடிவில் ஒரு சிக்கலான கட்டத்தை நோக்கி நகர்த் தொடங்கிவிட்டது.  

நமது அரசு இதை அடக்கும், நமக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்த பாமர மக்கள் ஏமாந்து போய்விட்டார்கள். இது வலுவான அரச இயந்திரத்தின் ஆசீர்வாதத்துடனும் அனுசரணையுடனும் அரங்கேறும் அட்டகாசம், தெளிவான அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் என்பதை மக்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள்.

தேர்தல் காலத்தில் பச்சத் தண்ணீரிலேயே பலகாரம் சுட்டு, வான வெடிகளுக்கு மத்தியில் கட்டபொம்மனின் வசனம் பேசி வீர சாகாசம் காட்டிய  எமது முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் “நா”வாயுதம் கொண்டு நாடாளுமன்றத்தில் உரிமைக் குரல் கொடுப்பார்கள் நாட்டின் நீதி மன்றத்தில் உரிமை மீறல் வழக்குத் தொடுப்பார்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றெல்லாம் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்தது, நம்பியது. அதுவும் நடக்கவில்லை. பலர் சமூகத்தை வித்துதின்னும் வியாபாரிகளாக மாறி அரச வீட்டில் நக்குண்டு நாவிழந்து கிடக்கின்றார்கள். சிலர் நாவிருந்தும் வலுவிழந்து இருக்கின்றார்கள், இன்னும் சிலர் இதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தலைவர்களாகத் துடித்து நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

அன்றாடம் பாதிக்கப்படும் முஸ்லிம் சமூகமும், ஈமானியம் நிறைந்த சாமானிய மனிதர்களும், உணர்விருந்தும் வலுவில்லாத சில சமூக சிவில் நிறுவனங்களும்தான் இந்தப் பிரச்சினையைத் தலையிலே போட்டுகொண்டு முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்கும், பாதுகாப்புக்கும் வழிதேடி அலைகின்றனர். 

அன்பான உறவுகளே !!

இலங்கை எங்கள் தாய்நாடு, நாங்களும் சுதந்திர இலங்கை தேசத்தின் சொந்தக்காரர்களே, இது எமது உயிரோடும் உணர்வோடும் கலந்த பிரச்சினை. இதில் எம்மை அடக்கியாள நினைக்கும் அநியாயத்திற்கு எதிரான எமது கோபம் நியாயமானது. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் ஒழுங்குபடுத்தப்படாத ஆத்திரமும், நன்கு திட்டமிடப்படாத எதிர் நடவடிக்கைகளும் ஒரு போதும் ஆரோக்கியமான விளைவுகளைத் தராது. ஆபத்தையே அதிகரிக்கும். நாம் ஆத்திரப்பட்டு பொங்கியெழுந்து போராட வேண்டும், புலிகளைப் பொசிக்கியதுபோல் முஸ்லிம்களையும் நசிக்கிவிடவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. இதற்க்கு நாம் இரையாகிவிடக் கூடாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தினதும், வெள்ளை வேன் கூட்டத்தினதும் துணையில்தான் இலங்கை அரச இயந்திரம் கொண்டிருக்கின்றது. நமக்கு ரகசியம் பேசக் கூட நாட்டில் ஒரு சிறு துளி இடம் கிடையாது, எமது குத்பாக்கள் கூடக் குறிப்பெடுக்கப்படுகின்றன, உத்பா, ஷைபா போன்ற நயவஞ்சகர்களின் வாரிசுகள், காட்டியும் கூட்டியும் கொடுக்கும் எட்டப்பர் கூட்டம் இன்னும் நமக்குள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இதையும் நாம் மறந்து செயற்படக்கூடாது.  

மேலும், எமது பிரச்சினையை அரபுலகுக்கு அறிவிக்க வேண்டும் சர்வதேசத்துக்கு ஏற்றிவைக்கப்படல் வேண்டும், அதுவே பிரச்சினைக்கான தீர்வைத் தேடித்தரும் எனப் பலர் நினைத்கின்றனர். அதிலேயே எம் நேரம் முழுவதையும் செலவளித்துவிடக்கூடாது. பௌத்த தீவிரவாதத் தீயில் வேகும் மியன்மார் முஸ்லிம்களின் நிலை இந்த உலகுக்குத் தெரியாதா? சரியான தீர்வின்றி சீரழிந்து கொண்டிருக்கும் பலஸ்தீன், ஈராக், சிரிய, எகிப்து தேசங்களின் சோக வரலாறும், சீரழிவும் இந்த உலகுக்குத் தெரியாதா? எது தெரியாது? இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையும் சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்டியிருக்கின்றது கடைசியாக ஐக்கிய நாடுகள் சபையின் கதவையும் தட்டியிருக்கின்றது. ஆனால் என்ன நடந்தது?? 

நாம் நம் பிரச்சினையின் அடிப்படையை மறந்துவிடக்கூடாது. எம் பிரச்சினையின் அடிப்படையே நாம் முஸ்லிம்கள் என்பதுதான். அல்லாஹ்வின் உதவியால், நீதியான ஆட்சியை இந்த உலகுக்கு முஸ்லிம்கள் வழங்கும்வரை எமக்கு நீதிசெலுத்த இந்த உலகில் யாருமே முன்வரப்போவதில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பின் பிரகாரம் இனி வரும்காலங்களில் இன்னும் எமக்கான பிரச்சினைகள் கூடுமே தவிர குறையப்போவதில்லை. இதையும் நாம் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்.
இதற்காக எம் தலைவிதியை நொந்துகொண்டு நாளாந்தம் வெந்து வெந்து சாவதா? விடிவுக்கு வழியில்லையா ? என்று நீங்கள் கேட்கலாம். இஸ்லாத்தில் எதற்கு வழிகாட்டல் இல்லை. ஒரு முஸ்லிம் தனது பிரச்சினையை இப்படிதான் அணுக வேண்டும்
1. எமக்கு ஏதும் துன்பம் நடந்தால் இது இறைவன் எமது ஈமானுக்கு ஏற்படுத்தும் சோதனை என முதலில் உணர வேண்டும், பொறுமையும் நிதானமும் வரவேண்டும். அடுத்து பிராத்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியுடன் இறைவனை நோக்கி நகரவேண்டும். அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும். இது முஸ்லிம்களுக்கு உதவியையும், எதிரிகளுக்கு நடுக்கத்தையும் ஏற்படுத்தும் பலமான முதல் ஆயுதமாகும். 
 
குடிகார, பெண்பிடிகார, கபுர்களுக்கு ஸுஜூது செய்யும் தலைவர்கள் உதவமாட்டார்களா என்று நாம் ஏங்குகின்றோம். ஆனால் அல்லாஹ்வின் உதவியைத் தேடி ஏங்கி அழுதவர்கள் நம்மில் எத்தனைபேர்? 

2. இஸ்லாம் தொடர்பாக கருத்தியல் ரீதியாகத் தொடுக்கப்படும் யுத்தத்துக்கு அதாவது “பிற மதத்தவர்களுக்குக் கொடுக்கும் உணவில் துப்பி விட்டுக் கொடுங்கள், மற்றவர்களின் காணிகளை அபகரியுங்கள் என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது”  என்பன போன்று, கருத்தியல் ரீதியான போலி வாதங்களுக்கு ஆதாரபூர்வமாக தெளிவான பதில் கொடுக்க வேண்டும். அறிவியல் ரீதியான போராட்டத்தை இஸ்லாம் எப்போதும் வரவேற்கின்றது. அல்குர்ஆன் அதை தெளிவாகச் சொல்கின்றது:

“ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிப்படாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பலமான பெரும் போர் மேற்கொள்வீராக.” (25:52)

மேலும் இவை, இலங்கை போன்ற சிறுபான்மைச் சூழலில் இஸ்லாத்தை பகிரங்கமாக எடுத்துவைக்க இறைவன் ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளாகும். மார்க்கமும் மொழிவளமும் உள்ளவர்கள் இதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

எந்த தேசத்தில் இஸ்லாம் அதிகமாக எதிர்க்கப்படுகின்றதோ, அந்த தேசத்தில் இஸ்லாம் வேகமாகப் பரவும், இது இறை நியதி. இஸ்லாம் கடுமையாக எதிர்க்கப்படும் மேற்குலகில் இன்று கிறிஸ்த்தவர்கள் இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக நுளைவதும் கிறிஸ்த்தவம் சுக்கு நூறாய்  சிதறுவதும் இதை, வத்திக்கானே தன் வாயால் சொல்லிப் பதறுவதும் சிறந்த சமகாலச் சான்றுகளாகும்.

3. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, அவர்களின் வாழ்விடத்தை பிழையான வாதங்கள் ஆதாரங்களை கொண்டு சிதைக்க அபகரிக்க முற்பட்டால் அவைகளையும் தக்க ஆதாரங்களுடன் தகர்த்தெறியப்பட வேண்டும்.

இன்று போல் அன்றும் ஒரு தேரர் இனவாதம் பேசினார், அம்பாறை மாவட்டத்தில் பொன்னன்வெளிப் பகுதியில் முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து தீகவாபி புனித பிரதேசத்துடன் இணைக்க எடுத்த முயற்சியை அமைச்சர் அஷ்ரப் ஒரு பகிரங்க தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் சோம தேரருக்கு தக்க பதில் கொடுத்து அவரின் வாயையும் அன்று தூண்டப்பட்ட ஒரு இனக் குரோதத்தின் வாயிலையும் அடைத்தார். 

இப்படி வீரியமிக்க விவாதங்கள் மூலம் இவர்களின் அண்டப் புளுகுகள் அவிழ்க்கப்பட்டு, சமூகத்துக்கு இவர்களின் வேசங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். சட்டம், வரலாறு என்பன நன்கு தெரிந்த, அரசியல் வலுவுள்ளவர்கள் இதைச் செய்வது அவர்களின் கடமையாகும். ஏனெனில் சாதாரண மனிதர்கள் இதைச் செய்யத் தொடங்கினால் அவர்களின் குரல்வளைகள் நசுக்கப்படலாம், விபரம் தெரியாத விபத்தில் இறக்கலாம். அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர. 

4. நாடு கடந்து வெளிநாட்டில் வாழும் சமூகம், அவர்கள் வாழும் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் தான் தன் சமூகப் பாதுகாப்பு தொடர்பாகச் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு, வாழும் நாட்டுச் சட்டங்களை மீறினால் வந்த நாட்டிலோ அல்லது சொந்த நாட்டிலோ சிறையில்தான் வாழவேண்டி வரும். குறிப்பாக அரபு நாடுகளில் வாழும் சகோதரர்கள் இதில் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும்.

இப்படி இன்னும் பல ஆக்கபூர்வமான வழிகள் உள்ளன, எழுதுபவர்கள் எல்லாம் எழுதலாம் பேசுபவர்கள் எல்லாத் தத்துவத்தையும் பேசலாம். ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார்? தகுதியானவர்கள் உரிய பொறுப்புக்களை எடுத்துச் செய்தே ஆகவேண்டும், சிவில் சமூக நிறுவனங்கள் இதில் காத்திரமான பங்காற்ற வேண்டும். தகுதியானவர்கள் தன் கடமையுணர்ந்து செய்யாவிட்டால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அளவுக்கு வீரியத்துடன் சாத்வீக வழிமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படாவிட்டால் அறிவுபூர்வமாக சிந்திப்பதை விட்டு உணர்ச்சிவசப்பட்டு சிந்திப்பவர்கள், தகுதியற்றவர்கள் அந்த இடத்தை நிரப்பத் தொடங்குவார்கள். இது அவர்களும் அழிந்து சமூகமும் அழிந்துபோகும் மோசமான விளைவினை ஏற்படுத்திவிடும். 

ரணில் அரசும் புலிப் பயங்கரவாதிகளும் சமாதானத் தேனிலவு கொண்டாடியபோது, புலிகள் முஸ்லிம்களின் முன்னணி உணர்வாளர்களை குறிவைத்துக் கருவறுத்தனர். அந்தநேரத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் வைத்து ஒரு உரையில் இன்றைய நீதி அமைச்சர் அவர்களுக்கு ஒரு விடயத்தை பகிரங்கமாக நினைவூட்டினேன். அதை இங்கு மீண்டும் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகின்றேன்.


“அண்ணன் அமீர்தலிங்கம் ஈழத்தைப் பெற்றுத்தருவார் என்று நம்பி தம்பிமார் அவரை தோளிலே தூக்கிச் சுமந்தார்கள் ஆனால் அண்ணல் ஈழத்தை அரசியல் சுலோகமாக மட்டுமே பயன்படுத்துகின்றார் என்றுணர்ந்தபோது முதலில் அவரைச் சுட்டுச் சவமாக்கி விட்டுத்தான் விடுதலைக்காகப் போராடப்போகிறோம் என்று புறப்பட்டுச் சென்றார்கள்.” இன்று அந்தத் தலைவர்களும் இல்லை தறிகெட்டு போராடப் போன தொண்டர்களும் இல்லை எந்த மக்களுக்காகப் போராடப் போனார்களோ அந்த மக்களில் பெரும் பகுதியினரும் இல்லை, எல்லோரும் அழிந்துபோனார்கள். வரலாறு என்றும் ஒரு இடத்தில் நிற்பதில்லை.     

No comments

Powered by Blogger.