Header Ads



மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்திருந்த பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் வரை ஐஸ் கட்டியில் வைத்திருந்ததற்காக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பல்லவி தவான் (38). கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவரது 10 வயது மகன் அர்னவ் மர்மமான முறையில் இறந்துவிட்டான். இந்நிலையில், அவரது கணவர் ஊருக்கு திரும்பி வரும் வரை இந்து மத அடிப்படையில் இறுதிச்சடங்குகளை செய்வதற்காக தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை நடத்திய போலீசார் பல்லவி தனது மகனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க பல்லவி எழுத்து மூலமான வாக்குமூலத்தை போலீசாருக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி பள்ளி செல்ல நேரமாகிவிட்டதால் எனது மகன் அர்னவ்-வை படுக்கையிலிருந்து எழுப்பினேன். ஆனால் அவன் அசைவற்று கிடந்தான். பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவன் அப்படி நடிப்பதாக நினைத்தேன். பின்னர் அவனை குளிப்பாட்டுவதற்காக எழுப்பிய போதுதான் அவன் இறந்திருப்பது தெரியவந்தது. நான் உடனடியாக அவனது இதயத்துடிப்பை பரிசோதனை செய்து அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவன் உணர்ச்சியற்று கிடந்தான்.

அதன் பிறகு அவனது பள்ளிக்கு போன் செய்து அர்னவ் இனி பள்ளிக்கு வரமாட்டான் என்று தெரிவித்தேன். அவர்கள் அதற்கு காரணம் கேட்டபோது நான் விளக்கம் அளிக்கவில்லை.

எனது கணவர் வேலைக்கு சென்றிருந்ததால் அவர் ஊருக்கு திரும்பி வரும் வரை எனது மகனின் சடலத்தை, வீட்டில் ஃபிரிட்ஜில் இருந்த ஐஸ் கட்டிகளை பாலித்தீன் கவர்களில் நிரப்பி குளியல் தொட்டிக்குள் வைத்தேன். அதன் மீது சடலத்தை வைத்தேன். பின்பு எனது கணவர் வந்ததும் அவரிடம் மகனின் மரணத்தை தெரிவிப்பதற்காக சென்றபோது அவர் வாசலில் போலீசாருடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றேன். அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. போலீசார் என்னை கைது செய்து ஜீப்பில் ஏற்றி சென்றனர். அப்போது நான் என்ன சொன்னாலும் அவர்களுக்கு அது புரியாது என்பதால் நான் எதுவும் பேசவில்லை. 

இந்து மதச்சடங்குகளின் படி அடக்கம் செய்வதற்காகவே எனது மகனை அவ்வாறு ஐஸ் கட்டியில் வைத்திருந்தேன். நான் எனது மகனை கொலை செய்யவில்லை. எனது மகனுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறேன். நான் அவனை மிகவும் நேசித்தேன். நான் ஒருபோதும் அவனுக்கு தீங்கு செய்ய நினைத்ததில்லை.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

எனினும், சடலத்தை பரிசோதனை செய்த அந்த மாகாணத்தின் மருத்துவ நிபுணர்கள் இது 'திட்டமிட்ட' மரணம் அல்ல என்றும், பெரும்பாலும் 'இயற்கையான' மரணமாகவே இருந்திருக்க கூடும் என அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.