விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன் மீட்பு
இளங்கன்று பயமறியாது' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதனை நிரூபிப்பதுபோல் நேற்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழும் 16 வயது பையன் ஒருவன் பெற்றோர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு அங்குள்ள சான் ஜோஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளான். யாரும் அறியாமல் வேலியைத் தாண்டிக் குதித்து உள்ளே வந்த அவன் அங்கு புறப்படத் தயாராக நின்றிருந்த ஹவாய் ஏர்லைன்ஸ் 45 என்ற எண்ணுள்ள விமானத்தின் சக்கரங்கள் இருக்கும் பகுதியில் பதுங்கிக் கொண்டுள்ளான்.
ஐந்து மணி நேரப் பயணத்திற்குப் பின் ஹோனலூலுவின் மாய் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் சர்வசாதரணமாக கீழே இறங்கி விமான நிலையத்திற்குள் அவன் சுற்றிக் கொண்டிருந்துள்ளான். சந்தேகப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவனைப் பிடித்து விசாரிக்கவே அவன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் சான் ஜோஸ் விமான நிலையத்தின் கண்காணிப்பு காமிராவில் இந்த பையன் ஏறிக் குதித்து விமான நிலையத்தினுள் வந்தது பதிவாகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 38,000 அடி உயரத்தில் ஆக்சிகன் குறைவான சூழ்நிலையில் ஐந்து மணி நேரப் பயணத்தின் பெரும்பகுதியை பசிபிக் பெருங்கடலின் மேல் பறந்துள்ள இந்த விமானத்தின் அடிப்பகுதியில் எந்த பாதுகாப்பும் இன்றி பயணம் செய்த இவன் உயிருடன் கீழிறங்கியதே ஆச்சரியமான ஒரு செயல் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் தொடர்பாளரான டாம் சைமன் குறிப்பிட்டார்.
பயணத்தின் பெரும்பாலான நேரத்தில் இவன் மயக்கமாக இருந்துள்ளான் என்று கூறிய அவர் மருத்துவ சோதனைகளிலும் இந்த பையன் நலமுடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்டார். குழந்தைகள் சேவை மையத்திற்கு அனுப்பப்படும் இந்த சிறுவன் அவனுடைய தவறுக்காக தண்டிக்கப்படமாட்டான் என்றும் அவர் கூறினார்.
Post a Comment