Header Ads



UN இல் இலங்கை அரசுக்கெதிராக முஸ்லிம் நாடுகள் வாக்களிக்க வேண்டும்...!

 (இக்பால் அஜீட்)  
 
பூரண சர்வாதிகாரம் நோக்கி அக்கம் பக்கம் தி;ரும்பிப்பார்க்காது லாடம் பூட்டிய குதிரைபோல் விரைந்து செல்லும் மஹிந்த அரசை ஒரு கணம் நிறுத்திப் பாடம் புகட்டவேண்டிய காலத்தின் தேவையிருக்கிறது. அதற்கு இன்று இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற போர்க்குற்ற விசாரணைக்கான வாக்கெடுப்பில் ஏனைய நாடுகளுடன் இணைந்து அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால் அது பௌத்த மேலாதிக்கத்தை சிறுபான்மை இனங்கள் மீது, குறிப்பாக முஸ்லிம்கள் மீது திணிக்க நினைக்கின்ற மஹிந்த அரசுக்கு நெற்றியில் போட்ட சுடாக இருக்கும். புலிப்பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிவிட்டோம், இனி நாட்டில் பிரிவினைவாதம் தலைத்தோங்காது. அனைத்து மக்களும் இந்த நாட்டின் மைந்தர்கள். அவர்களின் சுபீட்சமான எதிர்காலம் நோக்கிப்பயணிப்பதே இனி நமக்கிருக்கின்ற ஒரேயொரு சவால் என நயவஞ்சக வார்த்தைகளைக்கூறி மக்களை ஏமாற்றிய மஹிந்தவின் சாயம் காலவோட்டத்தில் முற்றாக களைந்து விட்ட நிலையில் இன்று அவரிடம் மிஞ்சியிருப்தோ அதிகார பலமும் இரும்புக் கரங்களும் மாத்திரமே. 

யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் இன்று இலங்கைக்கு எதிராக உலகை அணிதிரட்டும் ஐ.நா மனித உரிமைக் குழு ஐந்து வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முற்றுப்பெற்ற சில தினங்களில் இலங்கை பயங்கரவாதத்தை அழித்து சாதனை படைத்துள்ளது என்று பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் காலம் செல்லச்செல்ல இலங்கை அரசின் இறுதிகட்ட யுத்த நடவடிக்கை பாரிய மனித அழிவுகளின் தொகுப்பு என்ற உண்மை உலகிற்கு வெளிவரத் தொடங்கியதுடன் அந்த நிலைப்பாடு சிறிது சிறிதாக அதற்கு எதிராக திரும்பியது. பின்னர் 'நாம் யாருக்கும் கட்டுப்படமாட்டோம்' என்ற அகம்பாவ மனோநிலையின் வளர்ச்சி இன்று இலங்கையை செக்மேய்ட் பொசிஷனுக்கு தள்ளியுள்ளது. 

புலிகளும், அரசும் ஒருவரை ஒருவர் மாறிமாறி போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என வாதாடினாலும் இறுதிக்கட்ட சமர் இடம்பெற்ற ஒரு சில மாதங்களுக்குள் மட்டும் சுமார் 40000 மேற்பட்ட தமிழ் மக்கள் இருந்த இடம்தெரியாது துவம்சம் செய்யப்பட்டனர். அதிலும் இந்த படுகொலைகளில் அதிக பட்சம் இராணுவ எரிகணைத் தாக்குதல்களின் விளைவு என்பதையும் யாரும் மறுக்க முடியாது. 

எனினும் இது குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளில் ஈடுபடுவதற்கு எந்தவொரு உண்மையைக்கண்டறியும் குழுவையோ, சுதந்திரமாக ஆய்வு நடாத்தவோ அல்லது செய்தி வெளியிடவோ எந்தவொரு ஊடகத்தையோ விடாது வழிமறிக்கும் செயற்பாட்டிலேயே இலங்கை அரசு தொடர்ந்து கரிசனை காட்டுகிறது. அண்மையில் கூட இறுதிச்சமரில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாகவும், நாட்டில் தொடரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் நியாயமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் என்ற சந்;தேகத்தின் பேரில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சிலரை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

இத்தனை தடைகளையும் தாண்டி இறுதிச்சமரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை தமக்கு கிடைத்த சாட்சியங்களை வைத்து ஆய்வு செய்த அனைத்து செயற்பாட்டாளர்களும் இந்தப்போர்க்குற்றங்களின் கட்டளை மையமாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரார் கோத்தபாய ராஜபக்ஷவும் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையைத்தான் வெளியிடுகிறார்கள். எனவே இது குறித்து சர்வதேச ரீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை இந்தக்குற்றச்சாட்டுக்களை சுயாதீனமான விசாரிக்கக்கூடிய சர்வதேச ஏற்பாடொன்று தேவை என வாதிட்டு ஒரு அறிக்கையையும் கடந்த புதன் கிழமை சமர்ப்பித்திருந்தார். 

எனினும் இந்தக்கோரிக்கையை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை தூதுவர் ரவிநாதா ஆரியசிங்க முற்றாக நிராகரித்துள்ளதுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் 'நவநீதம்பிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பானதும் அநீதியானதுமாகும்' எனக்கூறி அதனை முழுமையான நிராகரித்துள்ளார். 

யுத்தத்தில் பிடிபட்ட தமிழ் கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு, கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தூசன வார்த்தைகளால் தூசிக்கப்பட்டு இறுதியில் துப்பாக்கி ரவைகளால் சல்லடையாக்கப்பட்ட ஒளிக்காட்சிகள்,  இறுதிச்சமரின் இறுதி மூன்று மாதங்களுக்குள் நோ பயர் ஷோன் என அரசால் வரையறுக்கபட்டிருந்த பகுதியில் இருந்த வைத்தியசாலைகளுக்குள் குண்டுமழை பொழிந்த காட்சிகள் என பல ஆதாரங்கள் அரசுக்கு எதிராக இருந்தும் கூட மஹிந்த அரசு அதில் ஒன்றையேனும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. போர்க்குற்றச்செயல்கள் ஒரு புறமிருக்க சர்வதேச அழுத்தங்களை திமிருடன் அலட்சியம் செய்து வருவதானது மஹிந்த அரசுக்கு பாரிய அரசியல் நெருக்குவாரத்தை வெகு விரைவில் ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்தப்பின்னணிகளிலிந்தே இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக காவியுடை அணிந்த மதவெறியர்களை ஏவிவிட்டு அடங்குங்கள் அல்லது அடக்குவோம் என எமது சமூகத்தை அனைத்து விதமான இன்னல்களுக்கும் உள்ளாக்கி வரும் மஹிந்த அரசுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை திருப்புவது ஒரு முக்கிய அரசியல் உக்தி என நாம் கருதுகிறோம். சென்றமுறை இவ்வாறான வாக்கெடுப்பொன்று இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டபோது கூட முஸ்லிம் நாடுகளின் வாக்குகளின் உதவி கொண்டே இலங்கை அரசு தனக்கெதிரான சர்வதேச அழுத்தத்திலிருந்து ஒரு கால அவகாசத்தை எடுத்துக்கொண்டது. அதற்காக நீதி, நியாயம் அனைத்தையும் குழிதோண்டிப்புதைத்து விட்டு, இலாப நோக்கத்தை மாத்திரம் முன்வைத்து செயற்படும் எமது அரசியல், ஆன்மீகத் தலைமைகள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் வாக்களிக்க வேண்டும் என்ற பாரிய பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த பிரச்சாரங்களை இவர்கள் செய்த காலங்களில்தான் ராஜபக்ஷ பரிவாரத்தின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளும், அதன் பிரச்சாரங்களும் நாட்டில் பரவலாக நிகழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அரசின் கால்களை கழுவி விட்டால் அரசு எம்மை சும்மா வாழ விடுவார்கள், புது பல சேனாக்களை கூண்டில் அடைத்து காட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என நாம் பகற்கனா கண்டதன் விளைவே இது. 

விடுதலைப்;புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பல அட்டூழியங்களை செய்தார்கள் என்பது உண்மைதான்...இரண்டு நாட்களுக்குள் ஒட்டுமொத்த வடக்கு முஸ்லிம்களையும் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்பதும் வாஸ்தவம்தான்...பள்ளிவாசல் படுகொலைகளையும், கிராமப் படுகொலைகளிலும் ஈடுபட்டார்கள் என்பதும் உண்மைதான்...அவர்களை அழிப்பதில் பிராந்திய மற்றும் சர்வதேச உதவிகள் கொண்டு மஹிந்த அரசு வெற்றி கொண்டது என்பதும் உண்மைதான்...ஆனால் அதற்காக ஒரு பாரிய மனிதப்படுகொலைகளை அரசு செய்கிறது என்ற நிலை ஏற்படும்போது நாம் நீதி தவறி செயற்படுவது எமது மார்க்கம் போதிக்கும் கொள்கை அல்ல. கொள்கையைக்கூட அலட்சியம் செய்துவிட்டு நாம் அரசுக்கு வால் பிடித்து பல முறை செயற்பட்டாலும்கூட இறுதியில் மூக்குடைபட்டு கீழே விழுந்த வரலாறைத்தான் கண்டு வருகிறோம். எனவே இம்முறை எம்மிடம் இருக்கும் அனைத்து வளங்களையும், இராஜதந்திர தொடர்புகளையும், ஊடக வசதிகளையும் பாவித்து அரசுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை வாக்களிக்கச் செய்வதில் வெற்றி கண்டால் இலங்கை முஸ்லிம்களில் இனிமேல் கை வைப்பதற்கு அரசு இரு முறை யோசித்துத்தான் கை வைக்கும்.  

No comments

Powered by Blogger.