UK Slough (ஸ்லாவ்) நகரில் இலங்கை முஸ்லிம்களின் முயற்சியில் பள்ளிவாசல் திறந்து வைப்பு
(Ash Sheikh, Al Hafil M Z M Shafeek - UK )
ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் முதன் முதலாக தமக்காக தனியான ஜும்ஆ தொழுகையை 1998ஆம் ஆண்டு Slough நகரில் (London மாநகரிலிருந்து மேற்கே லண்டன் நகரை ஒட்டியதாக அமையப் பெற்றுள்ள ஒரு அழகிய நகரம்) ஆரம்பித்து வைத்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்சமாகும். அன்றிலிருந்து தொடராக சுமார் 15 வருட காலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தருகின்ற சிறந்த உலமாக்களைக் கொண்டு ஜும்ஆ, பொது பயான் நிகழ்ச்சிகள், ரமழான் கால வணக்கங்கள், இப்தார் நிகழ்சிகள், பெருநாற் தொழுகைகைகள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கான பயான் மற்றும் வழிகாட்டல் நிகழ்சிகள் என சகல நிகழ்ச்சிகளும் Slough நகர் இலங்கை முஸ்லிம்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்று வந்தன.
வாடகை இடங்களிலேயே இந் நிகழ்ச்சிகள் யாவும் நடை பெற்று வந்த அதே வேலை 2000 ஆம் ஆண்டுகளின் பிற் பகுதியை அடைந்த போது (2007 ஆம் ஆண்டளவில்) இந்நகரில் கணிசமானதொரு தொகை இலங்கை முஸ்லிம்கள் குடியேறி இருந்ததன் காரணமாக இலங்கை முஸ்லிம்களுக்காக தனியானதொரு மஸ்ஜிதின் தேவை Slough இல் அதிகம் உணரப் பட்டது. ஆகவே அந் நாற்களில் எம் சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக 2009 ஆம் ஆண்டு நகரின் ஒரு பகுதியில் தமக்கென்றே சொந்தமாக மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீடு கொள்வனவு செய்யப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ். அப்போதிலிருந்து அவ்வீட்டில் 05 நேரத் தொழுகைகள், வார இறுதி நாற்களில் ஷரீஆ வகுப்புக்கள், சிறார்களுக்கான ஹிப்ழு மற்றும் குர்ஆன் வகுப்புக்கள் ஆகியன மிகச் சிறப்பாக நடை பெற்று வந்தன.
அப்போதிலிருந்தே Slough நகரில் வசிக்கும் எமது இலங்கை உறவுகள் மேற்கொண்டு வந்த பாரிய முயற்சியின் பயனாகவே நகரின் மையப் பகுதியில் சுமார் 10,000 சதுர அடிகள் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய ஒரு கட்டிடம் கொள்வனவு செய்யப் பட்டு சென்ற சனிக் கிழமை 22 ஆம் திகதி மாலைப்பொழுதில் மஸ்ஜித் அல் ஜன்னஹ் என்ற பெயரில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப் பட்டது. அத் திறப்பு விழாவிற்கு விசேட அதிதிகளாகவும் சொற்பொழிவாளர்களாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களும், ஐக்கிய இராஜ்ஜியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற அப்ழளுல் உலமா அஷ் ஷெய்க் ரியாளுல் ஹக் அவர்களும் அஷ் ஷெய்க் ரயீஸ் முப்தி அவர்களும் வருகை தந்திருந்ததுடன் பல உலமாக்கள், மஸ்ஜித்களின் நிருவாகிகள், கல்விமான்கள், பொதுமக்கள் என சுமார் 2300 பேர் அளவில் வருகை தந்திருந்தனர். திறப்பு விழாவுக்கு முந்திய தினம் (வெள்ளிக் கிழமை) நன்றி நவிழல் நிகழ்ச்சியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இந் நாட்டில் வசிக்கும் இலங்கை பௌத்த மத தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களுக்கான அமர்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததோடு அன்றைய தினம் ஜும்ஆத் தொழுகையும் ஆரம்பித்து வைக்கப் பட்டது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
விசாலமான இரண்டு மாடிகளையும் சுமார் 45 வாகனங்களுக்கான தரிப்பிட வசதிகளையும் கொண்ட இப் பள்ளிவாசலானது ஆண்கள் பெண்களுக்கான தொழும் இட வசதிகள், வரவேற்புப் பகுதி, வாசிகசாலை, பிரதான இமாம் தங்கும் அறை, மலசல கூடங்கள், குளியலறைகள் என அங்க சம்பூரணமான ஒரு கட்டிடம் என்றால் மிகையாகாது. தற்பொழுது Slough நகரில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் அடங்கலாக சுமார் 1000 இலங்கை முஸ்லிம்கள் வாழ்ந்து வருவது சிறப்பம்சமாகும். மஸ்ஜித் அல்ஜன்னஹ் பள்ளிவாசல் திறப்பு விழா மிக விமரிசையாக நடை பெற்ற அதே வேலை 7 லட்சத்தி ஐம்பதாயிரம் பவுண்ட்ஸ்கள் பெறுமதியுடைய இக்கட்டிடத்திற்கு இது வரை நான்கு லட்சத்தி இருபத்தையாயிரம் பவுண்ட்ஸ்களே செலுத்தப் பட்டுள்ளன.வரக்கூடிய 2014 ஜூன் மாதம் முடிவதற்குள் மிகுதமுள்ள 3 லட்சத்தி இருபத்தையாயிரம் பவுண்ட்ஸ்களும் (இலங்கை நாணயத்தில் சுமார் 07 கோடி ரூபா ) திரட்டப் பட்டு செலுத்தப் பட்டாலே இவ் இறை இல்லத்தை சொந்தமாக்கி அல்லாஹ்வின் பெயரில் வக்ப் செய்ய முடியுமாக இருக்கும்.
ஆகவே ஐக்கிய இராச்சியத்திலும் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள்,பரோபகாரிகள், தனவந்தர்கள் முன்வந்து இத் தூய காரியத்திற்காக தம்மாலான உதவிகளை வழங்கி அல்லாஹ்விடம் நெருக்கத்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்குமாறு அல் மஸ்ஜிதுல் ஜன்னஹ் நிருவாகம் தயவாய் வேண்டுகிறது.
உதவி புரிய விரும்புவோர் தொடர்பு கொள்வதற்கு:
(01) Mohamed Anees (President of Masjid Al Jannah) anees4r@aol.com - 004477 6677 1347
(02) Uzair Omerdeen (Secretary of Masjid Al Jannah) uzairomerdeen@hotmail.com - 004479 8497 6526
Bank Account Detaiis :
Bank : HSBC
A/C Name : SLMA - UK Building Fund
Sort Code : 40-47-02
A/C Number : 61397001
இந் நற்காரியத்திற்காக உதவி புரிந்த, புரிய இருக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
" ஜசாக்குமுல்லாஹு கைறல் ஜசாஹ் "
Post a Comment