இலங்கையை ஆக்கிரமித்திருக்கம் Facebook மோகம்
(இராமானுஜம் நிர்ஷன்)
உலகளாவிய ரீதியில் பேஸ்புக் வலையில் விழுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இலங்கை மாத்திரம் விதி விலக்கல்ல. பேஸ்புக் பற்றி அறிந்துகொண்டு அதனைப் பயன்படுத்துபவர்கள் சாதகமான பலன்களை அனுபவிக்கும் அதேவேளை அதுபற்றிய அடிப்படையைக் கூட அறிந்துகொள்ளாமல் பயன்படுத்துபவர்களின் கதி ஆழம் அறியாமல் காலை விட்டது போலத்தான்..!
அண்மைக்காலமாக பேஸ்புக் என்ற வார்த்தை இலங்கையில் பெரிதும் பேசப்படும் சொல்லாகவும் சர்ச்சைக்குரிய தலைப்பாகவும் மாறியிருக்கிறது. பூலோகமயமாதலின் விளைவாக நாளு க்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துச் செல்வதைக் காண க்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள், சமூக வலையமைப்புக்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகிறது.
ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமாணத்தையும் கண்டுகொண்டிருக்கும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடியாதுள்ளது. சமூக வலைத்தளங்கள் பல இருந்தாலும் கூட பேஸ்புக்கின் ஆதிக்கமே நம்நாட்டில் மேலோங்கிக் காணப்படுகிறது.
ஆம்! சமூக வலைத்தளங்களில் இளையோரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது பேஸ்புக். பெரும்பாலான இளைஞர்க ளின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக இது மாறிவிட்டது. சுருக்கமாகச் சொல்வதானால் பேஸ்புக் இல்லை என்றால் அன்றைய நாளில் சுவாரஷ்யமே இல்லை என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.
பேஸ்புக் உபயோகம் காரணமாக அடுத்தடுத்து கிடைத்த தற்கொலை செய்திகளும் அவை தொடர்பாக தொடர்ச்சியாக கிடைத்து வரும் முறைப்பாடுகளும் இலங்கையர்களை ஆழமாக சிந்திக்க வைத்திருக்கிறது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று "இலங்கையில் சமூக வலைத் தளங்களும் முகநூலும்: சாதகங்கள், பாதகங்கள், அவலட்சணங்கள்" என்ற தலைப்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
தேசிய மனநல மன்றத்தின் சார்பில் வைத்தியர் எம். கலபத்தி, களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தினித்தி ஜயசேகர, லங்கா சுமத்ரயோ அமைப்பின் உறுப்பினர்களான மனிஷா, ஜோமோ உதுமான் ஆகியோரின் கலந்துரையாடலு க்கு தலைமை வகித்ததுடன் ஊடகவியலாளர்கள், பாடசாலை அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இளையோரின் வாழ்க்கையில் பேஸ்புக் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். போலியான பேஸ்புக் கணக்குகள் மூலம் ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. உண்மையில் பேஸ்புக் குறித்து இருவேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதன் நன்மை தீமைகள் குறித்து அறிந்து சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் பட்சத்தில் தீங்கு ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.
களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் தினித்தி ஜயசேகர பேஸ்புக் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையே இரு க்கும் அபிப்பிராயங்கள், பிரச்சினைகள் குறித்து தயாரிக்கப்பட்ட செயற்றிட்டத்தை கலந்துரையாடலின்போது முன்வைத்தார்.
அந்தத் தகவல்களின் பிரகாரம் 40 வீதமான மாணவர்கள் தமது கையடக்கத் தொலைபேசி இலக்கம் உள்ளடங்களாக சுயவிபரங்கள் அனைத்தையும் பேஸ்புக்கில் ஏனையோர் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் அவ்வாறு தகவல் வழங்கியிருப்பது தாங்கள் அறியாமல் நடந்த விடயம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவ்வாறெனின் பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற விடயத்தை அவர்கள் அறியவில்லை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
இலங்கையை பொறுத்தவரையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் சுயபாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளும் வகையில் பாவனையாளர்கள் செயற்படுவதில்லை. குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கிறது.
வைத்தியர் கலபத்தி அங்கு தகவல்களை பரிமாறுகையில், பேஸ்புக் பாவனையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. போதிய விழிப்புணர்வின்மை காரணமாக பேஸ்புக்கில் தான்தோன்றித்தனமாக செயற்படும்போது ஏற்படும் பின்விளைவுகளை தாங்க முடியாதவர்களாக அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.
மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கக் கூடிய இவ்விடயம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் நாளொன்றில் சராசரியாக 2 மணித்தியாலங்களை அதில் கழிப்பதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ அமைப்பின் சார்பில் அங்கு கலந்துகொண்டிருந்த மனிஷா கருத்து தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசிகள் பாவனைக்கு வந்த ஆரம்ப காலங்களில் அவை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டன. எனினும் தற்போது கையடக்கத் தொலைபேசி இல்லாதவர்களை காணக் கிடைப்பதே அரிது. அந்த வகையில் அதன் முக்கியத்துவம் அதிகரித்துக் காணப்படும் அதேவேளை தீங்குகளுக்கும் காரணமாக அமைவதை யும் யாரும் மறுக்க முடியாது. அதேபோன்றுதான் பேஸ்புக் தொடர்பிலும் அதனை உபயோகிப்பது பெரும் தவறாகும் என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எழுப்பப்படுகிறது.
எனினும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் Social Media எனும் தனியொரு துறையாகவே மாற்றம் கண்டு தொழில்சார் வாய்ப்புகளுடன் வளர்ச்சியடைந்து வருகிறது. இதன்மூலம் தீமைகள் ஏற்படுவத ற்கு வாய்ப்புண்டு. எனினும் சரியான முறையில் கையாளும்போது எதிர்மறையான பின்விளைவுகள் தவிர்க்கப்படலாம் என்பதே உண்மை.
இலங்கையில் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் பேஸ்புக் தொடர்பாக 300 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கீழ் இயங்கும் இலங்கை கணனி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா கேசரிக்குத் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது பேஸ்புக்கில் போலியான கணக்குகள் தயாரித்தல் தொடர்பிலான குற்றச் செயல்களே அதிகரித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பலர் முறைப்பாடு செய்வதற்கு தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மைதான்.
நண்பர் வட்டத்துடன் தொடர்பு இல்லாத வேறொரு நபரை பேஸ்புக்கில் இணைக்கும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. காமம் கலந்த வார்த்தைகளை மற்றொருவரின் தனிப்பட்ட கணக்குக்கு அனுப்புதல், நிர்வாண தோற்றமுடையோருடைய தோற்றங்களை உண்மை முகங்கொண்டோருக்குப் பொருத்தி புகைப்படமாக வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முறையற்ற செயற்பாடுகள் இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
சில உதாரணங்கள்
உதாரணமாக, கடந்த சில மாதங்களாக கிறீஸ் மனிதன் என்ற பெயரில் பேஸ்புக்கில் உலா வரும் நபரின் செயற்பாடுகள் இளம் பெண்கள் பலரை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிறீஸ் மனிதன் பெண்களுடன் பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை அனுப்பி அச்சுறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணைகளை இலங்கை கணனி அவசர தயார் நிலைக் குழு மேற்கொண்டு வருகிறது.
அதேபோன்று ஆடைத் தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் பெண்ணொருவர் அளித்துள்ள முறைப்பாடொன்று அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய பள்ளிக்கால நண்பர் ஒருவரின் பெயரில் நட்பு அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட அப்பெண் பேஸ்புக் மெசேஜ் மூலம் உரையாட ஆரம்பித்திருக்கிறாள். இந்த நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க இருவரும் முகம் பார்க்காமல் காதல் வயப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தன்னுடைய தனிப்பட்ட படங்கள் பலவற்றை அந்த இளைஞருக்கு அனுப்பியிருக்கிறாள். எனினும் இளைஞரின் கைத் தொலைபேசி இலக்கத்தை அப்பெண் பலமுறை கேட்டும் அவர் தர மறுத்திருக்கிறார்.
இந்நிலையில் ஒருநாள் இரவு வேளை யில் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருக்கும்போது தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் இந்த இளைஞரிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது. அந்த இளைஞர் மதுபோதையில் இருப்பதாகவும் தான் அழைக்கும் இடத்துக்கு வருமாறும் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே கோபமடைந்த அந்த இளைஞர் "நீயும் நானும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் என்னிடம் இருக்கின்றன. நீ வராவிட்டால் அவற்றை உன் வீட்டு க்கு அனுப்புவேன்" என மிரட்டியுள்ளார். மறுநிமிடமே இளைஞர் ஒருவருடன் அந்தப் பெண் ஒன்றாக இருக்கும் பல படங்கள் மெசேஜ் மூலமாக அவளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி!
அந்த இளைஞர் தன்னுடைய பள்ளிக்கால நண்பர் அல்ல என்பதை அறிந்து கொண்ட அதேவேளை தான் அனுப்பிய படங்களை கணனி தொழில்நுட்பங்களின் மூலமாக அந்த இளைஞரோடு இணைத்திருந்தமை தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண் முறைப்பாடு செய்ததன் காரணமாக போலியான பெயரில் இயங்கிய அந்த பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.
இதுமாத்திரமல்ல, பேஸ்புக் கணக்குகளின் கடவுச்சொல்லினை திருடுதல், ஒரே பெயரில் இன்னுமொரு கணக்கினை உருவாக்குதல், அவசியமற்ற தொடுப்புகளை (Links) ஏனையோருக்கு அனுப்புதல், தரவேற்றப்படும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு என்ன காரணம்?
சமூக வலைத்தளங்கள் குறிப்பாக பேஸ்புக்கினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவை கணக்கு உருவாக்குவதற்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
எவ்வாறு தவிர்க்கலாம்-?
* தேவையற்ற தொடுப்புகள் (Links), கோப்புகளை சொடுக்கும் (Click) போதும் தரவிரக்கம் செய்யும்போதும் இருமுறை சிந்தித்தல்.
* பயனர் கணக்கு, கடவுச் சொற்களை தனிப்பட்ட ரீதியில் பேணுதல்.
* கடவுச்சொல்லை இலக்கங்கள், குறியீடுகளுடன் கூடியதாக உருவாக்குதல்.
* தேவையற்ற, தெரியாத நபர்கள் குறித்து கவனமாக இருத்தல் குறிப்பாக சமூக வலைப்பின்னல்களில் போலிப் பெயர்களில் விடுக்கப்படும் அழைப்புகளை தவிர்த்தல்.
* போலியான பெயர்களில் காணப்படும் வைரஸ் எதிர்ப்பு (Antivirus) கோப்புகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல்.
* நேர்மையானோரை மாத்திரம் இனங்கண்டு தகவல்களை பரிமாறுதல்
* சமூக வலையமைப்புகளைப்போல வடி வமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள போலி வலையமைப்புகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல்
* இணையத்தளங்கள், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி அறிதல்.
* வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுகையில் அவதானம்
ஆகிய வழிமுறைகளையும் பாதுகாப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள் வதன் மூலம் குற்றச்செயல்களைத் தவிர்க் கக் கூடியதாக இருக்கும். இவை தவிர பேஸ்புக்கில் கணக்கினை உருவாக்கும் போது எந்தெந்த தனிப்பட்ட தகவல்களை (விலாசம், தொலைபேசி இலக்கம், ஏனையவை) கொடுக்கலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
தனிப்பட்ட படங்களை தரவேற்றும் போது நெருங்கிய நண்பர்கள் மாத்திரம் பார்க்கும் வண்ணம் செய்முறை அமைத்து க்கொள்ள வேண்டும். இணைய உலகின் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவ னம்கொள்ள வேண்டும். நடைமுறை உலகில் இளம்பராயத்தினர் தெரிந்தோ தெரியாமலோ இணைய உல கிற்குள்வெகு சீக்கிரமாக உள்வாங்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்ள். இவர்கள் அனைவருமே இணையக் குற்றங்கள், விதி முறைகள் குறித்து அறிந்து வைத்தி ருக்கிறார்களா என்பது கேள்வி க்குறியே.
இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை கணனி அவசர தயார் நிலைக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம். மின்னஞ்சல் முகவரி – slcert@cert.gov.lk
தொலைபேசி இலக்கம் - 11 269 1692
எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கையில் என்ற கருப்பொருளை வாழ் வோடு பின்னிப்பிணைந்துவிட்ட இணை யத்தள, சமூக வலையமைப்புகளை உப யோகப்படுத்துகையில் சிந்திக்க வேண்டி யது கட்டாய தேவையாகும்.
Post a Comment