Header Ads



தேசமான்ய, தேசபந்து பட்டங்கள் வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம்..!


தேசமான்ய, தேசபந்து போன்ற தேசிய நன்மதிப்பு மிக்க பட்டங்கள் அனைத்தும் ஜனாதிபதியினாலேயே வழங்கப்படுவதாகவும் வேறு நிறுவனங்கள் இதுபோன்ற பட்டங்களை சட்ட விரோதமாக வழங்குவது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம்.பி. ஹர்ச டி சில்வா எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் .

தேசமான்ய, தேசபந்து, லங்காபுத்ர, கலாநிதி போன்ற கெளரவப் பட்டங்களை வழங்குவது எந்த நிறுவனம் அல்லது வழங்கும் நபர்கள் யார் என்பது தொடர்பில் தகவல்களை வழங்க முடியுமா என ஹர்ஷ டி சில்வா எம். பி. கேள்வி எழுப்பினார். 

அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:- தேசபந்து மற்றும் தேசமான்ய போன்ற பட்டங்கள் ஜனாதிபதியினாலேயே வழங்கப்பட்டு வருகின்றன. வேறு எந்தவொரு அரச நிறுவனங்களினாலும் இது போன்ற பட்டங்கள் வழங்கப்படுவதில்லை. 

இது போன்ற பட்டங்களை வழங்க எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை; ஐ. தே. க. எம். பி. அஜித் பீ. பெரேரா இது குறித்துத் தெரிவிக்கையில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்நாட்டு, சர்வதேச நிறுவனங்களினால் வழங்கப்படாத பட்டங்கள் பாராளுமன்ற ஆவணங்களில் எம். பிக்கள் சிலரது பெயர்களுக்கு முன்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார் தேசமான்ய, தேசபந்து, லங்காபுத்ர, கலாநிதி மற்றும் ஸ்ரீலங்கா ஜனரஞ்சன போன்ற பட்டங்கள் ஜனாதிபதியினாலேயே வழங்கப்பட வேண்டியவை எனக்கூறப்படுகிறது. 

எனினும் பல்கலைக்கழகங்களினாலோ அல்லது சர்வதேச நிறுவனங்களினாலோ வழங்கப்படாத பட்டங்கள் பாராளுமன்ற ஆவணங்களில் எம் பிக்கள் சிலரின் பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை நீக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஜித் பி. பெரேரா எம்.பி. சபையில் கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து சபாநாயகர் ராஜபக்ஷ இது விடயம் தொடர்பில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.