Header Ads



அரசாங்கத்துக்கு சாம்பிராணி பிடிப்பவர்கள், எமது கட்சிக்குள்ளே இருக்கின்றனர் - ரவூப் ஹக்கீம்

பிரபாகரனும், நானும் பேச்சுவார்த்தை நடத்தியதையும்;, உடன்படிக்கை செய்ததையும் சுட்டிக்காட்டி கைகுலுக்கும் படங்களை தேர்தல் நெருங்கிவரும் இந்தச் சந்தர்ப்பத்தில்  அரசியல் நோக்கங்களுக்காக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.  இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்: 

மேல்மாகாணசபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேருவளை தொகுதியில் மருதானையிலும், பாணந்துறை தொகுதியில், சரிக்கமுல்லையிலும் சனிக்கிழமை மாலை (22) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.  அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது: 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறித்த காட்டமான விமர்சனங்கள் இப்பொழுது பரவலாக மேற்கொள்ளப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸூக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கான வாக்குகள் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கின்றது என்றும் கூறுகின்றார்கள்.  முஸ்லிம் காங்கிரஸை பற்றி ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதற்கான அடிப்படை, பொதுவாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அரசாங்கத்தோடு அதிருப்தியாக இருக்கின்றார்கள் என்பதால் அதை முதலீடாக வைத்து, முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய ஒரு சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, அரசாங்கத்தோடு இருந்துகொண்டு நான் வீராவேச பேச்சுகளை பேசுவதைவிட, எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரவேண்டும் என்கிறார்கள். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பற்றி வேறான பார்வைகள் இருக்கலாம். இவற்றை விட ஐக்கிய தேசிய கட்சி காரர்கள் முஸ்லிம் காங்கிரஸ் முந்திகொண்டு வெளியே வந்து விட வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறார்கள்.  எனக்கு மானம், ரோஷம் இருந்தால் வெட்கமில்லாமல் அரசாங்கத்தோடு இருக்காமல் வெளியேற வேண்டும் என்று எனது சக அமைச்சர்கள் சிலரும் கூறி வருகின்றனர். அரசாங்கத்தில் உள்ள தீவிரவாத போக்குள்ள அமைச்சர்கள் சிலரும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும், முஸ்லிம் பிரதி அமைச்சர் ஒருவரும் அவ்வாறே கூறி வருகின்றனர். அத்துடன் அரசியல் அரிச்சுவடி தெரியாத, கற்றுக்குட்டி முஸ்லிம் பிரதி அமைச்சர் ஒருவரும் அர்த்தமில்லாமல் உளறிக்கொட்டுகிறார். 

நாங்கள் வெளியேறினால் அரசாங்கம் இன்னும் மோசமாக தீவிரவாத சக்திகளில் பணயக்கைதியாக மாறிவிடும் என எதிர்க்கட்சியினர் எதிர் பார்த்திருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் இந்த விமர்சனங்களின் உண்மைத்தன்மை என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய அச்ச உணர்வே இதற்கான உண்மைக் காரணமாகும்.  ஜனாதிபதி மிகவும் பலமான நிலையில் இருக்கின்றார் என்ற ஒரு பார்வை இருக்கின்றது. அவ்வாறிருக்க,  அவர் இவ்வாறான விடயங்களை சற்று அடக்கி வாசித்தால் என்ன என்ற நிலைமைக்கு வருவதற்கான பின்னணி என்ன? என்பதை நாங்கள் மிக கூர்மையாக அவதானிக்க வேண்டும். 

எமது செல்வாக்கு அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சூடாக எதனையும் பேசினால், எம்மீதுள்ள அச்சத்தின் காரணமாக இப்பொழுது அடிக்கடி அமைச்சர்களை அழைத்துவந்து அமர்த்தி, பத்திரிகை மாநாடுகள் நடத்தி எங்களை விமர்ச்சிக்க முற்பட்டுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸை ஜனாதிபதி கடிந்து கொண்டதால் ஏற்படப்போகும் பாரதூரம் பற்றிய அச்சமே இதனைச் செய்ய தூண்டியிருக்கிறது. அதுதான் முஸ்லிம் காங்கிரஸின் பலம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியர் பிரபாகன் எழுதிய ஆசிரிய தலையங்கங்களின் நூல் வெளியீட்டு விழாவில் வடமாகாண முதல் அமைச்சர், ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனும், நானும் கலந்து கொண்டோம். அதில், ஓர் ஆசிரியர் தலையங்கத்தை சுட்டிக்காட்டி, நான் ஆற்றிய உரை மறுநாள் பத்திரிகைகளில் வெளிவந்த போதும், அது ஊடக மாநாட்டில் போய் முடிந்தது. 

இது எதனை காட்டுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு முதிர்ச்சியற்ற இயக்கமல்ல. பலமான இயக்கம். இதன் தாக்கம் உடனடியாக பிரதிபலித்து விடுகிறது. இதனை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அரசாங்க பேச்சாளர்களில் முக்கியமான ஒருவரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும எம்மைப்பற்றி சில கருத்துகளை கூறியிருக்கிறார். எனது நண்பரான அவர்தான் எமது பாராளுமன்ற உறுப்பினர் சிலரை அரசாங்கம் பின்கதவால் பெற்று கொள்ளப்போகின்றது என்ற தகவலை முதல் முதலாக என்னிடம் கூறியதுடன், தனித்தனியாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை எடுப்பதில் பிரயோசனமில்லை என்றும் ரவூப் ஹக்கீமுடன் சேர்த்து எடுத்தால்தான் அது பலமிருக்கும் என்றும் அரசாங்கத்திடம் தெரிவித்தவர். அவரே இப்பொழுது அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய அவருக்குரிய கடப்பாட்டின் காரணமாக, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளாததன் காரணத்தினால் மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்பித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான என்னை, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சு வார்த்தைக்கு போனவர் என்றும், பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்தவர் என்றும் குறிப்பிட்டு பிரபாகரன் முஸ்லிம்களுக்கு இழைத்த அநியாயங்களுக்காக ஹக்கீம் எதையும் செய்தாரா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படி செய்யாதவர் இப்பொழுது அரசாங்கம் தவறு செய்ததாக எவ்வாறு கூற முடியும் என்றும், இதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் கேட்டுள்ளார். 

நாட்டை காப்பாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்காக ஜெனீவாவுக்குச் சென்று ஒருமாத காலம் அங்கு தங்கி இருந்ததையும், வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்ததோடு, அரபு நாடுகளின் ஆட்சி தலைவர்களையும் ஜனாதிபதியின் கடிதத்துடன் சந்தித்ததiயும் பற்றி முன்னரும் கூறியிருக்கிறேன்.  அவ்வாறு இருக்க நாட்டில் சமய சகிப்புத்தன்மை இல்லாமல் போகும் சூழ்நிலையில், அரசாங்கமம் பாராமுகமாக இருக்கின்றது, அலட்சியப் போக்குடன் நடக்கின்றது என்பன பற்றி பலமான கேள்விகள் சமூகத்தின் மத்தியில் இருந்து எழும்பொழுது, நாம் அரசாங்கத்தின் உள்ளிருந்து அது பற்றிய எமது கருத்துக்களை, கண்டனங்களை தெரிவித்து வந்தோம். ஆனால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது. விடுதலைபுலிகளை ஒழித்த இந்நாட்டின் உளவு பிரிவினருக்கு முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எங்கிருந்து பண உதவியும், ஒத்தாசையும் வழங்கப்படுகிறது என்பதை ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதான் விசித்திரமாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் நடந்த பொழுது நாம் காட்டசாட்டமான எமது கருத்துக்களை சொன்னோம். 

நான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும், இதுவரை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மீது, உரிய கவனம் செலுத்தப்படாதது எதனை உணர்த்துகிறது? 
இந்த அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டுவர வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் சம்பந்தமான விடயங்களை அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாங்களும் சில விடயங்களை அடக்கி வாசிக்கலாம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் மக்களுடன் தனது பக்க நியாயங்களை பகிர்ந்து கொள்கிறது.  பிரபாகரனும், நானும் பேச்சுவார்த்தை நடத்தியதையும்;, உடன்படிக்கை செய்ததையும் சுட்டிக்காட்டி கைகுலுக்கும் படங்களை தேர்தல் நெருங்கிவரும் இந்தச் சந்தர்ப்பத்தில்  அரசியல் நோக்கங்களுக்காக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார்கள். 

அவரை போன்றவர்தான் இவர். இவர் பயங்கரமான பிரிவினைவாதி என்று எடுத்துகாட்ட முற்படுகின்றார்கள். நான் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை எமது தக்க வைத்து கொள்வது சாத்தியமாகுமா என்று சாடையாக தொட்டு சொன்னதுதான் தாமதம், அது ஆத்திரத்தை கிளப்பி விட்டது.  உடனே என்னை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் இவற்றை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறோம். ஏன் என்றால், எமது மக்களுக்கு உண்மை என்னவென்பது தெரியும். 

ஆனால், இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும். தங்களது சொந்த நலன்களுக்காக ஊடகங்களை பாவித்து, யாரை யாரை தாக்க வேண்டுமோ அவர்களுக்கு சேறு பூசுவது மிகவும் கீழ்தரமான செயலாகும். ஊடகங்களை அவர்கள் எவ்வாறு கையாண்டாலும், நேர்மையாக சிந்திப்பவர்களுக்கு உண்மை புலனாகும். ஊடகவியலாளர்களை நான் எப்பொழுதும் மதிக்கிறேன். புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தின. அவ்விரு தரப்பும் சமமாக கணிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் அவ்வாறு நடந்தது. முஸ்லிம்கள் ஒரு சமதரப்பாக பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆவேசமும், அழுத்தமும் முஸ்லிம்கள் மத்தியில் இருந்தது. ஆனால் தனித்தரப்பாக கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்த நாட்டின் அரசியல் தலைவர்களில் ரணில் விக்கிரமசிங்க ஒப்பந்தம் செய்தால் அதை கௌரவிப்பவர். எனவே, புலிகளுடன் பேச்சுவார்தை நடக்கும் பொழுது, முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முஸ்லிம் காங்கிரஸூம் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால், அரசாங்கத்தோடு மட்டும்தான் பேசுவோம் என்று அப்போது புலிகள் சொல்லி விட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அந்த பேச்சு வார்த்தை குழுவில் இருக்க கூடாது என புலிகள் நிபந்தனை விதித்திருந்தனர். அந்த அழுத்தம் நோர்வே தூதுவர் ஊடாக ரணில் விக்கிரம சிங்கவுக்கு கொடுக்கப்பட்டது. 

பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட போகிறது. ஆரசாங்கக் குழுவில் கூட உங்களை உள்வாங்குவதற்கு புலிகள் எதிர்க்கின்றனர் என்று ரணில் விக்கிரம சிங்க தொலைபேசியினூடாக என்னிடம் சொன்னார். பின்னரும் நோர்வே தூதுவரும், ரணில் விக்கிர சிங்கவும் என்னிடம் கதைத்தனர்.  எங்களது பலத்தினால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தால் எங்களது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாதா என ரணில் விக்கிரசிங்கவிடம் காட்டமாக கேட்டோம். 

பின்னர் நான் லண்டனுக்குச் சென்றேன்;. அங்குள்ள நோர்வே தூதரகத்தில்  நானும், அன்டன்பால சிங்கமும் 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னர், எரிக் சொல்ஹெய்ம் அங்கே எம்முடன் இருந்தபோது, பேச்சுவார்த்தைக் குழுவில் முஸ்லிம்கள் இடம்பெறுவதை புலிகள்; தடுப்பதென்பது, இந்த சமாதான பேச்சுவார்த்தையை முஸ்லிம்கள் முழுமையாக நிராகரிப்பதாக மாறிவிடும் என்றேன். 

செய்மதி தொலைபேசியில் சொல்ஹெய்ம் வன்னியில் இருந்த பிரபாகரனுடன் நேரடியாக தொடர்புகொண்டார். அங்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. நோர்வே தூதரகம் அறிக்கை விட்டது. முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு வார்த்தையில் தனித்தரப்பாக பங்குபற்றுவதற்கான ஒரு சூசகமான வஷயத்தை அங்கு சொன்னார்கள். இவை அந்தந்த கட்டங்களில் நடந்த விடயங்கள். இவற்றை நாம் வெளியில் கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் இப்பொழுது, அமைச்சர் டலஸ் அழகப்பெரும சவால் விடுகிறார். 

எங்களுக்கும், பிரபாகரனுக்கும் இடையிலான சந்திப்பை பொறுத்தவரை கிளிநொச்சிக்கு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தநாள்  (ஏப்ரல் 13ஆம் திகதி) அகஸ்மாத்தாக  எனது பிறந்தநாளாக இருந்தது. அதற்கும் கதை கட்டப்பட்டது. பிரபாகரனோடு நான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டபோது கூட இருந்தவர்கள் பலர் உள்ளனர். அமைச்சர் அதாவுல்லாஹ்வும் பின்னால் நின்று கொண்டிருந்தார். எல்லோரும் உடன்பட்டுதான் இந்த விடயத்தைச் செய்தோம். அந்தக்கட்டத்தில் மிக தெளிவாக  மூன்று மணிநேரம் புலிகளின் தலைவரோடு பேசினோம். வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது முன்னைய வசிப்பிடங்களுக்குச் சென்று குடியேறுவது பற்றியும் பேசப்பட்டது. 

நான் பிரபாகரனிடம் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் தங்களது இயக்க வேலைகளை முன்னெடுப்பதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படுவதாகவும்,  அதற்காக தமிழ் வியாபாரிகள் கப்பமாக அன்றி, அவர்கள் சுயமாக தருவதாகவும், தமிழ் கடைகளில் மட்டும் சென்று அறவிடும் பொழுது, அவற்றின் உரிமையாளர்கள் ஏன் முஸ்லிம் கடைகளில் எடுக்காமல் எங்களிடம் மட்டும் எடுக்கின்றீர்கள் என்று கூறுவதால் அதற்கு மறுமொழி சொல்ல முடியாதிருந்ததாகவும் கூறினார். அதற்கு நான் அவரிடம் உங்களது போராட்டம் முஸ்லிம்களையும் அரவணைத்து செல்கின்ற போராட்டமாக இருக்கவில்லை என்றேன். ஊர் ஊராக சாரி சாரியாக முஸ்லிம்களின் படுகொலை சம்பவங்கள் நடந்தன. அதற்கு பலவிதமான காரண காரியங்கள் சொல்லப்படலாம். குத்திக்காட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்களிடம் அறவீடு மேற்கொண்டால் அது கப்பமாகவன்றி, வேறெதுவாகவும் இருக்க முடியாதென்றேன். 

உடனடியாக மறுநாளில் இருந்து முஸ்லிம்களிடம் கப்பம் அறவிடுவதை நிறுத்த வேண்டுமென பிரபாகரன் உத்தரவிட்டார். ஆனால், கிழக்கில் இருந்த புலித் தலைமைகள் அவரது கட்டுப்பாட்டை மீறியதை அடுத்து வந்த வாரங்களில் நாங்கள் பார்த்தோம். அங்குதான் கிழக்கில் புலிகளுக்கிடையிலான முதலாவது பிளவு ஏற்பட்டது என்று நான் கூறுவேன். வடக்கில் இருந்த பிரபாகரனின் ஆணையை அங்கிகரிக்க கிழக்கு புலிகள் விரும்பவில்லை. அதில் இருந்து ஆரம்பித்த பிளவு தொடர்ந்தது. அது அரசாங்கம் இந்த யுத்தத்தை வெல்வதற்கான ஒரு சூழலுக்கும் வழிவகுத்தது. 

இப்பொழுது நடந்தவற்றை திரிபு படுத்தி கூற முயற்சி நடக்கிறது. பிரபாகரனும், நானும் கையொப்பமிட்ட ஆவணம் இருக்கின்றது. சர்வதேச சமூகம், நோர்வே ஏற்பாட்டாளர், இந்நாட்டு அரசாங்கம் ஆகிய தரப்புகளில் இந்த விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு கிடைத்தது. இவ்வாறான காரியங்களில் ஈடுபடாமல் எமது மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண முடியாது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டில் சமாதானத்தை நிலவ செய்திருக்கிறார். அப்பொழுது இந்நாட்டு பெரும்பான்மை மக்கள் முன்னர் யுத்தம் நடந்த காலத்தில் தோல்வி மனப்பான்மையோடு இருந்தனர். ஜனாதிபதி அவர்களை வெற்றி மனப்பான்மைக்கு இட்டுச் சென்றிருக்கிறார்.

இப்பொழுது அமைதி நிலவ கூடிய சூழ்நிலையில் ஒரு பயங்கரவாதம் தலைதூக்கி இருக்கிறது. ஆனால், அதற்கு வேறொரு பயங்கரவாதத்தைதான் முன்னிலை படுத்துகின்றார்கள். முஸ்லிம்களின் பயங்கரவாதம் என்றவொன்று பள்ளி வாசல்களிலும், மதரஸாக்களிலும் ஏற்பட்டு வருவதாக கூறுகிறார்கள். வெளிநாட்டு பணத்தைக் கொண்டும், உதவிகளைக் கொண்டும் இஸ்லாமிய பயங்கரவாதம் இங்கு முன்னெடுக்கப்படுவதாக தேவையில்லாத புரளி கிளப்பப்படுகிறது. 

இந்த நாட்டின் நீதியையும், சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கான ஏற்று கொள்ளப்பட்ட வழிமுறைகள் உள்ளன. அவ்வாறு இருக்கத்தக்கதாக, தாங்கள் உத்தியோகபூர்வமற்ற பொலிசார் எனறு தங்களை கூறக்கொண்டு பொதுபலசேனா அச்சுறுத்தல் விடுக்கிறது. மூடிய வீட்டுக்குள் கூட தொழுகையை நடத்தவிட மாட்டோம் என்று கூறுமளவுக்கு அந்த இனவாத கும்பலின் அட்டகாசம் அத்துமீறிப் போய் இருக்கின்றது.  இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களின ஆத்திரம், ஆவேசம் என்பன கட்டுக்கடங்காமல் போகும் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்குள் இருப்பது எதிர்கட்சியினர் உட்பட  பலருக்கு அஜீரணமாக இருக்கின்றது. எமது கட்சியை அழிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதால்;, எமது அணியையும் பாதுகாத்துகொண்டு, சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய காரியங்களில் நாங்கள் ஈடுபடவேண்டியுள்ளது. 

அரசாங்கத்துக்கு  சாம்பிராணி பிடிப்பவர்கள் சிலர் எமது கட்சிக்குள்ளே இருக்கின்றனர். இவ்வாறு அரசாங்கத்திற்கு சாம்பிராணி பிடிப்பவர்களை சமூகமும் விரும்புவதில்லை. இவ்வாறு கூஜா தூக்கும் வேலையை சிலர் செய்கின்றனர். அரசாங்கத்துக்கு நெருக்கத்தை காட்டி கொள்வதன் மூலம் தங்களுக்கு ஏதும் தூவுவார்கள் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறான காரியத்தில் ஈடுபடுவதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும், எமது கட்சி காரர்கள் சிலரையும் நான் கண்டித்திருக்கின்றேன். அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் யாருடைய தேவைகளுக்காகவும் சூழ்ச்சிகளில் ஈடுபடும் கட்சியல்ல. மிகவும நேர்மையாக அரசியல் செய்கின்ற கட்சியாகும், மனித உரிமை பேரவை கவனத்தில் கொண்டுவரும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அரசியல் அமைப்பிலும் அது காணப்படுகின்றது.  அடுத்து வரும் இரு முக்கிய தேர்தல்களில் இச்சமூகம் இழந்துவிட்ட பேரம் பேசும் சக்தியை மீட்டிக் கொள்ள வேண்டும். அவற்றை முன்னிறுத்தி இந்த மாகாணசபை தேர்தலில் உங்கள் வாக்கு பலத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.  

No comments

Powered by Blogger.