Header Ads



அச்சமற்று ஒலிக்கும் குரல்கள் முஸ்லிம் சமூகத்திற்கு அவசியத் தேவை..!

(லதீப் பாரூக்)

முதுகெழும்பற்ற அரசியல் தலைமைகள், தமது சொந்த நலன்களுக்காக செயற்படுகின்ற வியாபாரிகள், ஊடகவியலாளர்கள்,  மற்றும் இன்னும் பல்வேறு தளங்களில் சோரம் போகின்றவர்கள்.... இது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலையெழுத்தாகப் போய் விட்டது. அச்சமில்லாமல் தமது கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்து, முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுக்கின்ற தலைமைகளைக் காண்பது மிகக் கடினமானதாக இன்று இருக்கின்றது. ஆனந்தி சசிதரன் போல, அச்சமற்று ஒலிக்கின்ற குரல்கள்தான் இன்று முஸ்லிம் சமூகத்திற்கு அவசியத் தேவை. சோரம் போகின்றவர்களும், சமூகத்தின் தலைவிதியை அடகுக் கடையில் வைப்பவர்களும் அல்லர்.     கடந்த செவ்வாயன்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அவர்களுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சிலர் உத்தியோகப்பற்றற்ற சந்திப்பொன்றை மேற்கொண்டார்கள். அதில் இடம்பெற்ற நிகழ்வுகளை அவதானித்தால், நான் மேலே சொன்ன விடயம் எந்தளவு சீரியஸானது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.            முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்து வருகின்ற சீரியஸான பிரச்சினைகள் மற்றும், சமூகங்கள் இடையிலான நல்லுறவிற்கு வேட்டு வைக்கின்ற வகையில் இடம்பெற்று வருகின்ற அம்சங்கள் தொடர்பில், பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குரிய அருமையான சந்தர்ப்பம் இச்சந்திப்பில் காணப்பட்டது.   

இருப்பினும், கலந்து கொண்டவர்களில் இருவரைத் தவிர்த்து, ஏனையவர்கள் தமது கடமையை மறந்து, மௌனம் சாதித்ததன் மூலம், சமூகத்திற்குத் துரோகத்தையே இழைத்திருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுவதை விடுத்து, தமது நலன்களுக்காக பாதுகாப்புச் செயலாளரைக் குஷிப்படுத்த இவர்கள் முற்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் மிகச் சரியானது.       நம்பகமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் படி, இக்கூட்டம் கொழும்பு நகர மேயர் முஸம்மில் அவர்களினால் கூட்டப்பட்டிருக்கிறது. தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கிப் போகின்றவர்களைத்தான் அவர் தெரிவு செய்திருக்கிறார். அமைச்சின் கடிதத் தலைப்பில் எழுதப்பட்டு, ஏ.எச்.எம் பௌஸி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், கூட்டத்தின் நோக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'முஸ்லிம்ளோடு தொடர்பு பட்ட பிரச்சினைகளை, அமைதியான, நட்பு ரீதியானதொரு சூழலில் கலந்துரையாடல்' என்பதே அந்த நோக்கமாகும்.      

இச்சந்திப்பு மிகவும் அறியப்பட்ட, மதிக்கப்படுகின்ற வணிகரும், கொடை வள்ளலுமான ரிபாய் ஹாஜியார் அவர்களின் பம்பலபிட்டிய இல்லத்தில் இடம்பெற்றது.  முஸ்லிம்கள் தொடர்புபட்ட பிரச்சினைகளைக் கலந்துரையாடுவதற்கே குறித்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டாலும், 'அதிதியை (பாதுகாப்புச் செயலாளரை) சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையிலான எவ்விதக் கேள்வியையும் கேட்க வேண்டாம்' என கலந்து கொண்டவர்களிடம் முன்னணி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆரம்பத்திலேயே தெரிவித்துள்ளார்.        ஆரம்ப உரையை நிகழ்த்திய பாயிஸ் முஸ்தபா முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பிலான  கலந்துரையாடலுக்கான களத்தை தனது ஆரம்ப உரையின் மூலம் சமைக்கவில்லை. பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களின் போது, பாதுகாப்புப் படையினர் கையாலாகாமல் இருத்தல், முஸ்லிம் பெண்களின் உடைக் கலாசாரம் தொடர்பில் எழுந்திருக்கின்ற பிரச்சினைகளையே இங்கு முஸ்லிம் பிரச்சினைகள் என நான் குறிப்பிடுகின்றேன். சொல்லப் போனால், பாதுகாப்புச் செயலரைச் சந்தோஷப்படுத்துவதற்காக, தனது உரை மூலம் பாயிஸ் முஸ்தபா கூடுதல் சோபனை செய்தார் என்றே சொல்லலாம்.        

எவ்வாறாயினும், தாம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை முறையாக முன்வைப்பதற்கும், நேர்மறையான பதில்களைப் பெற்றுக் கொள்வதற்கும், பொது பல சேனாவினால் உருவாக்கப்பட்டுள்ள பிரிவினையை மூடுவதற்கும் உரிய நல்லதொரு சந்தர்ப்பமாக இச்சந்திப்பு அமைந்திருந்தது. எனினும், கலந்து கொண்டவர்கள், தொடர்புபட்ட கேள்விகளைக் கேட்பதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதன் மூலம், முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்குரிய மற்றொரு வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளது. முஸ்தபாவின் ஆரம்ப உரை மிகவும் பெருமைக்குரிய, பாராட்டப்பட வேண்டியதொரு மொழிநடையில் அமைந்திருக்க வேண்டும். சமூகத்தின் கவலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அறிவும், இயலுமையும் கொண்டவராகவே அவர் அறியப்பட்டவர். 'நாம், வழக்கறிஞர்கள். இலவசமாக யாருக்காகவும் கதைப்பதில்லை' என்று கூறி, நிகழ்வின் சீரியஸ்னஸை அவர் ஆரம்பத்திலேயே குறைத்து விட்டார். 

வாய் மொழி மூலக் கேள்விகள் எதுவும் இருக்காது என்று கூறியதன் மூலம், அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 4 ஓ 2 சீட்டில் கேள்விகளை எழுதுமாறு பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவற்றை சேகரித்த முஸ்தபா, அவற்றில் இருந்து கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அவரே தெரிவு செய்தார். இங்கு கலந்து கொண்டிருந்த வியாபார சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு இது சந்தோஷத்திற்குரியதாக இருந்திருக்கலாம். தொடர்ந்து துன்பங்களை சந்தித்து வருகின்ற முஸ்லிம் சமூகத்தின் துயரங்களை விலையாகக் கொடுத்தாவது, கோத்தபாயவுடன் நெருக்கம் கொள்வதற்கு விரும்பிய அவர்கள், சமூகப் பிரச்சினைகளை எழுப்பித் தமது முகங்களை வெளிக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகவில்லை என பெருமூச்சு விட்டிருக்கலாம்.      

இருபது, அல்லது முப்பது கேள்விகள் அங்கு வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து முஸ்தபா ஒரு சிலவற்றை மட்டும் தெரிவு செய்தார். பெரும்பாலும், தமது விருந்தினரை அசௌகர்யம் செய்யாத வகையிலான, சீரியஸ் குறைந்த கேள்விகளையே அவர் தெரிவு செய்திருப்பார்.         உண்மையில் கேள்வி நேரம் முஸ்லிம் பிரதிநிதிகளின் கையாலாகாத் தனத்தை எடுத்துக் காட்டுவதாகவே இருந்தது. முஸ்லிம்களுக்கு ஒரு சில கல்விப் பிரச்சினைகள் தவிர, சீரியஸான எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற பதிவோடுதான் பாதுகாப்புச் செயலாளர் வீடு சென்றிருப்பார்.     கேள்வி நேரத்தில் சிங்களப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதில் எதிர்நோக்கி வருகின்ற கஷ்டங்கள் குறித்து ஒருவர் பேசினார். ஒவ்வொரு தேசிய பாடசாலையிலும் குறைந்த பட்சம் ஏனைய மதத்தைப் பின்பற்றுகின்ற 10 வீதமானவர்களுக்காவது இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நல்லதொரு கேள்விதான். ஆனால், மிக அபாயகரமான பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட கேள்விகளைப் புறந்தள்ளி, முன்னுரிமைகளை மறந்து முன்வைக்கப்பட்ட விடயமொன்றாகவே இதனைக் கருத வேண்டும்.    

தனது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எம்.எச். முஹம்மத் உருவாக்கிய இஸ்லாமிய நிலையம் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவது குறித்து {ஹஸைன் முஹம்மத் பேசினார். பிறகு முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் என்பவற்றின் தலைவர் என்.எம்.அமீன் உரையாற்றினார். கொழும்பு டெலிக்ராப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்களால் அமைதியாக வாழ முடியும் என்றும், தெஹிவளையில் முஸ்லிம் பாடசாலையொன்றை ஏன் அமைக்கக் கூடாதென்றும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், சமூகத்தின் எறிந்து கொண்டிடிருக்கின்ற பிரச்சினைகளை தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு, கலந்து கொண்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை என பிறகு அமீன் என்னிடம் தெரிவித்தார். சட்டத்தரணி இக்பால் முஹம்மத் பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடாத்துதல், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம், ஹலால் இலச்சினை நிறுத்தப்பட்டமை போன்ற பிரச்சினைகளை எழுப்பினார்.    மூன்றாவது விடயத்திற்குப் பதிலளித்த கோத்தபாய, 'நான் நினைக்கிறேன், கடந்த மூன்று மாதத்தில் யாரும் ஹலாலுக்கு எதிராகப் பேசவில்லை' என்று கூறி மேயர் முஸம்மிலை நோக்கினார். அவரும் அதனை ஆமோதிப்பது போல், தலையசைத்தார்.     

இந்த வேடிக்கை நாடகத்திற்கு மத்தியில், சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், தெஹிவளை கடவத்தை வீதியில் இருக்கின்ற பள்ளிவாயல் ஒன்று மூடப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பினார். அன்று மாலைதான் குறித்த பள்ளிவாயலுக்கு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் சென்று, பள்ளி வாயலை மூடுமாறு கோரி, புத்தசாசண அமைச்சினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆனால், குறித்த பள்ளிவாயல் வக்பு சபையினால் (பள்ளி வாயல்களைப் பதிவு செய்வதற்காகச் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே சபை) அங்கீகரிக்கப்பட்ட பள்ளிவாயல் எனவும் அவர் தெரிவித்தார். உடனடியாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் கதைத்த பாதுகாப்புச் செயலர், அங்கீகரிக்கப்பட்ட எந்தப் பள்ளிவாயலும் மூடப்படக் கூடாது என்று அறிவுறுத்தியதுடன், தொடர்ந்து அவ்வதிகாரியுடன் பேசிக் கொள்வதற்காக அவரது தொலைபேசி இலக்கத்தையும் எம்.எம். ஸுஹைருக்கு வழங்கினார். அன்று மாலையே சர்ச்சைக்குரிய பள்ளிவாயலுக்குச் சென்ற உப பொலிஸ் அதிகாரி ஒருவர், பள்ளிவாயலை மூட வேண்டாம் எனவும், தொழுகையைத் தொடர்ந்து நடாத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.        
          
எவ்வாறாயினும், வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் இருக்கின்ற முஸ்லிம்களின் கவலைக்குரிய நிலை, சவூதி அரேபியாவினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட 500 வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கையளிப்பதற்கு மறுக்கப்பட்டு வருகின்றமை, காணிப் பிரச்சினைகள் உட்பட வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற விஷமத்தனமான பிரசாரங்கள், பள்ளிவாயல்கள், வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல்கள், மிருகங்கள் அறுக்கப்படுவதற்கு எதிரான பிரசாரங்கள், ஹலால் உணவு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை, முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்திற்கு எதிரான பிரசாரங்கள் போன்றவை குறித்து எவருமே வாய் திறக்கவில்லை. இது தவிர, அரச தொழில்களில் காட்டப்படுகின்ற பாகுபாடு போன்ற பல்வேறு அம்சங்களும் இருக்கின்றன.     

இப்பிரச்சினைகள் உரிய முறையில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படாவிட்டால், அரசாங்கம் எவ்வாறு இவற்றை அறிந்துகொள்ளப் போகிறது?  எவ்வாறாயினும், கோத்தபாய ராஜபக்ஷ தனது உரையில், முஸ்லிம்கள் புலிகளை ஆதரிக்காததால், முஸ்லிம்கள் சந்தித்த கஷ்டங்களைக் கோடிட்டுக் காட்டியதும், புலனாய்வுத் துறையில் முஸ்லிம்கள் மேற்கொண்ட பங்களிப்புக்கள், கேர்ணல் லாபிர் போன்றவர்கள் தமது இன்னுயிரைக் கூட தியாகம் செய்தமை போன்ற விடயங்களைத் தொட்டுக் காட்டியமையும் பாராட்டப்பட வேண்டியவையாகும். 

முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடலொன்றைத் துவங்கி வைக்கும் வகையில், கோதபாய அவர்களின் இச்சந்திப்பை வரவேற்கின்ற பலர், முஸ்லிம் சமூகத்தின் பரந்து பட்ட நலனைப் பிரதிபலிக்கும் வகையில், முஸ்லிம் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்படுவது அனுமதிக்கப்படாமையை ஒரே குரலில் கண்டிக்கிறார்கள்.   சுதந்திரமான, நட்பு ரீதியானதொரு சூழலில் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்குரிய வாய்ப்பை பாதுகாப்புச் செயலர் வழங்கினார். எனினும், முஸ்லிம்கள் சார்பில் பங்கு கொண்டவர்கள், தமது பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பில் சீரியஸாக தவறிழைத்திருக்கிறார்கள். இது யாருடைய தவறு? யாரைக் குற்றம் சொல்வது?  தமது சொந்த நலன்களுக்காக பாதுகாப்புச் செயலருடன் நெருக்கமாக வேண்டும் என்று நினைத்த சிலர், வியாபார சமூகத்தைச் சேர்ந்த கூடுதலானவர்களையும், துறைசார்ந்தவர்கள் ஓரிருவரையும் மாத்திரம் அழைத்தமைதான் இதற்கான காரணமா? கோத்தபாயவிற்கு அருகில் அமர்ந்திருந்த மதிக்கத்தக்க ரிபாய் ஹாஜியார், அகா பாரி போன்றவர்களாவது உரிய முறையில் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அங்கு இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.      இவ்விதம் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பிரதிநிதிகளும் கையாலாகாத் தனத்துடன் நடந்து கொள்கின்ற போது, ஆனந்தி சசிதரன் போன்றவர்கள் தமது கருத்தை வெளிப்படுத்துவதில் காட்டுகின்ற பயமற்ற போக்கைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆனந்தியின் அரசியல் வழிமுறையை அல்லது கருத்துக்களை சரி, பிழை காணவோ, அதற்கு வக்காளத்து வாங்கவோ நான் முனையவில்லை. மாறாக அவரது துணிச்சலையே இங்கு குறிப்பிடுகின்றேன்.      தான் நம்பிக்கை கொண்ட தனது நோக்கத்தில், அவர் இதய சுத்தியோடும், அர்ப்பணத்தோடும் உழைத்து வருகிறார். அவர் எதிர்கொள்கின்ற துன்பங்கள் யாரும் அறியாததல்ல. அவருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. அவரது கணவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது பிள்ளைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில் அவர் இருக்கிறார். இத்தனை இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்து, கொழும்புக்கு வந்து, அங்கிருந்து ஜெனீவா செல்கிறார். தமிழர் பிரச்சினை என தாம் நினைக்கின்ற அம்சங்களை அங்கு சுட்டிக் காட்டி விட்டு, சில நாட்களுக்குள் அவர் வீடு திரும்புகிறார்.         ஆனால், முஸ்லிம் சமூகத்திலோ நிலமை தலைகீழாக இருக்கின்றது. சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைக்குமாறு, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு கோத்தபாய தானே முன்வந்து சந்தர்ப்பம் தருகிறார். ஆனால், அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தவறி விடுகிறார்கள். தமது சொந்த நலன்களுக்காக அவர்கள் சோரம் போகிறார்கள்.  வரலாற்றின் இம்முக்கியமான கட்டத்தில் இது எவ்வளவு அபாயகரமானது? 

1 comment:

  1. Meaningful article. The intention of this is appreciable. The rep's participated from the muslim community in this meeting were not well selected from all the four corner of Sri Lanka. They were pre-selected from some part, so how they knew the depth of the issues which the particular community faced.

    Any way, we have been failed to bring a capable and talented rep to lead our community representing in a fair and reasonable manner. Let's think and get together to select a person to resolve our issues and national issue.

    Thanks

    ReplyDelete

Powered by Blogger.