உக்ரைனுக்கு படைகளை அனுப்ப, ரஷியா பாராளுமன்றம் அனுமதி
உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனில் இணைக்க ரஷிய ஆதரவாளரானஅதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை பதவி விலகக்கோரி நடந்த மக்களின் ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது.
தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலைந்து செல்ல வைக்க முயற்சித்தனர். காவலர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதில் நகரில் உள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க உக்ரைன் அரசு கையாளும் விதம் குறித்து உலக நாடுகள் கவலையும், கண்டனமும் தெரிவித்தன. இதே நிலை நீடித்தால் உக்ரைனுடனான நல்லுறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்ள நேரிடும் என ஒபாமா எச்சரித்திருந்தார்.
உக்ரைன் மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அறிவித்தன. இதனையடுத்து, போராட்டக்காரர்களுடன் சமாதானமாக போக விரும்புவதாக கூறிய அதிபர் விக்டர் யனுகோவிச் எதிர்க் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்தார்.
அந்த குழுவின் ஆலோசனையின்படி, பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த விக்டர் யனுகோவிச்சை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதாக பாராளுமன்றம் அறிவித்தது. வரும் மே மாதம் 25-ம் தேதி புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அதிபர் வசிக்கும் மாளிகை உட்பட தலைநகர் கீவ் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும், அதிபர் விக்டர் யனுகோவிச் கீவ் நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இடைக்கால அதிபராக துர்ஷிநோவ் பதவி ஏற்றார். போராட்டத்துக்கு பிறகு விடுதலையான முன்னாள் பிரதமர் யுலினா திமோஷின்கோ தனக்கு பதவி ஆசை இல்லை என்றும் இடைக்கால அரசில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறி விட்டார்.
இதற்கிடையில் பதவி பறிக்கப்பட்ட விக்டர் யானுகோவிச் தலைநகரிலிருந்து தப்பி ஓடி தனக்கு பாதுகாப்பான இடத்தில் தங்கி இருக்கிறார். ரஷியாவின் தீவிர ஆதரவாளரான விக்டர் யானுகோவிச் காப்பாற்ற ரஷியா ராணுவத்தை அனுப்பலாம் என்று சர்வதேச அரசியல் வட்டாரத்தில் ஒரு யூகம் பரவியது.
ரஷியா ராணுவத்தை அனுப்பி உக்ரைன் விவகாரத்தில் தலையிட கூடாது என அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தன. அந்த எச்சரிக்கையையும் மீறி, இதற்கு முன்னர் சோவியத் ரஷியாவில் இணைந்திருந்த நாடுகளில் ஒன்றாக இருந்து தற்போது தனியாக பிரிந்திருக்கும் நேச நாடான உக்ரைனில் கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தை ஒடுக்க தீர்மானித்த ரஷிய அதிபர் புதின், அதற்காக ரஷிய பாராளுமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த புதின்,’உக்ரைனில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் அங்கு வாழும் ரஷ்ய மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்றவும், அங்கு அமைதியை நிலவச் செய்யவும் ரஷியாவின் படைகளை உக்ரைனுக்கு அனுப்ப இந்த பாராளுமன்றத்தின் ஒப்புதலை எதிர்நோக்குகிறேன்’ என கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை அனைத்து எம்.பி.க்களும் ஒருமனதான தீர்மானமாக நிறைவேற்றியதையடுத்து, உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ரஷிய பாராளுமன்றம் இன்று ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, உக்ரைனுக்கு விரைவில் படைகளை அனுப்ப ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.
Post a Comment