அபிவிருத்தி என்ற மாயையின் கீழ் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர் - முஜிபுர் ரஹ்மான்
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்குவாரங்களுக்கு துணிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதியாக முஜிபுர் ரஹ்மான் கருதப்படுகிறார். மேல்மாகாண சபை உறுப்பினராக இருந்த இவர் நாட்டின் எப்பாகங்களிலும் முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய சமூக மக்களின் உரிமை பறிக்கப்படும் போது நீதிக்காக போராடி மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ச்சியாக முயற்சிப்பவர். ஐக்கிய தேசிய கட்சியில் மேல்மாகாண சபை தேர்தலுக்கு போட்டியிடும் அவர் வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.
கேள்வி: முஸ்லிம்களுக்கு எந்த வகையில் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என கருதுகின்றீர்?
பதில்: இந்த நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் மோசமான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. இதனை இந்த அரசாங்கம் தட்டிக்கேட்பதாக இல்லை. அல்லது தடுப்பதாகவே தெரியவில்லை. இப்படி முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நலன்கள் தொடர்பிலும் அரசு கரிசனை கொள்வதாக தெரியவில்லை. முஸ்லிம்களை அலட்சியப்படுத்தும் இந்த அரசாங்கத்திற்கு கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டையில் வசிக்கும் முஸ்லிம்கள் மாகாண சபை தேர்தல் மூலம் பதிலடி வழங்க வேண்டும். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதன் மூலமே முஸ்லிம்கள் நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.
அத்தோடு அண்மைக்காலமாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் கணிசமாக குறைந்துகொண்டே செல்கின்றது. பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு வருவதனால் எமது சமூகத்திடம் ஒற்றுமை குறைந்து வருவதை பேரினவாத சக்திகள் அறிந்துகொண்டுள்ளனர். இதனாலேயே முஸ்லிம்கள் மீது அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இதனால் இத்தேர்தலை தமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் முக்கிய தேர்தலாக முஸ்லிம்கள் கருத வேண்டும். இதேவேளை பொடுபோக்காக இருந்துவிடாது தேர்தலில் தமகு வாக்குரிமையை பயன்படுத்தி சமுதாயத்திற்கான பிரதிநிதித்துவத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
கேள்வி: ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் கூறிவருவதேன்?
பதில்: நாட்டில் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடந்துகொண்டிருக்கும் போது அவற்றை கண்டும் காணாது இருக்கும் அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்து என்ன பயன். வெறுமனே அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு சுகபோகங்களை அனுபவிப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். முஸ்லிம்கள் மீது இனத் துவேசத்தை கக்கும் சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உதய கம்மன்பிலவையே அரசாங்கம் தனது முதன்மை வேட்பாளராக களமிறக்கியிருக்கின்றது. இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மக்கள் மிகவும் தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள்.
அத்தோடு அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக தனித்து தேர்தல் வேட்டையில் இறங்கியிருக்கிறது. இது அந்த கட்சியினரின் பிற்போக்கு தனத்தை காட்டுகின்றது. கொழும்பு முஸ்லிம்கள் எப்போதும் ஐ.தே.க. ஆதரவாளர்கள் என்பதை தெரிந்துகொண்ட அரசாங்கம் இவர்களை தனித்து களமிறங்கச் செய்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தை அரசியல் பிரதிநிதித்துவமற்ற நாதியில்லா சமூகமாக மாற்ற அரசு மேற்கொண்டுள்ள சதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை இவர்கள் மேற்கொள்வதானது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமே.
முஸ்லிம்களின் பெயரை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று தேர்தல் காலத்தில் மட்டும் சமூக பற்றாளர்கள் ஆகின்றனர். இவர்கள் தேர்தல் காலத்தில் மக்களை இன உணர்வை தூண்டி வாக்கு வேட்டையில் ஈடுபடுகின்றனர். இவர் கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். மத்திய, வடமேல், வடக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது இரண்டாம் கட்ட நாடகத்தை அரங்கேற்றினார். தற்போது மூன்றாம் அங்க நாடகத்தை அரங்கேற்றுகின்றார். இவரின் நாடகங்கள் தோற்றுப்போய்விட்டன.
வெறுமனே வாக்குகளை மட்டும் கேட்பதற்கு ஐ.தே.க கொழும்பில் களமிறங்கவில்லை. பள்ளிவாசல்கள் தாக்குதல்களின் போது பாராளுமன்றத்தில் துணிந்து குரல் கொடுத்தவர் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஆவார். அத்தோடு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின் போதும் கொம்பனித் தெரு மற்றும் மாளிகாவத்தையிலிருந்தும் முஸ்லிம்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருகின்ற நிலையில் அதனை எதிர்த்து வீதியில் இறங்கி போராடியது ஐக்கிய தேசிய கட்சியே. கொழும்பில் கசினோவை கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிக்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். நாட்டில் விலைவாசிகள் அதிகரித்து வாழ்க்கை செலவு இமயத்தை தொட்டிருக்கும் நிலையில் இந்த அரசாங்கத்தை எதிர்த்து மக்களை அணி திரட்டி வீதியில் இறங்கி போராடும் துணிவு ஐ.தே.க.வுக்கே இருக்கின்றது.
கேள்வி: பைறூஸ் ஹாஜியும் நீங்களும் இணைந்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றீர்கள். இது பற்றி குறிப்பிட முடியுமா?
பதில்: மத்திய கொழும்பு அமைப்பாளர்கள் என்ற ரீதியில் நாம் இருவரும் ஒற்றுமையாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த ஒற்றுமை எதிர்கால அரசியலிலும் தொடரும். இந்த ஒற்றுமை எங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நாம் பிரிந்து தனித்தனியாக சென்றால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும். எமது ஒற்றுமையை சீர்குலைக்க யாரும் நேரடியாக செயற்பட்டதாக தெரியவில்லை. மறைமுகமாக இருக்கலாம். அதனை நாம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. ஏனெனில் எம்மிடம் அரசியல் புரிந்துணர்வும் சமூக அக்கறையும் நிறையவே இருக்கின்றது.
கேள்வி: ஆளும் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்கின்றனர். இது மத்திய கொழும்பு அரசியலில் எதனை வெளிப்படுத்தும் என நினைக்கிறீர்?
பதில்: அமைச்சர் பௌஸியும் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும் முன்னாள் அமைச்சர் பாரதலக்ஷ்மன் பிரேம சந்திரனின் புதல்வி ஹிருனிகா பிரேம சந்திரவும் இருக்கின்றனர். தங்களிடையே காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளாத இவர்கள் எப்படி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போகின்றனர். வெறுமனே வாக்குகளை சிதறடித்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.
கேள்வி: அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டை வைத்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பதாக நீங்கள் குற்றம் சுமத்தி வருகின்றீர்கள். அது பற்றி கூறுங்களேன்.
பதில்: இந்த அரசாங்கம் ஜெனீவா மாநாட்டை மையப்படுத்தியே தேர்தல்களை நடத்தி வருகின்றது. சிங்கள மக்களிடம் இந்த நாட்டை வெளிநாட்டு சக்திகள் அடிமையாக்கப்போவதாகவும் நாட்டை காப்பாற்ற எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் என்று தான் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த அரசாங்கம் சர்வதேசத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றாமையினால் தான் குற்றவாளிகளாக நிற்கின்றனர். பேரினவாத சக்திகளின் கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இவர்களுக்கு நாட்டில் எப்போது இனமுறுகல் ஒன்று இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதைவைத்தே இவர்கள் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். இதற்காகத்தான் முஸ்லிம்களின் மீதும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பதும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதாலும் சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதில் சரிவு ஏற்பட்டுவிடும் என அரசாங்கம் அஞ்சுகின்றது.
கேள்வி: நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் சக்திகள் தேர்தல் காலங்களில் ஓரளவு அமைதிகாப்பதாக தெரிகிறதே?
பதில்: இதிலிருந்தே தெரிந்துகொள்ள வேண்டும் பொதுபலசேனா உட்பட ஏனைய இனவாத சக்திகள் யாருடைய பின்னணியில் இயங்குகின்றன என்று. இந்த அரசாங்கத்தின் பூரண ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது. தேர்தல் காலங்களின் இச்சக்திகளின் செயற்பாடுகள் அரசாங்கத்தை பாதிக்கும் என நினைத்து தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நிறுத்தியிருக்க கூடும்.
கேள்வி: அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசு முஸ்லிம்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றீர். அது தொடர்பில் கூறமுடியுமா?
பதில்: கொழும்பு ஐ.தே.க.வின் அதிகாரம் மிக்க தொகுதியாகும். இதனை தகர்ப்பதற்கு அரசாங்கம் தருனம்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அத்தோடு தலைநகரில் முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினத்தவரும் செறிந்துவாழ்வது அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லை. இதனால் அபிவிருத்தி என்ற மாயையின் கீழ் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். ஆனால் நாம் ஒருபோதும் எமது மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற அனுமதிக்கப்போவதில்லை. தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கான அதிருப்தியை காட்டி வருவோம்.
கேள்வி: கொழும்பு மாநகர மேயர் தொடர்ந்தும் உங்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றாரே. இதற்கு நீங்கள் பதிலலிக்கவில்லையா?
அவர் குடும்ப அரசியலுக்காக சமூகத்தை காட்டிகொடுத்து விட்டார். ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகருக்கு ஒரு முஸ்லிம் மேயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அவர் கட்சிக்கும் அவரின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார். அவர் மேயராக வருவதற்கு நாம் உழைத்தோம். ஆனால் அவரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்பதற்காக எங்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றார். இது நாம் எடுத்த முடிவல்ல கட்சி எடுத்த முடிவாகும். கட்சியின் தீர்மானத்தை மதிக்க தெரியாதவராகவே அவர் இருக்கிறார்.
அவர் எங்கள் மீது மற்றுமொரு குற்றத்தை சுமத்தி வருகின்றார் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியை எமக்கு அவர் பெற்றுத் தந்ததாகவும் இது ஒப்பந்த அடிப்படையில் இடம்பெற்றதாகவும். இதை நான் முற்றாக மறுக்கிறேன். ஏனெனில் முஹம்மட் மஹ்ரூப் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பிறகு இந்த அமைப்பாளர் பதவியை கட்சி எமக்கு தந்தது. முஸம்மிலின் மற்றுமொரு குற்றச்சாட்டே எமக்கு பணம் தந்தார் என்பது. இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் கொழும்பு மாநகர சபை தேர்தலின் போது கட்சிக் காரியாலயம் ஒன்றை ஆரம்பிக்க அவர் கட்சிக்கு வழங்கிய பணத்தை எமக்கு தந்ததாக சொல்லித்திரிகிறார்.
Post a Comment