Header Ads



கண் நீர் அழுத்த நோய்


மார்ச் 6 முதல் 12ம் தேதி வரை க்ளாக்கோமா எனப்படுகிற கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக அனுஷ்டிக்கப் படுகிறது.'க்ளாக்கோமா’  என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக  அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், ‘க்ளாக்கோமா’ இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை  எல்லோரையும் பாதிக்கிற இந்தப் பிரச்னையைப் பற்றி, அறிகுறிகள், தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை  நிபுணர் வசுமதி வேதாந்தம்.

‘‘நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும்  பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா' ஏற்படுகிறது. ரத்த  அழுத்தம் போலவே கண்களுக்கும் ஒருவித அழுத்தம் உண்டு. அது அதிகமாவதால் உண்டாகிற பிரச்னை இது. ஆண்களைவிட, பெண்களை அதிகம்  பாதிக்கிற பிரச்னை. இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தப் பிரச்னையில் இரண்டு வகைகள் உண்டு. கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந்தால் விளக்கொளியைப் பார்க்கிற போது,  அதைச் சுற்றி கலர் கலராக வானவில் மாதிரித் தெரியும்.தலைவலி, கண்களில் வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு,  படிப்படியான பார்வை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள். மாலை நேரத்தில் இவை தீவிரமாகலாம். கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில்  அடைப்பில்லாவிட்டால், அதற்கான அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாமலிருக்கலாம். 

மருத்துவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கண் அழுத்தம் அதிகமாகி கண்களில் பிரச்னை வரும் போது, எப்போதுமே கண்  மருத்துவரைப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்கடையில் போய் பரிசோதித்து, நீங்களாக கண்ணாடி வாங்கிப் போடக் கூடாது என்றும்  அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவர்கள் பரிசோதிக்கும் போதும், கண்களின் பிரஷர் நார்மல் எனக் காட்டலாம். அப்போது மருத்துவர், ஓசிடி எனப்படுகிற  சோதனையின் மூலம் கண்களின் அழுத்தம் அதிகமிருப்பதை உறுதி செய்வார். தவிர கண்களைத் தொடாமல் லேசரை செலுத்தி, பயாப்சி எடுப்பதன்  மூலமும், பெரிமெட்ரி எனப்படுகிற சோதனையின் மூலம் பக்கவாட்டுப் பார்வையை ஆராய்வதன் மூலமும் கண்களின் அழுத்தமானது உறுதி  செய்யப்படும்.

அப்படி க்ளாக்கோமா இருப்பது உறுதி செய்யப்பட்டால் பிறகு அதன் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே சொன்ன  மாதிரி திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந்தால், அவர்களுக்கு லேசர் சிகிச்சையின் மூலம் வெறும் 2 நொடிகளில் சரி செய்து விடலாம்.  அடைப்பில்லாதவர்களுக்கு டிராப்ஸ் பரிந்துரைக்கப்படும். இந்த இரண்டிலும் சரியாகாத போது, அறுவை சிகிச்சை தேவைப்படலாம். 40 வயதில் சகஜம்  என்றாலும், இந்தப் பிரச்னை எந்த வயதிலும் வரலாம். 

பிறந்த குழந்தைக்குக் கூட வரும். பிறக்கிற போதே கண்களுக்குள் கேன்சர் கட்டி இருப்பது போன்ற தோற்றத்துடன், பெரிய கண்களுடன் இருப்பார்கள்  குழந்தைகள் அல்லது ஒரு கண் மட்டும் பெரிதாக இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது. அவர்களுக்கு மயக்க  மருந்து கொடுத்து, பிரத்யேக அறுவை சிகிச்சையின் மூலம்தான் சரி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், எத்தனை சீக்கிரம் செய்கிறார்களோ, அத்தனை  சீக்கிரத்தில் பலனைக் காணலாம்...’’ என்கிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

No comments

Powered by Blogger.