Header Ads



முஸ்லிம் காங்கிரஸ், தேர்தலின் பின்னர் திசைமாறுமா..?

(தந்திமகன்)

கிழக்கின் அரசியல் சக்தியாகவும், இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும், இந்நாட்டு முஸ்லிம்கள் பேரினவாதக் கட்சிகளினால் இனரீதியில் பாகுபாடு காண்பிக்கப்படுவதிலிருந்து விடுதலைபெறவும், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உரியவாறு பெற்றுக் கொள்ளவும், குறிப்பாக முஸ்லிம்களுக்கான மாவட்டமாகக் கருதப்படுகின்ற அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம்களின் இருப்பினை பாதுகாப்பதற்காகவும், அம்மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் என உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஆரம்ப நிலைமைகளிலிருந்து மாற்றம் கண்டு இலங்கையின் அரசியல் வானில் மூன்றாவது சக்தியாக உயர்வுபடுத்தியவர் அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களாவார். ஆனால் அவரது மரணத்தின்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை மேலே கூறிய அனைத்து விடயங்களிலிருந்தும் மாற்றமடைந்து இன்று புயலில் அகப்பட்ட கப்பலைப்போன்று இக்கட்சியும், திக்குத் தெரியாத நிலையில் அதன் மாலுமி போன்று இன்றைய தலைவரும் காணப்படுவது முஸ்லிம்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

இன்று நாடாளும் அரசின் முக்கிய அமைச்சராகக் இருக்கின்ற இன்றைய முகாவின் தலைவர் றஊப் ஹக்கீமும், அவரது கட்சியும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றமை முஸ்லிம்களிடையே பல்வேறு ஐயப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடைபெறப்போகின்றது. ஐ.நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பினால் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை பற்றிய எதிர்வுகூறல்களை எடுத்தியம்புகின்ற மாநாடும் நடைபெறுகின்ற இன்றைய தருவாயில் இந்நாட்டில் முக்கிய இனங்களுள் ஒன்றான முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் முக்கிய கட்சியான முகாவினையும் பல்வேறு சந்தேகங்களுடன் பேரினவாதிகளிடையே காணப்படுகின்ற கடும்போக்காளர்கள் சிலர் அடிக்கடி பேச்சாடல்கள் ஊடாக சீண்டிப் பார்ப்பதன் ஊடாக சவால்விடுகின்ற படலம் மிகவும் கவலையை அளிப்பதாக நடுநிலைமையில் இருந்து பார்க்கின்ற முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளும் அரசியலுடன் சங்கமித்து விட்டால் அனைத்துக்கும் ஆமாப்போடவேண்டிய நிலைமையிலிருந்து ஸ்ரீலமுகாவின் தலைமை வேறுபட்டமைதான் இதற்குக் காரணமாகும். இலங்கை வந்தபோது ஐநாவின் மனித உரிமை ஆணையாளரிடம் ஒப்படைத்த இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆவணம் இன்று இலங்கைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்க்கின்ற நிலைமைத் தோற்றுவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டின் போது களத்தில் கச்சைக் கட்டிக் கொண்டு இறங்கி இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கச் செய்த இந்த முஸ்லிம் தலைவர்கள் இம்முறை அதற்கு செல்லவில்லை. இவ்விடயம் அரசுக்குள் இருக்கின்ற பேரினவாதிகளுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளன. அதனால்தான் என்னவோ இன்று ஒவ்வொரு மூலையிலிருந்தும் விமர்சனங்களுக்குள் அகப்பட்டு தாக்குபவர்களுக்கு எதிராக தேர்தல் மேடைகளில் ஸ்ரீலமு.காங்கிரசின் தலைவர் விடும் எதிர்ப்பலைகள் எதிர்காலத்தில் அதாவது இந்தத் தேர்தல் மற்றும் ஜெனீவா மாநாடு முடிவுற்றதன் பின்னர் அரசுடன் இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் நிலைமையும் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் இலங்கையின் அரசியலில் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அக்கட்சிக்கு விசுவாசமாகவே கருத்துக்களை தெரிவிக்கவேண்டும். இன்று தமிழர் தரப்பினர் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஆட்சியின் பங்காளர்களாக இராது தன்னுடைய மக்களுக்கு சாதகமான விடயங்களுக்கு சாதகமாகவும், தனது மக்களுக்கு எதிராக அரசு செயற்படுகின்றபோது எதிர்த்தும் வருகின்றமையினால்தான் இன்று உலகம் முழுவதும் தமிழர் பிரச்சினையை சோற்றுக்குள் மறைக்க முடியாமல் திண்டாடுகின்ற நிலை இன்று அரசின் மடியில் விழுந்துள்ளது. தீர்வுகளும், திட்டங்களும், ஆணைக்குழுக்களும், கோரிக்கைகளும் என ஆயிரமாயிரம் அமைத்தாலும் இறுதித்தீர்வுக்குரிய பாய்ச்சலை அரசு மேற்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றது. இது இன்றுள்ள தமிழர் தரப்பினருக்கு கிடைத்த வெற்றியாகவும் கொள்ளப்படுகின்றது. ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் முதலில் ஆளும் கட்சிக்குள் சங்கமித்து போகின்ற ஒருநிலைமையை மாற்றியமைத்து தன்னுடைய இனத்தின் பற்றாளர்களாக மாறுகின்ற நிலைக்கு தன்னை புடம் போடவேண்டும்.

இன்று தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களையும், குறிப்பாக ஸ்ரீலமு.காங்கிரஸையும் மிகவும் காரசாரமாக விமர்சனம் செய்கின்ற பொதுபலசேனா போன்ற இனவாதிகள் தொடக்கம் சில அமைச்சர்கள் சில பிரதியமைச்சர்கள் வரையிலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு எதிர்ச்சவால் விடும் வகையில் வாய்ச்சொல்லில் வீராப்பு பேசுகின்ற ஒரு தலைமைத்துவமாக மாற்றம் கண்டு எதிர்கால அரசியலில் தன்னை மீண்டும் புதிப்பித்துக்கொள்ளும் ஒரு முயற்சியில் முகாவின் தலைமை ஈடுபாடு காண்பிப்பதாகவே தெரிகின்றது. மேல் மாகாணத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் வீரவசனம் பேசிவிட்டு தேர்தல் முடிந்த கையுடன் அப்பனே சரணம் என்கிற ஒரு தலைமைப்பீடமாகவே தெரிகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாவே தெரிவித்துள்ளார்.

அரசைவிட்டு வெளியேறலாம் என்று ஜனாதிபதி தொடக்கம் ஆளும் அரசிலுள்ள பலரும் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக காணப்படுகின்ற முக்கிய முஸ்லிம் கட்சியின் தலைவர் ஏன் சரணாகதி அரசியல் நடாத்த வேண்டும் என்கிறனர் அதன் ஆதரவாளர்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் நாங்கள் வெளியேற மாட்டோம் என்கிற தொணியில் மீண்டும் மீண்டும் கூறிவிட்டு ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சார மேடைகளில் எதிர்தர்க்கத்தோடு பேசுவதானது இந்நாட்டு முஸ்லிம்களை மீண்டும் படுகுழியில் தள்ளும் நிலைக்கே கொண்டு செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அண்மையில் கொழும்புப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஸ்ரீலமுக.காங்கிரஸ் தலைவர் கூறியிருந்த கூற்றுக்கள் எதிர்காலத்தில் ஆளும் கட்சியிலிருந்து ஸ்ரீலமுகவினர் வெளியேற்றப்படுவார் என்பதற்கான அறிகுறிகளாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. அதாவது 'அரசிலிருந்து தன்னை வெளியேற்றவும், நானாக வெளியேறவும் நேர்ந்திருக்கிறது. எனது மறைந்த தலைவரின் காலத்தில் அவ்வாறான சந்தர்ப்பங்களில்  எதிர்க்கட்சியில் இருந்து  கொண்டும் கூட எங்களது அரசியலை செய்வதற்கு தயங்காத தலைமை என்ற அடிப்படையில் சரியான சந்தர்ப்பத்தில் தான் சரியான விடயங்களை கையாள வேண்டும். பிழையான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் சரியான முடிவும் பிழையாகிப் போய் விடும் என்பதை அவர் எங்களுக்கு அனுபவ ரீதியாக உணர்த்தியிருந்தார்.

இன்று சரியான சந்தர்ப்பத்தில் சரியான முறையில் பேசியாக வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். இணக்க அரசியலைப் பற்றி நாங்கள் சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் அரசாங்கத்துக்குள் இவற்றை மிகவும் சாணக்கியமான முறையில் நாங்கள் கையாண்டு வந்தோம். ஆனால், ஒரு சில இன,மத வெறியர்களின் பணயக் கைதியாக இந்த அரசாங்கம் மாறிவிடுவதில் இருந்து அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு வேறு வழி இல்லை என்ற காரணத்தினால் அதுவரை எமக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இதனை கொண்டு செல்ல நேர்ந்தது.

2012ஆம் ஆண்டு நான் ஒரு மாத காலம் ஜெனீவாவில் தங்கியிருந்து இந்த அரசாங்கத்தின் சார்பில், அதனைக் காப்பாற்றுவதற்காக ஜெனீவா மனித உரிமை கவுன்சிலின் உறுப்புரிமை பெற்றிருந்த எட்டு அரபு நாடுகளை அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் வாக்களிப்பதில் மிகப் பெரிய பங்களிப்பை நான் செய்திருக்கிறேன். அத்துடன் ஜனாதிபதியின் செய்தியோடு அரபு நாடுகளுக்குச் சென்று அந் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன். இந்த நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு கால அவகாசம் தரப்பட வேண்டும், அது இரவோடு இரவாக செய்யப்படக் கூடிய காரியமல்ல, முப்பது வருட கால யுத்தம் ஓய்ந்து நாட்டில் சமாதானம் நிலவ ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் கால நீடிப்பு தேவையென்று கேட்டிருந்தேன்.

ஆனால், சென்ற வருடம் தான் ஜெனீவா பிரேரணையில் மத நல்லிணக்கம், மத சகிப்புத் தன்மை என்ற விடயத்தில் பாரதூரமான பாதிப்புகள் அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்றன. அதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் தவறி விட்டது என்ற பாங்கில் அந்தப் பிரேரணையில் ஓர் அம்சம் உட்புகுத்தப்பட்டது. அதற்கு முன் உள்ள பிரேரணைகளில் அடங்கியிராத ஒரு விடயம் உட்புகுத்தப்படுவதற்கான காரணம் இந்த பலசேனா இயக்கத்தின் அட்டகாசம் தான் என்பதை இந்த அரசாங்கம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த பலசேனா கும்பல் இல்லையென்றால் பிரேரணைகளில் அந்த அம்சம் உள்ளடக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. சென்ற வருடம் மாத்திரம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னூற்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறான சம்பவங்கள்தான் நாம் அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இனிமேலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்பதற்காகத் தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதை மிகப் பெரியதொரு தேசத் துரோகமாக கூறுகிறார்கள். 1990 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கூட அவர் எதிர்க்கட்சியில் இருந்த பொழுது ஜெனீவாவுக்குச் சென்ற சம்பவத்தை நான் முன்னைய கூட்டங்களில் விபரித்திருக்கிறேன். விமான நிலையத்தில் அவர் கொண்டு சென்ற ஆவணங்களும், புகைப்படங்களும் பறிக்கப்பட்ட நிலையில் தாம் மட்டும் அங்கு சென்று வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் தெரிந்த விடயமாகும். அந்த மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி இருக்கும் நிலையில் தான் நாங்கள் அவரது அமைச்சரவையில் இருக்கிறோம். இந்த நாட்டில் சீர்குலைந்து வருகின்ற மத சகிப்புத் தன்மையற்ற நிலைமையால் சிறுபான்மை சமூகங்கள் பாதிக்கப்படுகின்ற பொழுது அதனைத் தடுத்து நிறுத்துகின்ற எமது முயற்சிக்கு எதிராக எழுந்துள்ள இனவாத கும்பல்களின் விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதில் இனியும் காலதாமதம் செய்யக் கூடாது. எமது இந்த காரியத்தை தேசத் துரோகம் என்று யாரும் கருதுவது அர்த்தமற்றது' என்கிற கருத்துப்பட தெரிவித்திருந்தார். இந்த வார்த்தைகள் அரசினால் மிகவும் கவனமாக பார்க்கப்படுகின்றது. தேர்தலின்பின்னர் வட்டியும் முதலுமாகச் சேர்த்து பெறவேண்டிய நிலையும் ஸ்ரீலமுகாவுக்கு ஏற்படலாம்.

எனினும் ஆளும் அரசுடன் ஒட்டி உறவாடுகின்றபோது எதுவும் பேசாது இருந்துவிட்டு முஸ்லிம்கள் பற்றிய ஆவணங்களை மனித உரிமை ஆணையாளரிடம் ஒப்படைத்த விடயத்தில் அமைதியாக இருந்தன் மர்மம் ஆட்சியிலிருந்து துரத்தப்படுவோம் என்பதனால்தான் மறைத்துக் கொண்டார்கள்போலும். கடந்த வருடத்தில் ஜெனீவாவில் மாறுவேடம் பூண்டு ஆட்சியாளர்களுக்கு ஆசுவாசப்படுத்தி ஓரளவு அறபு நாடுகளை வெற்றி கொண்டபோதும் இந்நாட்டு முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா பிரச்சினை, பள்ளி உடைப்பு, ஹலாம் ஹலால் பிரச்சினை என்று ஏகப்பட்டவைகள் நடைபெற்றிருந்தும் அதனை மறைத்து அரசுக்கு வக்காலத்து வாங்கிய ஸ்ரீலமுகாவினர்  இன்று கொடுத்த ஆவணத்தை அரசு கண்டறிந்துவிட்டது என்பதற்காக நாடகம் ஆடுகின்றனர் என்பதாக முக்கிய முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார். அதாவது தேர்தல் முடிந்தவுடன் முகவின் தலைவர் அரசிடம் எட்டாக மடிந்து கொள்வார் மக்களிடம் வாக்கை எப்படியாவது பெறுவதற்காவே இந்த நாடகம் என்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எது எதுவாக இருப்பினும் முக்கிய முஸ்லிம் கட்சியொன்றின் தலைவராக இருக்கின்றபோது சமூகத்தின்மீது எச்சதி ஏற்பட்டாலும் அதனை சமூகத்தின் நன்மைக்காக எதிர்த்தாடவேண்டும். ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது பேசுகின்ற விடயங்கள் உண்மையான பற்றாளர்களா? என்பதை சமூகம் உணர்ந்துள்ளது. தனதும், தன்னுடைய கட்சியின் முக்கியஸ்தர்களின் சுகபோகத்திற்காகவும் கட்சியரசியல் நடாத்துகின்ற சில முஸ்லிம் கட்சிகளைப்போன்றே முக்கிமான முஸ்லிம்களின் கட்சி என்கிற அந்தஸ்திலிருந்து அதன் மக்களால் தூக்கியெறியப்படும் காலம் வெகு தூரத்திலில்லை. அப்போதாவது பாடம் கற்று முன்னாள் அமைச்சர் எம்எச்.எம். அஸ்ரப் அவர்கள் காண்பித்த உண்மையான கட்சியரசியலை மேற்கொள்வதன் மூலம் மக்கள் நம்புவார்கள். இல்லையேல் கட்சி இன்னும் பல உடைவுகளைத்தான் சந்திக்கும் அதற்கு கல்முனை முன்னாள் மேயர் சிறாஸ்மீராசாகிபு சாட்சியாளராகின்றார்.

No comments

Powered by Blogger.