முஸ்லிம் மக்கள் அரசிற்கான ஆதரவை எவ்வாறு வழங்குகின்றார்களோ அதேபோல்..! கருணா
(எம்.எம். ஜபீர்)
ஜெனீவா விசாரணை இடம்பெற வேண்டுமாயின் முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களே இந்த நாட்டில் இடம்பெற்ற கொலைகளுக்கு காரணமானவர்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட திட்டமிடல் பிரிவு திறப்பு விழாவும் வைத்தியசாலை கீதம் வெளியீட்டு விழாவும் இன்று திங்கட்கிழமை (31) வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட தாதியர் சங்க தலைவர் எஸ்.சசிகரன், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுத் தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி, கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் அதிபர். அருட்சகோதரர்.ஸ்ரீபன் மத்தியூ உட்பட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஒட்டுமொத்தமான தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது தான் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இன்னோரன்ன விடயங்களை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் தமிழ் மக்களிடத்தில் அரசிற்கு இருக்கும் ஆதரவை நிரூபித்துக் காட்ட வேண்டும். தேர்தல்களில் அரசிற்கு கனிசமான வாக்குகளை வழங்குவதன் மூலமே இதனை நிரூபித்துக் காட்ட முடியும்.
முஸ்லிம் மக்கள் அரசிற்கான ஆதரவை எவ்வாறு வழங்குகின்றார்களோ அதேபோல் தமிழ் மக்களும் வழங்கும் போது மட்டுமே நாம் பூரணமான அபிவிருத்தியையும், எமது தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள முடியும்.
இதன்போது இவ்வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவும் கட்டிட வசதிகள், தொழிநுட்ப வசதிகள், ஊழியர் குறைபாடுகள் அனைத்திற்கும் மிகவிரைவில் தீர்வுகள் பெற்று அவற்றை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியளித்தார்.
Post a Comment