எமது சமூகத்திற்கெதிராக எழுகின்ற பிரச்சினைகளை முறையாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் - அமைச்சர் அதாஉல்லா
இன வாதத்தினைத் தூண்டி விடும் வகையில் செயற்படுகின்ற கட்சிகள் மூலம் நிலைத்து நிற்க முடியாதென்ற காரணத்தினால் மூவின சமூகங்களையும் ஒன்றிணைத்து 2004ம் ஆண்டில் வித்திடப்பட்ட தேசிய காங்கிரஸ் கட்சி தற்போது பெரு விருட்சமாக மாறியிருக்கின்றது என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் பத்தாவது பேராளர் மாநாடு இன்று(30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது. இதன்போது மாநாட்டு பேருரையாற்றும் போதே அமைச்சர் அதாஉல்லா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
2004ம் ஆண்டு காலத்தின் தேவையாக எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அரசியலில் ஞானியாகப் பார்க்கப்பட்ட மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் எமது முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கி வந்த இன்னல்களை கருத்திற் கொண்டு எமது மக்களுக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்து வழி நடத்தி வந்தார். இக்கட்சி மூலம் எமக்கான தேவைகள் பலவற்றை நிவர்த்தி செய்தார்.
இது இவ்வாறிருக்க, தமிழர்கள் தமிழர்களென்றும், சிங்களவர் சிங்களவர் என்றும், முஸ்லிம்கள் முஸ்லிம்களென்றும் தங்களின் பெயர்களை வைத்துக் கொண்டு பேசினால் அவர்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாதென்ற வகையில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய டி.எஸ்.சேனநாயக்க அவர்களின் தலைவமையில் மூவின சமூகத்தவர்களையும் ஒன்றிணைத்து இச்சமூகங்களை சாந்தப்படுத்தும் வகையில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி செயற்பட்டது போல் எமது பெரும் தலைவர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு முழுக்குப் போட்டு விடடு தேசிய ஐக்கிய முன்னணி என்னும் கட்சியினை ஆரம்பித்து செயற்பட்டு வந்தார். இப்படியாகச் செயற்பட்டு வந்த போதுதான் நாம் யாரும் எதிர்பாரா வண்ணம் எம்மை விட்டும் பிரிந்து விட்டார்.
எமது பெருந் தலைவரின் மறைவிற்குப் பின் கட்சியினைக் கைப்பற்றியவர்கள் முஸ்லிம் மக்களை சூடாக்கி வந்ததுடன், எமது மக்களுக்கு பாரிய அக்கிரமங்களைச் செய்து வந்த வேலுப்பிள்ளை பிரபாகரனோடு உறவினையும் வைத்து வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் நோர்வே ஒப்பந்தத்தில் எமது சிறுபான்மைச் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்ட போது வாய் மூடி மௌனம் காத்ததால் நாம் அக்கட்சியல் இருந்து வெளியேறினோம்.
நாம் தேசிய காங்கிரஸ் கட்சியினை ஆரம்பித்தது முதல் பல்வேறான விடயங்ளை மக்களுக்காகச் செய்திருக்கின்றோம். அதனை இந்நாட்டில் உள்ள மூவின சமூகங்களையும் சேர்ந்தவரகள் சாட்சியாக இருக்கின்றார்கள். பிரபாகரனுடன் உறவினை வைத்து நாட்டினை துண்டாட எத்தனித்த ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பினோம். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஆட்சியில் அமர்த்தினோம். அதேபோல் நாட்டு மக்கள் மீது அன்பு வைத்து பாரிய அபிவிருத்திகளைச் செய்து மக்களை நிம்மதியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கடந்த 2005ம் நிபந்தனைகள் அற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் அவரோடு இணைந்து ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தினோம்.
வுடக்கு கிழக்கில் இருந்து பிரிக்கப்பட வேண்டும், இந்நாட்டு மக்கள் யுத்த சூழல் அற்று நிம்மதியாக வாழ வேண்டும், கிழக்கு மாகாணத்திற்கு தனியான ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப் படவேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரஃப் கனவு கண்டார்கள். அவரது இக்கனவு தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நனவாக்கப்பட்டிருக்கின்றன.
நாங்கள் பத்தாண்டு காலப்பகுதியில் முறையான அரசியலைச் செய்து வருகின்றோம். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த நோக்கில் நின்று தற்போது விலகி நின்று செயற்படுகின்றது. கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் கிடைத்தது போல் தேர்தற் காலங்களில் அரசிற்கு எதிராகச் செயற்பட்டு பின்னர் அரசோடு ஒட்டிக் கொள்ளும் கட்சியாக அக் கட்சி மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் கட்சித் தலைமை அரசோடு பூனையைப் போல் ஒட்டியிருந்து நாட்டைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இக்கட்சித் தலைமை காலத்திற்குக் காலம் விடுகின்ற கோமாளித்தனமான அறிக்கைக் மூலம் முஸ்லிம் சமூகத்தினை சில தரப்பினர் குறைத்து மதிப்பிடுகின்றனர். இவர் விடுகின்ற இக்கோமாளித்தனமான அறிக்கைகள் அவரின் சொந்தக் கருத்தே தவிர முஸ்லிம் மக்களது கருத்துகளில்லை என்பதை பல்தரப்பட்டோர் தற்போது உணர்ந்து வருகின்றனர்.
வடகிழக்கில் மூன்றில் ஒரு பங்கினரே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால் வடகிழக்கிற்கு வெளியே மூன்றில் இரண்டு பங்கு மூஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். தலைமைகள் விடுகின்ற சிறு பிள்ளைத் தனமான அறிக்கையினால் எமது மக்கள் பாதிக்கின்றனர் என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமை விடுகின்ற அறிக்கைகள் அவர் சுய நலத்திற்காகவும், தனிப்பட்ட ரீதியிமே தவிர அக்கருத்துக்களின் நிலைப்பாடு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு அல்ல என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
பிரச்சினைகள் என்பது எங்கும் இருக்கின்றன. எப்போதும் பிரச்சினைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மதத்திலும் கடும் போக்குடையவர்கள் இருக்கிறார்கள். எமக்காகவும், எமது சமூகத்திற்கெதிராகவும் எழுகின்ற பிரச்சினைகளை முறையாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
எமது கட்சி எதிர்காலத்தில் பாரியளவில் விரிவு படுத்தப்படவுள்ளது. கிராம சேவகர் பிரிவுதோறும் அமைப்பாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ளவுள்ளது. எமக்கானவற்றை நாம் பெற்றுக் கொள்வதுடன், பாரிய அபிவிருத்திகளையும் மக்களுக்காகச் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதன்போது மாநாட்டுத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை பேராளர்களால் ஆமோதிக்கப்பட்டன. அவையாவன,
01.மனித உரிமை மீறல் என்ற போர்வையில் இலங்கை அரசின் இறையாண்மையை கேள்விக்குட்படுத்தி அரசையும், சமூகங்களையும் சின்னாபின்னப்படுத்தும் முயற்சிகளுக்கு இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கின்றது.
02.சகல இனவாத சக்திகளுக்கும் எதிராக இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கின்றம
03.சமூகங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தக்கூடியவாறான அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் தான்தோன்றித்தனமாக செய்து வரும் அரசியல் சக்திகளுக்கு எதிராக இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கின்றது.
இப்பேராளர் மாநாட்டின்போது, 15 மீயுயர் பீட உறுப்பினர்களும், 19 உயர்பீட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது அண்மையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபிற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் பதவி வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் தேசிய காங்கிலஸ் கட்சியின் இணைப்பாளராகச் செயற்பட்டு வந்து அண்மையில் மரணமடைந்த தேசகீர்த்தி ஏ.பி.தாவூதின் நினைவாக கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
என்னா முரை சார் அப்பன் மகன் முரையா அஸ்ரப் அதாவுல்லா முரையா அதைதானே நீங்கள் அப்போவே முரைப்படி செய்தீர்கள் இன்னும் என்னா முரை சொல்கிரீரோ புரியல்ல
ReplyDelete