வீட்டினுள் புகுந்த கெமிக்கல் அரக்கன்..!
(நேர்வழி)
தரை துடைக்கும் சோப் ஆயிலில் செயற்கை வாசனை
துணி துவைக்க பயன்படும் சோப்பு பவுடரில் ரசாயன வாசனை...
துவைத்த துணியை மணமாக்க கம்போர்ட் என்னும்
செயற்கை வாசனைத் திரவியம்!!!
வேர்வை நாற்றத்தை போக்க மூக்கை மட்டுமல்ல...
நுரையீரலை துளைக்கும் ஸ்ப்ரேக்கள்....
ஆஸ்துமாவை இழுத்து வரும் நாப்தலின் உருண்டைகள்...!!!
வீடு மற்றும் ஆபிஸ் ரூம்களை மணக்க வைக்கும் ரூம் ஸ்ப்ரேக்கள்
மாதவிடாய் நாப்கினில் செயற்கை வாசனை...!!!
டாய்லட்,பாத்ரூமிற்கு ஓடோனில்,ஏர் ஃப்ரஷ்...
என எங்கெங்கு காணினும் கெமிக்கல் அராஜகம்....!!!???
இன்று ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்படும்
மூக்கைத்துளைக்கும் பல்வேறு பிராண்டுகளின் ஸ்ப்ரேக்களுக்கு இளைஞர்களும்,யுவதிகளும் அடிமையாகி அதுதான் உயர்ந்தது என உபயோகிக்கிறார்களே அதன் மூலம் அலர்ஜி,ஆஸ்துமாவை கொண்டு வர முடியும் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???
பெண்களின் நிறத்தை அதிகமாக்கி காட்டுகிறோம்
என மூளைச்சலவை செய்யப்படும் முகப்பூச்சுகள்...
இதன் விபரீதத்தை அறியாமல் நம்மில் பெரும்பாலானோர் அதன் அடிமையாய் மாறிவிட்டனர்......!!!
செயற்கை அழகின் விபரீதங்கள்-
இயற்கை அழகு பொருட்கள் அதிகமாக இருந்தாலும் புதியதாய்
வருகின்ற பொருட்களின் மீது தான் ஆர்வம் அதிகரிக்கின்றது.
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கையில் மேலும் அழகு படுத்துகிறேன் என்று பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது .
கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஷாம்பு, ஸ்ப்ரே
தலை குளிக்க வேண்டும் என்றால் ஷாம்பு இல்லாமல் குளிப்பதில்லை. அந்த அளவுக்கு இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள்.
பாதிப்பு
கண் எரிச்சல், மற்றும் பார்வை கோளாறு ஏய்படும்
தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம்.
பாதிப்பு
இந்த ரசாயனங்களின் மூலம் உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.
கண் அழகு சாதனங்கள்
கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.
பாதிப்பு
இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.
கன்னக் கதுப்பு
கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம்.
பாதிப்பு
கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.
முக அழகுப் பொருட்கள்
முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது.
பாதிப்பு
இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.
லிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம்
வாசனை திரவியங்கள்
கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன.
பாதிப்பு
தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.
இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.
நகப்பூச்சுகள்
நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை படித்த பின்னரும் அழகு சாதனங்கள் உபயோகிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இண்டோர் பொல்யூஷன்' - வீடு, ஆபீஸ் என்று உள்ளரங்க பகுதிகளில் ஓசைப்படாமல் சேரும் காற்று மாசு தான் சில மோசமான வியாதிகளுக்கு வித்தாக உள்ளது என்பது இன்னமும் கூட பலருக்கு தெரிவதில்லை.
வீட்டில், சமையல் அறையில், காஸ், கெரசின் ஸ்டவ் விடும் புகையில் ஆரம்பித்து, ஹாலில் உள்ள 'டிவி' பெட்டி, படுக்கை அறையில் உள்ள தலையணை, படுக்கை விரிப்பு, குளியல் அறையில் ஒட்டடை, கழிவுகள்... இப்படி வீட்டுக்குள் சேரும் 'காற்று மாசு'களுக்கு அளவே இல்லை. ஆனால், இதையெல்லாம் பெரும்பாலோர் பெரிதாகவே எண்ணுவதில்லை. கேன்சர் வரை வந்த பின்னும் கூட, வீட்டுக்குள் இருந்த காற்று மாசு தான் காரணம் என்பதை உணர மறுக்கின்றனர். இந்தியாவில் நகரங்களில் மும்பையில் தான் இப்படிப்பட்ட 'இண்டோர் ஏர் பொல்யூஷன்' அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசு என்றால் என்ன?
காற்று மாசு என்பது அசுத்தக்காற்று என்று சொல்லலாம். புகை, ரசாயன வாடை, கட்டுமான பொருட்கள் உட்பட சில வகை பொருட்களால் எழும் தூசு போன்றவை தான் காற்று மாசுக்கு தீனியாக உள்ளன. வீட்டில் இவை படிந்தால், போகப் போக மனிதர்களை பாதிக்க ஆரம்பிக்கிறது. சாதாரண இருமலில் ஆரம்பித்து, கடைசியில் தீராத வியாதியில் கொண்டு விடும் ஆபத்துள்ளது.
இதை தடுக்க வேண்டுமானால், இயற்கையான முறையில் உள்ள பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள கொசு விரட்டி, நாப்தலின் உருண்டை, தரை சுத்தத்துக்கு போடப்படும் ரசாயன திரவங்கள் போன்றவை காற்று மாசுக்கு பெரிதும் துணை போகின்றன.
சமையல் அறையில்:
பெண்களுக்கு பல வகையில் நோய்களை உருவாக்கும் இடமே சமையல் அறை தான். சமையல் அறை சுத்தமாக, காற்றோட்டமாக இருந்தாலே, பெண்களுக்கு ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. சமையல் அறையில் பயன்படுத்தும் காஸ் ஸ்டவ், கெரசின் ஸ்டவ், தரம் குறைந்ததாக இருந்தால், அது கக்கும் புகை உடலுக்கு கெடுதல். சுவாசக்கோளாறில் ஆரம்பித்து, கேன்சர் வரைக்கும் கொண்டு போய்விடும் ஆபத்து உள்ளது. சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், அதில் சமையல் செய்யும் பெண்களுக்கு கண்டிப்பாக காற்று மாசினால், நோய் வாய்ப்பு அதிகம்.
'டிவி'யிலும் ஏற்படும் காற்று மாசு:
'டிவி'யில் எப்படி காற்று மாசு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம், குறுகலான அறையில் உட்கார்ந்து 'டிவி' பார்க்கும் போது, அதனால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. 'டிவி'யில் இருந்து வெளிப்படும் ஒலிக் கற்றையால், வெளிப்படுத்தும் வாயுவால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், அறையில் சுத்தம் இல்லாவிட்டாலோ, அத்துடன் செயற்கை வாசனை பொருட்கள் பயன்படுத்தினாலோ காற்று மாசு அதிகரிக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். நாய் முதல் மீன் வரை வளர்ப்போர், அவற்றை சரிவர பராமரிப்பதில்லை. அதனால், துர்நாற்றம் வீசுகிறது. அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் சுவாசக்கோளாறு வருவது உறுதி.
குளியல் அறையில்:
குளியல் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாப்தலின் உருண்டை மற்றும் சிலவகை ரசாயன திரவங்கள் பயன்படுத்துகிறோம். சுத்தமாக கழுவி விடுவதை விட, இதுபோன்ற செயற்கை பொருட்களை தான் பலரும் நம்பியிருக்கின்றனர். ஆனால், இதுவே, ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்பதை அவர்கள் உணருவதில்லை. அடிப்படை சுகாதாரத்தை கூட குளியல், கழிப்பறைகளில் பலரும் பின்பற்றுவதில்லை. சரிவர சுத்தம் செய்யாததுடன், கழிப்பறை சென்றதும் கூட கை, கால்களை சுத்தம் செய்வதற்கு கூட தெரியாத நிலையில் பலரும் உள்ளனர். இந்த அஜாக்கிரதை தான், வியாதிக்கு வித்து.
அதிக ரசாயன கலப்பு:
தரைக்கு போட்டு சுத்தம் செய்யும் திரவமாகட்டும், கொசு விரட்டியாகட்டும், எதிலும், அதிக ரசாயன கலப்பு இல்லாமல் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். அதுபோல, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறைகள் தான் பாதுகாப்பானது. கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, தேங்காய் எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய் கலந்து 'ஸ்ப்ரே' செய்தால், கொசுக்கள் வராது. இதுபோல, நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துவதை விட, வேப்பிலை விழுதுகளை போட்டு வைத்தால் போதும். பூச்சிகள் அண்டாது. இப்படி எவ்வளவோ இயற்கை வழிகள் உள்ளன. ஆனால், நாம் வெகுதூரம் செயற்கை வழிகளில் சென்று விட்டோம்.
விழிப்புணர்வு வருமா?
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் காற்று மாசு காரணமாக ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம், இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதனால், காற்று மாசுவை சாதாரணமாக எண்ணாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறது. அன்றாட வாழ்வில் பல செயற்கை பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், காற்று மாசு பற்றி உணர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ரசாயானங்களின் புதைகுழிக்குள் விழாமல் இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரும் செல்வமான உடலையும்,உலகையும் பாதுகாப்போம்.............!!!
Post a Comment