தேசப்பற்று இருந்தால், அமெரிக்க குடியுரிமைகளை ராஜபக்ச குடும்பத்தினர் துறக்க வேண்டும் - கரு
தேசப்பற்று பற்றி மார்தட்டிக் கொண்டு மேடைகளில் உரத்த குரலில் பேசி வரும் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் எனத் தெரியுமா என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையிலேயே தேசப்பற்று இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க குடியுரிமைகளை ராஜபக்ச குடும்பத்தினர் துறக்க வேண்டும். இலங்கை என்ற நாட்டை முதன் முதலில் ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியவர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே.
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ராஜபக்ச சர்வதேச சமூகத்திடம் மண்டியிட்டு வேண்டிக்கொண்டார். இந்த சம்பவம் நாடாளுமன்ற ஹன்சார்டிலும், குரஹான் சாடகயே என்ற ஜனாதிபதியின் சுய சரிததத்திலும் பெருமிதமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும், தென் மாகாணத்திலும் பெருமளவிலான மக்கள் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்க எதிர்ப்பு என்பதனை விடவும், ராஜபக்சாக்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் செயற்படுகின்றனர்.
குறிப்பாக போரின் பின்னர் வழங்குவதாக தெரிவித்த எதனையும் இந்த ஆட்சியாளர்கள் வழங்கவில்லை இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டுக்க பெரும் அபகீர்த்தியை உண்டு பண்ணியுள்ளது மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர்.
படைவீரர்கள் உயிர்த் தியாகத்துடன் போரை வென்றெடுத்தது ஒரு குடும்பத்தை காப்பாற்றவோ அல்லது போதைப் பொருள் இராச்சியமொன்றை உருவாக்கவோ அல்ல. இந்த அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி குறித்து எந்தவிதமான கவலையையும் கொள்ளாது, சுயலாப நோக்கில் செயற்பட்டு வருகின்றது என கரு ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment