மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதி ஆக வேண்டுமா என்பதை நாங்களே தீர்மானிப்போம் - ரவூப் ஹக்கீம்
அரசாங்கத்தில் இருந்து நீங்குவதானால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவையும் விலக்கிக் கொள்ள நேரிடும். வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தையும் பறிகொடுத்தால் நிலைமை என்னவாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.
மேல் மாகாண சபை தேர்தலில், கம்பஹா மாவட்டத்தில், வத்தளை பிரதேசத்தில் வேலேயகொட பிரதேசத்தில் ஞாயிற்றுகிழமை (09) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்தவையாவன,
அரசாங்கத்தை விட்டு வெளியேற்றப்படும் சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாண சபை ஆட்சியிலும் நாங்கள் நிலைத்திருக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அங்கு அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்ள நேரிடும். அவ்வாறானால் அங்கு ஆட்சியமைக்க முன்வருமாறு கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண ஆளுநர் கோருவார், அவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை கூட்டமைப்பினர்; கோரக்கூடும். அவ்வாறன்றி, பலத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில் மாகாண சபையை ஆளுநர் கலைத்து விடலாம். அவ்வாறானால், நிலைமை என்னவாகும்? மீண்டும் தேர்தல் நடாத்த வேண்டி வரும்.
வட மாகாண சபை தேர்தலிலும் தோல்வியடைந்து, கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சியைப் பறிகொடுத்தால் அரசாங்கத்தின் நிலைமை என்ன? அவ்வாறான நிலைமையில் முடியுமானால் மாகாண சபையை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பலம் எத்தகையது என அரசாங்கத்தில் இருக்கும் இனவாதக் கட்சிகளுக்குத் தெரிவதில்லை. அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், அரசியல் நடத்தும் வல்லமை இறைவன் அருளால் முஸ்லிம் காங்கிரஸிக்கு இருக்கிறது. அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், நாங்கள் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருப்போம். அதனை அனைவரும் நன்றாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
பிரேமதாசவை ஜனாதிபதி ஆக்கியவர்கள் நாங்கள். சந்திரிக்காவை ஜனாதிபதி ஆக்கியவர்களும் நாங்கள் தான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி ஆவதானாலும் அதனை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருப்போம். இனவாத, தீவிரவாதக் கும்பல்கள் கூச்சல் இடுகின்றன என்பதால் நாங்கள் அரசாங்கத்தை விட்டு வலிந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், அரசாங்கம் எங்களை வெளியேற்றட்டும். மத்திய அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் போது மாகாண சபைகளின் ஆட்சியிலும் தொடர்பை துண்டித்துக் கொள்ள நேரிடும். அதன் விளைவு என்னவாகும் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு எத்தனையோ சக்திகள் எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தை விட்டு எங்களை வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக அதிலுள்ள தீவிரவாத சக்திகள் எங்களை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். அரசாங்கத்தை விட்டு நாங்களாகவே வெளியேறி விட வேண்டுமென எதிர்பார்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது.
நாங்கள் மிகவும் நாணயமாகவும், பக்குவமாவவும், நேர்மையாகவும் அந்த விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றோம். இந்த நாடு முழுவதிலும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தனக்குரிய தார்மீக பொறுப்பை தவறவிடாமல், முஸ்லிம்களைப் பற்றிய சரியான தகவல்களை அவை சென்றடைய வேண்டிய இடத்திற்கு சேர்ப்பிக்க வேண்டிய பாரிய பொறுப்பு இக்கட்சிக்கு இருக்கின்றது. சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை ஜெனீவாவில் கொண்டு வரப்படும் சூழ்நிலையில் இந்த நாட்டை தலைகுனிய வைக்க வேண்டும் என்ற நோக்கம் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கும் உடந்தையாக செயல்பட வில்லை.
ஆனால், நாட்டில் சட்டமும், ஒழுங்கும் நிலை நாட்டப்பட வேண்டும். இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். என்ற காரணத்தினால் ஒரு சில விடயங்கள் பற்றியவற்றை எங்களது பார்வையில் கூறவேண்டிய கடமை இந்தக் கட்சிக்கு இருக்கின்றது. அதை சகித்துக் கொள்ள முடியாமல் சிலர் எங்களை தாறுமாறாக பேசுகிறார்கள். அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கின்ற தீவிரவாதக் கட்சிகள் இந்த நாட்டு முஸ்லிம்களை வந்தான் வரத்தான்களாகவும், ஒட்டுண்ணிகளாகவும், சுரண்டிப் பிழைக்கின்றவர்களாகவும் பார்க்கின்ற கேவலமான நிலையில் அவர்களை அரசாங்கம் அரவணைத்துக் கொண்டிருந்தாலும் அதனை நாங்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தாங்கள் தான் அரசாங்கத்திற்கு பலம் சேர்க்கிறோம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், அந்த தீவிரவாத சக்திகள் காரணமாக அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களும், சிறுபான்மைச் சமூகங்களும் கொண்டிருந்த நம்பிக்கை படிப்படியாக இழக்கப்படுகிறது. அரசாங்கத்தின் பலவீனமாக அந்த தீவிரவாத சக்திகளேயே நாங்கள் பார்க்கின்றோம்.
எனவே. அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிப்பவர்கள் அந்த தீவிரவாத சக்திகள் தாம் என்பதை அரசாங்கம் இன்னும் உணராமல் இருக்கிறது. ஜனாதிபதி மிகவும் அனுபவம் வாய்ந்த பழுத்த அரசில்வாதி. இந்த தீவிரவாத சக்திகளின் போக்கு தமது அரசாங்கத்தின் பலம் என அவர் எண்ணிக் கொண்டிருப்பானால், அதைவிட பெரிய அரசியல் மடைமை வேறேதுவும் இருக்க முடியாது. அவர் இந்த தீவிரவாத சக்திகளின் பணயக் கைதிகளாக மாறிவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையையும், அபாய அறிவிப்பையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செய்ய வேண்டிய அவசியம் நாட்டின் நலன்கருதி மிகவும் நேர்மையாக சிந்திக்கும் எங்களுக்கு இருக்கின்றது. அவர்கள் வாய்க்கு வந்தவாறு முஸ்லிம் காங்கிரஸை திட்டித் தீர்ப்பது போல எங்களால் கீழ்தரமாக நடந்து கொள்ள முடியாது.
நேர்மையாகவும், பக்குவமாகவும் சில வேளைகளில் மௌனமாகவும் அவர்களது அசிங்கமான விமர்சனங்களை நாங்கள் பொறுமையோடு எதிர்கொள்கின்றோம். அவர்கள் வலிந்து வம்புக்கு இழுக்கின்ற பொழுது நாங்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போக முடியாது. அது எங்களது பார்வையில் அரசியல் முதிர்ச்சியான விடயமல்ல.
இன்று இந்த நாட்டின்; நீதியமைச்சராக இருக்கின்ற நான், வாய் திறந்தால் அதனால் ஏற்படும் தாக்கம் சாதாரணமானதல்ல. இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸை ஹெல உறுமய போன்றவை எவ்வாறு விமர்சிக்கின்றனவோ அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்தான் ஆஸாத்சாலி. அரசாங்கத்தை கூடுதலாக விமர்சிக்கப் போய் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த விதம் தவறானது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நான் பாதுகாப்புச் செயலாளருடன் வாதிட்டேன். அவரது பலம், பலவீனம் எப்படியாக இருந்தாலும் அரசாங்கத்தை அவர் விமர்சிக்கின்றார் என்பதற்காக பிழையாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய முடியாது என்ற மிகவும் திட்டவட்டமான நிலைப்பாட்டில் நான் இருந்தேன். சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறப்படும் இந்த நாட்டில் ஆஸாத்சாலியின் கைதை நீதியமைச்சராக இருக்கின்ற நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன். அதன் பயனாக நான் அதனை சுட்டிக்காட்டிய மறுநாளே அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் அரவே ஒற்றுமை இல்லை. தலைமைத்துவப் பிரச்சினை காரணமாகவும், உட்பூசல் காரணமாகவும் அந்தக் கட்சி பலமிழந்து நிற்கிறது. அவர்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றார்.
அரசியலில் 'தந்திரம்' இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.....!! அதுவும் இந்த தேர்தல் நேரத்தில்.....!! 'கூட்டததுடன் வெளியே போகலாம்' என்று பாராளுமன்றத்தில் தலைவர் சவால் விட்டபோது... இவரின் இந்த பேச்சை செயலில் காட்டியிருக்கவேண்டும்....!!
ReplyDeleteSuper thalaiwa
ReplyDelete'நாட்டின் நீதியமைச்சராக இருக்கும் நான் வாய் திறந்தால் விளைவு சாதாரனமாக இருக்காது'...... அதனால்தான் வாய்திறக்காமலே இருக்கிறீர்களா......? DEAR MR.ரவுப் ஹக்கீம் அவர்களே..... இது கொஞ்சம் ஓவராக உங்களுக்கு தெரியவில்லையா.......?? 'முழுப்புசணிக்காயையும் சோற்றில் மறைக்கும்' கதைமாதிரியல்லவா தெரிகிறது. வாக்கு வேட்டைக்காக மட்டும் எப்படியெல்லாமோ கதை வளர்க்கிறாரே...... எமது சமூகமும் இதற்கெல்லாம் இன்னும் 'ஆமா.....' போடுவார்களா...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete