முஸ்லிம் நாடுகளை, முஸ்லிம் காங்கிரஸ் குழப்பி தமது காரியங்களை சாதிக்க நினைக்கின்றது - ஜாதிக ஹெல உறுமய
விடுதலைப் புலிகளின் குரலாகவே நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் செயற்படுகின்றார். விடுதலைப்புலி தீவிரவாதிகளை ஆதரிப்பதற்காக இலங்கையை பழிவாங்க நினைப்பது அர்த்தமற்ற செயற்பாடாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும் இலங்கை விடயத்தில் இந்தியா எதிரான தீர்மானங்களை மேற்கொள்ளாது. இலங்கையின் வளங்கள் இந்தியாவிற்கு தேவைப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் முன்வைக்கப்படும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் இந்தியாவின் ஆதரவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் :-
இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். உண்மையில் இலங்கையில் என்ன நடந்ததென்பதை ஐ.நா. விடம் தெரிவித்துள்ளோம். இரு பக்க விசாரணையின்றி சர்வதேச அமைப்பினால் பக்க சார்பற்ற தீர்மானம் எடுக்க முடியாது. இன்று இலங்கையில் அமைதி நிலவுகின்றது. மக்களிடையே ஒற்றுமை காணப்படுகின்றது. இதனை பிரிக்கும் வகையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு செயற்படாது.
எனினும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நவநீதம்பிள்ளை விடுதலைப்புலிகளுக்காகவே செயற்பட்டு வருகின்றார். யுத்தத்தில் உயிரிழந்த விடுதலைப்புலிகளை நியாயப்படுத்தி அரசாங்கத்தினை பழிவாங்கும் இலக்கு மட்டுமே அவரிடம் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் குரலே நவநீதம்பிள்ளை என்பதுவே உண்மையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் விடுதலைப்புலி அமைப்புகளும் அவரை தூண்டி விட்டு தமக்கு சார்பான முடிவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. நாட்டில் தனித தமிழ் ஈழம் உருவாக்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்குமாயின் அதனை இப்போதே மறந்து விட வேண்டும். இந்த அரசாங்கம் இருக்கும் வரையில் புலம்பெயர் தீவிரவாதிகளின் எண்ணம் நிறைவேறாது.
மேலும் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது. எம்மை பகைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ளுமாயின் அது இந்திய அரசுக்கே பாதகமாக அமையும். இந்தியாவிற்கு எம்மீது எவ்வித அக்கறையும் இல்லை. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் எனினும் இலங்கையின் வளங்கள் இந்தியாவிற்கு தேவை. எமது துறைமுகங்களும் மின் நிலையங்களுமே அவர்களின் குறிக்கோள். எனவே, அதற்கு வேண்டியேனும் இந்தியா எமக்கே எதிராக வாக்களிக்க போவதில்லை.
சர்வதேச நாடுகளில் இலங்கை விடயத்தில் நல்லதொரு நிலைப்பாட்டினை வைத்திருந்தது. இன்றும் பல நாடுகள் எம்மை ஆதரிக்கின்றது. எனினும் இங்குள்ள தமிழ் முஸ்லிம் பிரிவினைவாதிகளும் எதிர்க்கட்சியுமே சர்வதேசத்தினை எமக்கு எதிராக திருப்ப முயற்சிக்கின்றது. மேற்கத்தைய நாடுகளை கூட்டமைப்பினரும் முஸ்லிம் நாடுகளை முஸ்லிம் காங்கிரஸும் குழப்பி தமது காரியங்களை சாதிக்க நினைக்கின்றனர். அவை இரண்டினையும் தூண்டி விடும் சக்தியாக ஐக்கிய தேசிய கட்சி செயற்படுகின்றது. எமது மக்கள் எவரேனும் தெளிவான கொள்கையில் செயல்பட வேண்டும். இலங்கையையும் அரசாங்கத்தினையும் காப்பாற்றவே மக்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment