இலங்கை முஸ்லிம்கள் சமாதானமாக வாழ்கின்றனர் - மகாநாயக்க தேரர்கள்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளில் யோசனை முன்வைக்கப்படுவதற்கு குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமே காரணம் என்று மகாநாயக்கர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர மற்றும் ராமாண்ய ஆகிய பீடங்களின் மகாநாயக்கர்கள் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில், கடிதம் ஒன்றை மகாநாயக்கர்கள் இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
அதில், அஸ்கிரிய மகாநாயக்கர் வண. உடுகம ஸ்ரீபுத்தரக்கித தேரர், மல்வத்த மகாநாயக்கர் திப்பட்டுவேவ சுமங்கல தேரர், அமரபுர மகாநாயக்கர் தவுல்தென ஞானசார தேரர் மற்றும் ராமாண்ய மகாநாயக்கர் நாப்பனே பிரேமஸ்ரீ தேரர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
சில அமைச்சர்கள் சட்டத்தை அரசியலுக்காக தமது கைகளில் எடுத்தமையை இன்று இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான காரணம் என்று அஸ்கிரிய பீடத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் பல அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டே, ஐக்கிய நாடுகளில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க ஆகியோர் இவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள். இந்தநிலையில் இலங்கையின் இராஜதந்திர நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லை என்று கூறமுடியாது. எனினும் பௌத்த மதம் உட்பட்ட மதங்களில் உள்ள சில குழுக்கள் மேற்கொண்டு வரும் தேவையற்ற நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.
இலங்கையில் முஸ்லிம்கள் சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர். எனவே அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் கத்தோலிக்க ஆயர்கள் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் முக்கியமானவராக உள்ளார். இந்தநிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் தம்முடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்றும் மகாநாயக்கர்கள் கோரியுள்ளனர்.
Post a Comment