Header Ads



சமகால அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ், உள்ளும் புறமும் ஓர் ஆய்வு

(அபூ ஸஹ்ரா)
        
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் உருவாக்கதின் நோக்கத்தினை அடைவதற்கான முயற்சிகளை செய்திருக்கின்றதா? குறிப்பாக ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின் கட்சியானது தன் சமூகம் சார்ந்த வகிபாகத்தினை சரி வரச் செய்து வருகிறதா? என்பதனை மதிப்பீடு செய்வதே இந்தப் பத்தியின் நோக்கம்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆனது 1980 களில் வட கிழக்கில் முஸ்லிம்களுக்கெதிராக சில தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்களினால் ஒடுக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அதிலிருந்து முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பினையும், முஸ்லிம்களின் அரசியல் ஐக்கியத்தினையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும்.

1987 இல் உருவான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வட கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் கணக்கிலெடுக்கப்படாத நிலையில் முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் கட்சியின் தேவை பரவலாக உணரப்பட்டது. இதன் காரணமாகவே 1988 இல் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக   அங்கீகரிக்கப்பட்ட  போது வட கிழக்கு முஸ்லிம்களிடையே  பலத்த  ஆதரவினைப்  பெற்றுக்  கொண்டது. கிராமங்களும் நகரங்களும், பாமரர்களும் படித்தவர்களும் அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியின் பின்னால் அணி திரண்டனர். இக்கால கட்டங்களில் அன்றைய அரசியல் சூழல் தொடர்பான விழிப்புணர்வு கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் அனைவரிடமும் பரவலாகக் காணப்பட்டது.

ஆனாலும், இந்த அரசியல் விழிப்புணர்வினை மேலும் வளர்த்தெடுத்து அவர்களை ஒரு அரசியல் சமூகமாக நிறுவனமயப்படுத்துவதில் மு. கா தவறிழைத்தது. விளைவு 1989 இல் கட்சி, பாராளுமன்ற அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தபோது "இனி எல்லாவற்றையும் கட்சியும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் பார்த்துக் கொள்வார்கள். எமது பனி முடிவடைந்து விட்டது." என்ற தோரணையில் மக்கள் கட்சியிலிருந்தும், அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் தூரமாகத் தொடங்கினர். 1994 இல் கட்சி அரசாங்கத்தில் பங்கெடுத்து அஷ்ரப் அவர்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டபோது முஸ்லிம் இளைஞர்களிடம் எஞ்சியிருந்த குறைந்த பட்ச அரசியல் உணர்வுகளும் காணாமல் போனது. அனைவரும் தமது அரசியல் வேட்கைகளைத் தூக்கியெறிந்து விட்டு  கட்சியினுள் செல்வாக்குள்ள நபர்களின் பின்னால் வேலை வாய்ப்புகளுக்காக "பைல்" களுடன் அலையத் துவங்கினர். சாதாரண வாக்காளர்களும் தமது நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளுக்காகவும், மானிய கொடுப்பனவுகளுக்காகவும் படையெடுத்தனர். கட்சியினுள் செல்வாக்குள்ள நபர்கள் இவற்றை தமது கட்சிக்காக அல்லாது தமக்கே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமக்கான சொந்த வாக்கு வங்கிகளை கட்டமைப்பதில் குறியாகவிருந்தனர்.

நாளடைவில் நிலைமைகளைப் புரிந்து கொண்ட அஷ்ரப் அவர்கள் இந்த இனத்துவ ரீதியான கட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மாறிச் செல்லும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முஸ்லிம் சமூகத்தையும் ஒருங்கிணைத்து அதனூடாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான உபாயங்கள் பற்றி சிந்திக்கத் துவங்கிய வேளையில் அவரது உயிர்  காவு கொள்ளப்பட்டது.

ரவூப் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ்:

அஷ்ரப் அவர்களின் மரணத்தோடு கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்கும் ரவூப் ஹகீம் அன்றிலிருந்து இன்று  வரை தனது தலைவர் பதவியினைப் பாதுகாத்துக் கொள்வதிலும், அதற்கு எது வித பாதிப்புக்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலுமே குறியாக இருந்து வருகின்றார். கட்சியின் வேலைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதிலோ அல்லது சமூகம் எதிர் நோக்கி வருகின்ற நெருக்கடிகளில் இருந்து சமூகத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதிலோ எது வித முனைப்புகளையும் காட்டுவதாக இதுவரை விளங்கவில்லை.

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தனது தேர்தல் பிரசார உத்தியாகவும், தனது இயலாமையை இமாலய சாதனையாகவும் சித்தரித்துக் காட்டுவதில் மாத்திரமே குறியாக இருந்து வருகின்றார்.

இன்று மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கட்சிக்கு தலைமை தாங்கிய காலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த நெருக்குவார சூழ்நிலைகளை விடவும் படுமோசமான ஒரு சூழல் ரவூப் ஹகீம் கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் காணப்படுகிறது. இன்று முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் வட கிழக்கு எல்லைகளையும் தாண்டி தேசிய ரீதியிலான பேரினவாத அடக்குமுறையாக உருவெடுத்திருக்கிறது.

இன்றைய மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதில் இருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டும் அவற்றுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் உள்ளன. ஒரு பொது பல சேனா அல்லது சிங்கள ராவண பலகாய புத்த துறவியோ அல்லது ஒரு பொலிஸ் நிலையைப் பொறுப்பாதிகாரியோ நினைத்த மாத்திரத்தில் ஒரு பள்ளி வாயலையோ அல்லது ஒரு முஸ்லிம் வியாபார நிலையத்தினையோ மூடி விடச் சொல்லும் நிலை உள்ளது.

இந்த நிலைமைகளைக் கையாள்வதற்கும், பொருத்தமான அரசியல் அணுகுமுறைகளைக் கண்டறிவதற்குமான தார்மீகப் பொறுப்பு முஸ்லிம்களின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் அது முஸ்லிம் காங்கிரசுக்கே உள்ளது.

 இத்தகைய நிலைமைகளில்  அரசாங்கத்தில் ரவூப் ஹகீம் நீதியமைச்சராக  இருந்து கொண்டு தொடர்ந்தும் வெறுமனே  வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தொடர்பில் பல்வேறு ஊகங்களும் அபிப்பிராயங்களும் நிலவுகின்றன.

அவற்றுள் பிரதானமானவை:

1. பசீர் சேகு தாவூதின் சதிக்குள் ரவூப் ஹகீம் சிக்குண்டு இருந்த காலப்பகுதியில் அவருக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தக்கூடிய சில ஆவணங்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

2. கட்சிக்குள் இருக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்  பதவிகளைப் பெறுவதற்காய் அரசுடன் இணைவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் ஹகீம் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. (இதைத்தான் ரவூப் ஹக்கீமும் அடிக்கடி சொல்லி வருகின்றார்)

இதனடிப்படையில்தான், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறது என்கிற வாதங்களே அவையாகும்.

ஆகவே, ரவூப் ஹகீம் அரசாங்கத்தை விட்டும் விலக எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் மேலே உள்ள காரணிகளில் ஏதாவது ஒன்றின் அல்லது இரண்டினதும்  அடிப்படையில் அது அவருக்கு பாதகமாக அமைந்து விடும் என்பதை மறுப்பதற்கில்லை.

இதனை உறுதிப்படுத்துவதாகவே அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் அமைந்துள்ளது.

மஹிந்த அரசாங்கத்தின் சவால்:

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மிகவும் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை ரவூப் ஹக்கீமுக்கு எதிராக மேற்கொண்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

தவிரவும் வெளியில் வராத இன்னுமொரு செய்தியும் உள்ளது. நீங்கள்  எம்மோடு இருப்பதா இல்லையா என்பதை தீர்மானியுங்கள் என்ற செய்தியோடு ஜனாதிபதி "நீங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள். உங்களோடு எத்தனை பேர் வருகின்றார்கள் ? பார்க்கலாம்." என்று ஹக்கீமிடம் சவால் விடுத்துள்ளார்.

இந்த சவாலின் பின்புலத்துக்கான விடையை தேடினால், சமகால அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏன் தனது வகிபாகத்தினை சரிவரச் செய்யாமல் தட்டுத் தடுமாறுகிறது? என்பதற்கான விடை கிடைத்து விடும்.

ஆம். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றக் கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருக்கின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் அவர்களுக்கு பிரதியமைச்சர் பதவியினை  வழங்குமிடத்து எந்நேரமும் அரசாங்கத்துடன் சங்கமம் ஆகுவதற்கு காத்திருக்கின்றனர். இவர்கள்தான் அனைத்து இலங்கை மக்கள் மீதுமான சர்வாதிகாரத்துக்கு அனுமதி வழங்கிய 18 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக பஷீர் சேகுதாவூதின் தலைமையில் கட்சிக்குள் சதி செய்தனர்.

இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து விட்டால் அது தனக்கு பாதகமாக அமைந்து விடும் என்று ரவூப் ஹகீம் பயப்படுகிறார்.

ரவூப் ஹக்கீமின் அச்சம் நியாயமானதா?

இன்று முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் வெறும் வெற்றுக் கோசங்களால் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்குகளைப் பெறுகிறது. தேர்தல் முடிந்த பின் அடுத்து வரும் ஆறு வருடங்களுக்கு கட்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண, பாராளுமன்ற உறுப்பினர்களைத் திருப்திப்படுத்துகின்ற கைங்கரியங்களில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இவர்களைத் திருப்திப்படுத்துவதில்தான் கட்சியின் எதிர்காலம் தங்கியிருப்பதாக கட்சியும் அதன் தலைமையும் கருதுகின்றது.

இது முற்றிலும் பிழையான ஒரு கருதுகோளாகும். முஸ்லிம் காங்கிரஸ் ஆனது  ஏனைய தேசியக் கட்சிகளைப் போல் பிரதேச நலன்களை முன்னிறுத்தி அரசியல் செய்கின்ற எந்தவொரு நபர்களிலும் தங்கியிருக்கின்ற ஒரு அரசியல் நிறுவனம் அல்ல. இது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்தக் கட்சியின் அடையாளங்களுக்கு அப்பால் தேர்தலில் குதித்த  ஜாம்பவான்கள் பலர் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். இது "சாதாரண வாக்காளர்கள், நபர்கள் என்றல்லாது கட்சி என்ற அடையாளத்துக்காவே வாக்களிக்கின்றனர்." என்பதை நிரூபிக்கிறது.

நிலைமைகள் இவ்வாறிருக்கையில், இலட்சக் கணக்கான வாக்காளர்களின் திருப்தியை விட அந்த மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்ற ஒரு சில நபர்களின் திருப்திதான் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுவது தவறான ஒரு வாதமாகும்.

தவிரவும், "முஸ்லிம் காங்கிரஸ்" என்ற கட்சியின் நோக்கம் முஸ்லிம் சமூகம் சார் அரசியல் நலன்களைக் கொண்டதே தவிர  கட்சிக்குள் இருக்கும் நபர்களின் நலன் சார்ந்தது அல்ல.

இன்று நிலைமைகள் தலை கீழாக மாறி கட்சி பணம் பண்ண வருகின்றவர்களின் சந்தையாக மாறி வருகிறது. இதில் கொடுமையான விடயம் என்னவென்றால் "நான் இன்னாருடைய மகன். ஒரு முழு அமைச்சராக வர ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?" என வெளிப்படையாகவே கேட்கின்ற அளவுக்கு கட்சியின் தரம் மிகவும் கீழ் நிலைக்கு இறங்கியிருக்கிறது.

யாரையும் முழு அல்லது அரை அமைச்சர்களாக ஆக்கி அழகு பார்ப்பதற்காகவோ, அல்லது இலங்கையின் முதல் தர பணக்காரர்களாக அழகு பார்ப்பதற்காகவோ முஸ்லிம்களுக்கான கட்சி  உருவாக்கப்படவில்லை.

 அவ்வாறிருந்தால் இதற்காக  அன்று நூற்றுக்  கணக்கான இளைஞர்கள் இரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள். பல பெறுமதிமிக்க உயிர்களும் இழக்கப்பட்டிருக்க மாட்டாது. கட்சிக்காக உயிர் நீத்தவர்களின் பட்டியல் அக்கரைப்பற்றிலே அலி உதுமான் , ஏறாவூரில் ஒரு தாரிக் என்று நீண்டு கொண்டு செல்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் முன்னுள்ள தெரிவுகள்:

1. கட்சியை சமூக மயப்படுத்தல்.
2. நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுக்கு ஈடாக முஸ்லிம் சமூகத்தினது அரசியல் நலன்களை உறுதிப்படுத்துகின்ற வகையில் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் இயங்குவதற்கு ஆயத்தமாதல்.

1.கட்சியை சமூக மயப்படுத்தல்:

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அது கடந்து வந்திருக்கும் 30 வருட வரலாற்றில் இன்னமும் சமூக மயப்படுத்தப்படாமல் இருப்பது ஒரு நீண்ட கால குறைபாடாகும். இதுவே பிரதேசவாரியாக தனி நபர்கள் ஜாம்பவான்களாக மாறி, அவர்களின் நலன் சார்ந்து  கட்சிக்கும் தலைமைக்கும் அழுத்தங்களை கொடுப்பதோடு , கட்சிக்கே சவால் விடுக்கின்ற ஒரு நிலைமையினையும் உருவாக்கி வருகிறது.

இந்நிலைமைகள் கட்சிக்கும்  மக்களுக்கும் இடையே இடைவெளியினை உருவாக்குவதில் கணிசமானளவு பங்களிப்பு செய்திருக்கின்றது. தவிரவும், இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக தோன்றியுள்ள தீவிர இனவாத செயற்பாடுகளும், அது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் காட்டி வருகின்ற அசமந்தப் போக்கும் அதன் ஆதரவுத் தளத்தில் கணிசமானளவு எதிர் உணர்வலைகளை தோற்றுவித்திருக்கின்றன.

எனவே, எதிர்காலத்தில் உள்ளும் புறமுமாக கட்சியை நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்ற சூழலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள கட்சி இனிமேலாவது அதனை சமூக மயப்படுத்துகின்ற பணிகளை ஆரம்பிக்க வேண்டும். அனைத்துக் கிராமிய மட்டங்களிலும் கட்சியின் நேரடித் தொடர்புகள் சீராகப் பேணப்படுதல் வேண்டும்.

2.எதிர்கால சமூக நலன்களுக்காக ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் இயங்க ஆயத்தமாதல்:

இன்று நாட்டில் காணப்படும் சர்வாதிகார சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் அதனை தனித்து நின்று எதிர் கொள்வது என்பது ஒரு சவாலான விடயமாகும்.

எனவே, அது தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நிகழ்ந்து வருகின்ற புதிய மாற்றங்களுக்கு ஏற்ப முற்போக்கு ஜனநாயக அரசியல் சக்திகளுடன் இணைந்து ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் இயங்குவதற்கு  ஆயத்தமாக வேண்டும். அதுதான் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் பாதுகாப்பதற்கான சிறந்த மார்க்கமாக அமையும்.

அதற்காக கட்சியானது தனது "நிறுவனத் தன்மை" பண்புகளையும் நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் எடுத்து வந்த நிலைப்பாடுகளும், அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்து வருகின்ற கருத்துக்களும் கட்சியினதும், அதன் தலைவரினதும் ஆளுமைப் பண்புகளை கேள்விக்குற்படுத்தி வருகின்றன.

உதாரணமாக பின்வரும் சில விடயங்களைக் குறிப்பிட முடியும்.

 * இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டபோது "தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி அரசாங்கத்துடன் இணையப்போகின்றார்கள் என்றிருந்த சூழலில் 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலையிலேயே நாம் அரசுடன் இணைந்து கொண்டோம்." என்று பேசினார். அரசாங்கத்தை விட்டும் வெளியேறி மீண்டும் அரசுடன் இணைந்து கொண்டு திரும்பவும் அதையே பேசி வருகின்றார்.

 * கடந்த வருட கிழக்கு  மாகாண சபை தேர்தலில் மு.கா அரசாங்கத்துக்கு எதிராக பேசியது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி விசாரித்த போது, "  ஏக மம நெவே சேர் . அற ஆசாத் சாலி கியன பிஸ்ஸா தமை வெடியம கதா கலே" (அது நான் இல்லை சேர் அந்த ஆசாத் சாலி பைத்திய காரன்தான் அதிகமாக பேசியது) என்று சொல்லி விட்டு அதனை பொது அரங்கிலும் வெளிப்படையாகப் பேசியமை.

*. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஐ. நா விடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரித்தபோது "அவற்றை ஹசன் அலிதான் கொடுத்தார்" என தலைமைத்துவப் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தமை.

இவ்வாறான நிலைப்பாடுகளும், பேச்சுக்களும் முஸ்லிம் காங்கிரஸ் எது விதமான தெளிவான அரசியல் நிலைப்பாடுகளும் இன்றி எழுந்தமானமாகவே எல்லாவற்றையும் செய்து வருவதான ஒரு தோற்றப்பாட்டினை உருவாக்கி வருகிறது.

எனவே, முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் தனது தவறுகளை சுய விமர்சனங்களுடன்  முழுமையாக ஒப்புக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொண்டு, நாட்டில் சிறுபான்மை மக்கள் விடயத்தில் நெகிழ்வுப் போக்கினை கொள்கையாகக்கொண்டு இயங்குகின்ற முற்போக்கு சக்திகளை இனம் கண்டு அவர்களுடன் ஒரு பொது இணக்கப்பாட்டின் கீழ் வேலை செய்வதற்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.

முஸ்லிம் மக்களின் கடமை:

இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள், தாம் எதிர் நோக்குகின்ற சவால்களை அரசியல் ரீதியாக எதிர் கொள்வதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளன.

1. புதிய ஒரு அரசியல் ஸ்தாபனத்தை உருவாக்கி வளர்த்தெடுப்பது.
2. இருக்கின்ற கட்சியான முஸ்லிம் காங்கிரசை மக்கள் நலன் சார்ந்து இயங்குவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பது.

இவற்றுள் முதலாவது தெரிவானது மிக நீண்ட காலங்கள் எடுக்கக் கூடியதும், அதேநேரம் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற வன்முறைச் சூழலை கையாள்வதற்கான ஒரு அவகாசத்தினை தராததுமான ஒரு தெரிவாகும்.

இந்நிலையில் இரண்டாவதாக உள்ள தெரிவே மிகச் சாத்தியமானதும், உச்ச பலன்களை தரக் கூடியதுமான தெரிவாக இருக்க முடியும்.

இதனடிப்படையில், கட்சி சார்பாக தம்மை பிரதி நிதித்துவப் படுத்துகின்ற நபர்களுக்கு, அவர்கள்  சமுதாய நலன் சார்ந்து தெளிவான அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதும், அதற்கு மாற்றமாக தனி நலன்கள் சார்ந்து அரசியல் முன்னெடுப்புக்களை செய்பவர்களை நிராகரிப்பதும் முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்ற குறைந்த பட்சக் கடமையாக இருக்கின்றது.

தவிரவும் பிரதேச மட்டங்களில் இயங்குகின்ற சமூக நிறுவனங்களும், உலமாக்களும், துறைசார் ஆளுமைகளும் கட்சித் தலைமைக்கு சரியான அழுத்தங்களை வழங்க வேண்டும்.

இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பங்கினை சரி வரச் செய்தே ஆக வேண்டும். தவறுகின்ற போது அது சமூகத்துக்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.

இந்தக் கட்சிக்காக சமூகத்தில் இருந்து பல தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆயிரக் கணக்கானவர்களின் இரத்தங்களும், வியர்வைகளும் சிந்தப்பட்டிருக்கின்றன. பல பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன.

இன்று அந்த சமூகம் கட்சியின் மூலமான தயவை நாடி நிற்கின்றது. ஒரு இக்கட்டான சூழலில் கட்சியின் நேர்மையானதும், அவசியமானதுமான செயற்பாடுகளை வேண்டி நிற்கின்றது. அதற்காக அணைத்து மட்டங்களிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய நாட்களில்  சமூக வலைத் தளங்களையும், இணையங்களையும் பயன்படுத்துவோர் இத்தகைய அழுத்தங்களைக் கொடுப்பதற்கு அவற்றை சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

இந்த முயற்சிகள் தோற்றுப் போகின்றபோது , கட்சியை சரியான வழியில் இட்டுச் செல்வதற்கும், அதற்காக கட்சியினை பொருத்தமானவர்களிடம் ஒப்படைப்பதற்குமான மாற்று வழிகளில் மக்களும், இளைஞர்களும் இறங்க வேண்டும்.

ரவூப் ஹக்கீமின் பொறுப்பு:

முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய அரசாங்கத்திடம் ஒரு கைதியாகக் கட்டுண்டு கிடப்பதின் மர்மம்  உண்மையிலேயே கட்சிக்குள் இருக்கும் அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் "கட்சித் தாவல்" அச்சுறுதலா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா ? என்பது  அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மட்டும்தான் தெரியும்.

உண்மையில் ஒரு மக்களுக்கான இயக்கத்தின் தலைவருக்கு தன் மக்களின் மேல் நம்பிக்கை இருந்தால் மேற்சொன்ன எவையுமே அவரைக் கட்டுப்படுத்த முடியாது.

எது எவ்வாறிருப்பினும் "மனிதன் மறதிக்கும் தவறுகளுக்கும் இடையில் படைக்கப்பட்டிருக்கின்றான்". இதற்கு ரவூப் ஹக்கீமும் விதி விலக்காக இருக்க முடியாது. இருந்தபோதிலும் ஒரு தலைவனின் 'தவறு'' அவர் சார்ந்த சமூகம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கான 'விலையாக' ஆகுவதற்கு அந்த சமூகம் அனுமதிக்க முடியாது. சமூகம் தொடர்பான  பொறுப்புக் கூறலில் அவர் இழைக்கின்ற தவறுகளை மன்னிக்கவும் மாட்டாது.

முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் இன்றளவிலும் அதன் தலைவருக்கு விசுவாசமாகத்தான் இருக்கின்றார்கள். தலைவரின் தனி மனிதத் தவறுகள் எதுவாக இருந்தாலும் அதனை அவர்கள் மன்னிக்க ஆயத்தமாக இருக்கின்றார்கள். அவரைத் தங்கள் தோள்கள் மீது சுமப்பதற்கு எப்போதும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். ஆனால், அதற்கு முன்நிபந்தனையாக மு.கா தலைவர் தனது தவறுகளை சுய விமர்சனம் செய்து , இந்த கட்சியினை ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்வதற்கான மக்கள் ஆணையினை வேண்டி மக்கள் காலடியில் தன்னையும் கட்சியையும் முன்னிறுத்த வேண்டும்.

 கட்சியானது  மக்களுக்கான இயக்கம் என்ற அடிப்படையில் சரி வர இயங்குகின்றபோது கட்சித் தலைமையையும் மக்களையும் பிரிக்க முடியாது என்ற அடிப்படையினை விளங்கிக் கொண்டு ரவூப் ஹகீம் அவர்கள்  தனது நகர்வுகளை செய்வது அவருக்கு நன்மை அளிக்கும்.

எனவே, இன்றைய நெருக்கடியான சூழலில் ஒரு சமூகத்தைப் பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சியின் தலைவர் என்ற வகையில் தனக்கிருக்கின்ற பொறுப்பினை சரி வரச் செய்து இந்த அரசியல் ஸ்தாபனம் மீண்டும் மக்களுக்கான பாதையில் பயணிப்பதை ரவூப் ஹகீம் உறுதிப்படுத்த வேண்டும்.

தவறுகின்றபோது, "மக்களின் தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த இயக்கம் அழிவதற்கு காரணமாக இருந்த தலைவர்" என்ற அவப் பெயரினை வராலாறு நெடுகிலும் நிரந்தரமாகச் சுமப்பது தவிர்க்க முடியாதது.

1 comment:

  1. Very Nice Article Please consider about it it is very useful article Mr. Rauf hakeem

    ReplyDelete

Powered by Blogger.