மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகரும்,முன்னாள் காத்தான்குடி பிரதேச சபையின் தவிசாளரும்,மூத்த அரசியல் வாதியும் ,சமூக சேவையாளரும் ,காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் தியாக வாழ்வையும் ,ஈடிணையற்ற பணிகளையும் நினைவு கூறும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வெளியிடும் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர்எம்.ரீ.எம்.ஹாலித் ஜேபி தலைமையில் 28-03-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதன் போது அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூலின் முதற்பிரதி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அஷ்ஷேய்க் அப்துல்லாஹ் றஹ்மானி , பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோரினால் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் , பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.
இங்கு நூல் நயவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.
இதில் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் தொடர்பான நினைவுச் சொற்பொழிவை ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ,இந் நூல் ஆசிரியருமான கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி நிகழ்த்தினார்.
காத்தான்குடியில் பிறந்து வளர்ந்து முழு இலங்கை முஸ்லிம்களுக்கும், மாற்றுச் சமய சமூகத்தினருக்கும் முன்மாதிரியான ஒரு சமூகத் தலைவராக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களின் வாழ்க்கை பற்றி சமகால மற்றும் எதிர்கால சந்ததிகளின் வாசிப்புக்காக வெளியிடப்பட்டிருக்கும் இவ்வரலாற்று நூல் வரவேற்புக்குரிய விடயமே என்பதில் மாற்றுக் கருத்துக்கள் எவருக்கும் இருக்காது.
ReplyDeleteஎனினும் இத்தகைய ஒரு உத்தம நிகழ்வில் 'அத்தர் போத்தலில் துளி மலம் கலந்தது போல்' மண்ணின் மைந்தன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை முதன்மைப்படுத்தி விழாவை நடாத்தியுள்ளதுதான் பெரும் வேதனையையும் கவலையையும் அளிக்கிறது.
ஏனெனில், நாம் பெருமையோடு நினைவு கூறும் பெருந்தகை அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் அரசியலையும், சமூகப் பணியினையும் கனவான்தனமாகவும், முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்குப் பயந்த மார்க்கக் கடமையாகவும் தனது வாழ்நாளில் நிறைவேற்றியிருந்தார். ஆனால் அவரது பெருவாழ்வு கூறும் உயர்நூலின் முதல் பிரதியை அரசியலில் மாறாக் கறைபடிந்த வரலாறுடைய இரு கரங்கள் ஏந்தியதுதான் கவலைக்குரியது. இந்தக் கரங்களை விடவும் தூய்மையான கரங்கள் விழா ஏற்பாட்டாளர்களான சம்மேளனத்தாருக்கு கிடைக்காமல் போனது வேதனைக்குரியது. முஸ்லிம் சமூக அரசியல் என்ற பெயரில் அத்தனை அயோக்கியத்தனத்தையும், தில்லுமுல்லுகளையும் அன்று தொட்டு இன்று வரை அப்பட்டமாகச் செய்து கொண்டிருக்கும் அரையமைச்சர் ஹிஸ்புல்லாதானா முதற்பிரதியைப் பெற இவர்களுக்குக் கிடைத்தார்?
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் முஸ்லிம் அரசியலின் தனித்துவ அடையாளத்தை தூக்கி நிறுத்துவதற்காக காத்தான்குடி மண்ணில் அத்திவாரமிட்டவர். ஆனால், இங்கு நின்று கொண்டிருக்கும் முதற்பிரதி பெற்றவரோ அந்தத் தனித்துவ அரசியல் இன்று சின்னா பின்னமாகிப் போயுள்ள வரலாற்றைத் தொடக்கி வைத்தவர் என்ற சிறுமைக்குரியவர் என்ற பேருண்மையை நாடே நன்கறியும்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் மார்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளிப்படுத்திவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக்களையும் ஒன்று திரட்டி 'பத்வா' வழங்கச் செய்து தௌஹீத் எனும் தூய ஈமானியக் கொள்கையைப் பாதுகாப்பதற்காக துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். செயற்பட்டவர். ஆனால், மத்தியில் நின்று கொண்டிருக்கும் முதற்பிரதி பெற்றவரோ இன்று காத்தான்குடிச் சமூகத்தில் இடம்பெறும் அத்தனை வகையான மார்க்க விரோத சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் தனது அற்பத்தனமான அரசியலுக்காக கபடத்தனமாக போசாக்களித்து வளர்த்து வருபவர் என்பதனையும் நாம் மறந்து விட முடியாது.
-புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ எச்சந்தர்ப்பத்திலும் உண்மையைப் பேசி நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் நேர்மையாகக் குரல் கொடுத்தவர். ஆனால், இவரோ அற்ப சொற்ப அரசியல் சுய இலாபங்களுக்காக பொய்யும், புரட்டும், அவதூறுகளையும் கூறி அநியாயத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ReplyDeleteஅஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த காலத்திலும் கூட முஸ்லிம்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் உயிரையும் பணயம் வைத்து குரல் கொடுத்தவர். ஆனால், இந்த முதற்பிரதி பெறும் பிரமுகரோ பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சமூகத்தின் நலன்களைத் தாரை வார்த்து காட்டிக் கொடுப்புக்களைச் செய்தவர். தம்புள்ளை பள்ளிவாயல் பௌத்த மதத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட சமயம் முழு முஸ்லிம் சமூகமும் ஆழ்ந்த கவலையில் இருந்த வேளையில் 'பள்ளிவாயலின் ஒரு தகரத்திற்குக்கூட எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. எல்லாமே ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும் பொய்' என பகிரங்கமாகவே அறிக்கை வழங்கியவர்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ பள்ளிவாயல் சொத்துக்களை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாகத் தொழில்பட்டவர். ஆனால், இந்த முதன்மைப் பிரமுகரோ தனக்காகவும், தனது சகாக்களுக்காகவும் பள்ளிவாயல்களின் காணிகளையே அரச காணிகள் என நீதிமன்றங்களிலும், பொது மேடைகளிலும் தெரிவித்து கபளீகரம் செய்து கொண்டிருப்பவர்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ நாகரீக ஜனநாயக முறையில் மாற்றுக் கருத்துக்களை எதிர்கொண்டு அரசியல் புரிந்தவர். ஆனால், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ மாற்றுக் கருத்துக்களையும், மாற்று அரசியலாளர்களையும் அடக்குவதற்காகவும், அரசியல் பதவிகளை வென்றெடுப்பதற்காகவும் தொடர்ச்சியான வன்முறைகளை மேற்கொண்டு வருபவர்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ எமது இஸ்லாமிய மத கலாசார விடயங்களை எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் இஸ்லாத்தின் காவலராக இந்த மண்ணின் கண் வாழ்ந்து மறைந்தவர். ஆனால், அவரது வாழ்க்கைச் சரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதற்பிரதி பெறும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ அடுத்தவர்களை தற்காலிகமாகவேனும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக சாமியார்களைகூட முதுகு வளைத்து கைகூப்பி வணங்கும் மார்க்க விரோத செயல்களில் ஈடுபட்ட வரலாறுடையவர்.
இப்படியாக, ஒரு முன்மாதிரியான கனவானாகவும் சமூக இலட்சியத்திற்கான அர்ப்பணத்துடனும் மார்க்க வரையறை வழுவாதும் வாழ்ந்து மறைந்த ஒரு மாமனிதனின் வரலாற்று நூல் வெளியீட்டுக்கு இது போன்றதொரு பிற்போக்கான, போக்கிரித்தனம் நிறைந்த, நயவஞ்சகம் கொண்ட, வாக்குறுதியை மீறிய, மக்களின் வைப்புப் பணத்தை ஏப்பமிட்ட ஒருவரை முதன்மைப்பிரதி பெறுவதற்காக அழைப்பதென்பது அந்த உன்னத மனிதரை அவமதிக்கும் செயலாகும் என நான் நம்புகின்றேன்.
-புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-