முஸ்லிம்கள் ரோஹிங்யா என்று குறிப்பிட கூடாது - பௌத்தர்கள் போர்க்கொடி..!
அரை நூற்றாண்டு காலம் நடைபெற்றுவந்த ராணுவ ஆட்சியிலிருந்தும் சுயமாக விதித்துக்கொண்ட தனிமையிலிருந்தும் மியான்மர் சமீபத்தில்தான் வெளிவந்துள்ளது. பெரும்பான்மையாக புத்த மதத்தினர் வாழும் இந்த நாட்டின் மக்கள்தொகை இதுவரை அறியப்படவில்லை. கடந்த 1983-ல் வெளிக்கணிப்புகளின் அடிப்படையில் குறிக்கப்பட்ட 60 மில்லியன் என்ற எண்ணிக்கை பல மத, இன, சிறுபான்மையினரை ஒதுக்கியதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அந்நாட்டின் மக்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. பெரும்பாலும் ஆசிரியப் பணியில் இருப்பவர்களே அந்நாட்டின் பாரம்பரிய உடையில் காலை 7 மணி முதல் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்தக் கணக்கெடுப்பில் நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்டுவரும் முஸ்லிம் சிறுபான்மையினர் தங்களை ரோஹிங்யா என்று குறிப்பிடக்கூடாது என்ற அரசு உத்தரவு மத, இன அழுத்தங்களை தூண்டியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
வரும் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த கணக்கெடுப்புப் பணி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனத்தொகை நிதியத்தின் உதவியுடன் மியான்மர் அரசால் நடத்தப்படுவதாகும். இதில் மக்களுக்கு அளிக்கப்படும் கேள்வித்தாளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி அவர்களின் கல்வி விவரம், வேலைவாய்ப்பு அளவு, சுத்தமான குடிதண்ணீர், உணவு போன்றவற்றை அடைவதில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் போன்ற பல செய்திகளுக்கான விடைகள் கேட்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, மிகவும் முக்கியமான இனம் பற்றிய கேள்விகளும் இடம் பெற்றுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களாக ராக்கின் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,40,000 பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில் ரோஹிங்யா என்று குறிப்பிடுவதன்மூலம் இவர்களின் நிலையை ஸ்திரப்படுத்தமுடியும் என்று எண்ணும் புத்த பிரிவினர் இந்த கணக்கெடுப்பை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, சென்ற வாரம் வெளிநாட்டு சேவை பணியாளர்களையும், அலுவலகங்களையும் இவர்கள் தாக்கியுள்ளனர்.
மியான்மரின் அதிபர் தான் செய்னின் தகவல் தொடர்பாளர் ஏ ஹிடுட் இந்த முஸ்லிம் மக்கள் கணக்கெடுப்பின்போது பெங்காலி என்று குறிப்பிடவேண்டும் என்றும் ரோஹிங்யா என்று குறிப்பிடப்படும் தகவல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் நேற்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த மக்களின் இன அடையாளம் அனுமதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. சர்வதேச தரத்திற்கு இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுவதால் அனைவரின் சுய அடையாளமும் குறிப்பிடப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் தூதரகமும் ஆட்சேபணை எழுப்பியுள்ளது.
Post a Comment