வெனிசூலாவில் ஜனாதிபதிக்கு எதிராக நூதன போராட்டம்
வெனிசூலாவில் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றத் தவறிய அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கண்டித்து எதிர்க்கட்சியினர் சமையல் பாத்திரங்களை ஏந்தியவாறு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக மகளிர் தினத்தையொட்டி வெனிசூலா தலைநகர் கராகஸில், உணவு அமைச்சகத்தை முற்றுகையிடுவதற்கு முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது, "நாட்டில் எதுவுமில்லை, எதுவுமில்லை' என்று அவர்கள் முழக்கமிட்டனர். வெனிசூலாவில் பால், சீனி, வெண்ணெய், ரொட்டி உள்ளிட்ட பொருள்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மக்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த நாட்டில் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான ஹென்றி கேப்ரைல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
வெனிசூலா அதிபர் தேர்தலில் இரண்டு முறை அவர் போட்டியிட்டுள்ளார். இதில் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் மதுரோவை எதிர்த்து களம் இறங்கினார்.
வெனிசூலாவில் நாள்தோறும் நிகழும் வன்முறைகளால் மக்கள் தெருக்களில் அச்சமின்றி நடமாட முடியவில்லை என்ற கருத்து ஏற்பட்டுள்ளது. வெனிசூலாவின் மாரகாய்போ, சான் கிறிஸ்டோபல், வேலன்சியா உள்ளிட்ட பிற நகரங்களிலும் மக்கள் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment