மஹிந்தவா, பள்ளிவாசலா என மக்களிடம் உணர்ச்சியை ஊட்டிய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை - அதாஉல்லா
(எம்.ஏ.றமீஸ் + எம்.வை.அமீர் + Abdul Gaffoor)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயராகச் செயற்பட்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களும் சாய்ந்தமருது பிரதேசமக்களும் தேசியகாங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு (24-03-2014) இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அதாஉல்லா குறிப்பிடுகையில்,
நாம் பல்வேறான இன்னல்களைத் தொடர்ச்சியாக சந்தித்தவர்கள். நாம் பட்ட கஷ்டத்திற்கான தீர்வினை நாமே பெற்றுக் கொள்ள வேண்டும். எமது பிரச்சினைகளை எமது சந்ததிகளுக்கு கொண்டு செல்லத் தேவையில்லை. நாம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டுமாக இருந்தால் நமக்கான பிரச்சினைகளை நாம் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாய்ந்தமருதுப் பிரதேசம் பல்வேறான தேவைகளுடன் காணப்படும் பிரதேசமாகும். இங்குள்ள மக்கள் எமக்கெதிராக வாக்களித்தாலும் இவ்வூரைப்பற்றி நான் செல்லுமிடமெல்லாம் கூட்டங்களில் கதைத்திருக்கின்றேன். இம்மக்களின் தாகத்தை முடியுமான அளவு தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும்.
எதிர் வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்காக நாம் வட்டாரங்களைப் பிரிக்கின்ற முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இந்த வட்டாரங்கள் பிரிக்கப்படுகின்றபோது எந்தச் சமூகத்திற்கும், எந்த ஊருக்கும், பாதிப்புகளோ குறைபாடுகளோ ஏற்படா வண்ணம் அனைவரும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படும் முறையில் இதன் நடவடிக்கைகளை நாம் முன்கொண்டு வருகின்றோம். எந்த பிரதேசமாகட்டும், அல்லது எந்த ஊராகட்டும் அந்தப் பிரதேசத்திற்கென அரசியல் தலைமைகள் இருக்க வேண்டும். அங்கு அரசியல் பலம் இருக்க வேண்டும். அவர்களது பிரச்சினைகளை அவர்களாகத் தீர்க்க வேண்டும். அவர்களுக்கான அபிவிருத்திகளை அவர்களாகச் செய்ய வேண்டும்.
கட்சித் தலைமைகள் சமூகத்தின் நலனுக்காக செயற்பட வேண்டும். தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவென காலத்திற்குக் காலம் கதைகள் சொல்லி திரிய வேண்டியதில்லை. பிரச்சினைகள் என்பது காலத்திற்குக் காலம் வருவதே. அந்தப் பிரச்சினைகளை சமூகத்தில் பூதாகரமாக்கி தேர்தற் கால வாக்கு வேட்டைக்கான சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளக் கூடாது. கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது மஹிந்தவா? பள்ளிவாசலா என மக்கள் மத்தியில் உணர்ச்சியை ஊட்டி விட்டு பின்னர் மஹிந்த அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டது முஸ்லிம் காங்கிரஸ் தலைமை. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு இடைவெளிக்குள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எமது சமூகத்திற்கு ஏற்பட்ட எந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கின்றது அல்லது அக்கட்சி எமது மக்களுக்காக செய்த அபிவிருத்திதான் என்ன என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வட கிழக்குக்கு உள்ளேயும் வடகிழக்கிற்கு வெளியேயும் வாழ்கின்ற எமது மக்களுக்கு பாதிப்பேற்படாது நாம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். கல்முனை மாநகரின் முன்னாள் மேயர் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டது போல்தான் நாமும் கட்சியிலிருந்து வெளியேறினோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உண்மையான கட்சிக் காரர்கள் யாருமில்லை. கட்சியின் செயலாளர் ஹசன் அலி மாத்திரம்தான் கட்சிக் காரராக இருக்கின்றார். அவரும் எதற்காக இதுவரை இருக்கிறார் என்று தெரியவில்லை. இரண்டில் ஒன்றைப் பார்த்து விட்டு வெளியேறலாம் என்ற எண்ணத்துடன் இருக்கிறாறோ தெரியவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட நோக்கத்தில் நின்றும் தற்போது மாறுபட்டதாக வேறு வழியில் வேறு போக்கில் செல்கிறது என்றார்.
Post a Comment