ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கு இந்தியாவில் பெண்குழந்தை பிறந்தது
கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 9.30 மணி அளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் பெண்குழந்தை இந்தியாவின் குர்கான் பகுதியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் ஆய்வு மருத்துவமனையில் பிறந்தது. புதன்கிழமையன்று இலங்கைக்கு செல்லும் வழியில் இந்தியா வந்த அதிபர் ஹமீத் கர்சாய் மருத்துவமனைக்குச் சென்று தனது மனைவியையும், மகளையும் பார்த்துவிட்டுச்சென்றார்.
இந்தத் தகவல்களைத் தெரிவித்த ஆப்கனின் இந்தியத் தூதரான ஷைதா முகமது அப்தலி தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் இத்தகவல் குறித்து மருத்துவமனையிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்த வார துவக்கத்தில் அதிபரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
பிரசவ சமயத்தில் அதிபரின் மனைவிக்கு சிறப்பு மருத்துவ உதவி தேவைப்பட்டதால் இந்தியாவிற்கு செல்லுமாறு ஆப்கானிஸ்தான் நாட்டு மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அவர்கள் இந்தியா வந்துள்ளனர். இன்று மாலை அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பக்கூடும்.
இந்த விபரங்களைத் தெரிவித்த அப்தலி இதற்கான ஒத்துழைப்பை நல்கிய இந்திய அரசாங்கத்திற்கும், சிறந்த சேவைகளை அளித்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment