மக்களின் நலனுக்காகவே பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுகிறேன் - கொழும்பு மேயர் முஸம்மில்
‘கொழும்பு மேயரை முன் உதாரணமாகக் கொண்டு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்பட வேண்டும்” என்று கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் வேண்டுகோள் விடுத்தார். கட்சி, பேதங்களை சுட்டிக்காட்டி அரசுடன் இணைந்து செயற்படுவதை தட்டிக்களிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்தி பணிகளுக்கு நான் ஒரு போதும் இடையூறாக செயற்பட மாட்டேன் என்று கூறிய அவர், இதனை கருத்திற்கொண்டே இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
சுமார் 47 மில்லியன் ரூபா செலவில் கொழும்பு-09, தெமட்டகொட பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தெமட்டகொட பொதுச் சந்தைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபயராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேலும் குறிப்பிடுகையில்.
இன்றைய நிகழ்வானது தெமடகொட மக்களுக்கு ஒரு முக்கியமான ஒன்றாகும். மூன்று முறை இந்த திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
எனினும் அது நிறைவேறவில்லை. இதனை நிறைவேற்ற இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக, மருந்தாகவே நான் இந்த நிகழ்வுக்கு பாதுகாப்புச் செயலாளரை பிரதம அதிதியாக அழைத்தேன்.
ஏனெனில் இந்த திட்டத்தை முன்னெடுக்கும் போது ஏதாவது நிதி தட்டுப்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை அவர் உரியமுறையில் தீர்த்து தருவார்.
எனவே எதிர்வரும் 6மாத காலத்திற்குள் அதாவது எதிர்வரும் ஒக்டோபர் முதல்வாரத்தில் நாங்கள் இதனை பாதுகாப்புச் செயலாளரின் கரங்களால் திறந்து வைக்கவுள்ளோம்.
கொழும்பு நகர் தற்போது அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்க பாதுகாப்புச் செயலாளர் பிரதான காரணம். இதனை எவரும் மறக்க முடியாது. எனக்கு ஒரு குற்றச் சாட்டு உள்ளது.
நான் அரசுடன் இணைந்து செயற்படுவதாக, நான் ஒரு சிறந்த ஒரு முதல்தர ஐ.தே.க. சார்ந்தவன். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை, எனக்கும் கட்சிக்கும், தலைமைத்துவத்திற்கும் பிரச்சினை கிடையாது. அதனை சகலரும் அறிவர்.
ஆனால் மக்களின் நலன் கருதியே பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்றேன்.
அதேபோன்று கொழுபில் சட்டவிரோத மாக எந்தஒரு நிர்மாணங்களையும் மேற்கொள்ள நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். இதற்காக எவர் எனக்கு எதனை கூறினாலும் பரவாயில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment