Header Ads



ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க, உக்ரைனில் அமெரிக்க ராணுவம் நுழையுமா..?


ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்புவது குறித்து ஓபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.

ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக 3 மாதமாக கடும் போராட்டம் நடந்தது. அதன் பின்னர் அவர் பதவி விலகி ரஷியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.

தற்போது அங்கு இடைக்கால அரசு பதவி வகிக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அதிபர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக ரஷியா களம் இறங்கியுள்ளது.

உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் 2 விமான நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை ரஷியா ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. அங்கு ரஷிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும், உக்ரைன் கடல் பகுதிக்கு ரஷியா 2 போர்க் கப்பல்களை அனுப்பியது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஓபாமா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் உக்ரைனில் இருந்து ரஷியா தனது ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார். அதை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நிராகரித்தவிட்டார்.

அதைத்தொடர்ந்து அதிபர் ஓபாமா தங்களது ஐரோப்பிய நட்பு நாடுகளான இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போலந்து அதிபர் புரோனில்லா கொமொரவுஸ்கி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் தனித்தனியாக உக்ரைன் பிரச்சினை குறித்து டெலிபோனில் பேசினார்.

அப்போது அவரிடம் அந்நாட்டு தலைவர்கள் உக்ரைனின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ரஷியா ஈடுபடுவதாக வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் இது சர்வதேச சட்டம் மற்றும் அமைதி, பாதுகாப்பு போன்றவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அமைதியை கட்டிக்காக்க உறுதி பூண்டுள்ள தாகவும் அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

தற்போது உக்ரைனில் ரஷியா படைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்க அதிபர் ஓபாமா உக்ரைனுக்கு தனது ராணுவத்தை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதற்கு ஆதரவை பெறதான் நட்பு நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் போலந்து தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.