ஜெனீவாவில் நாம் வெற்றியீட்டினாலும், தோல்வியுற்றாலும் எமக்குப் பிரச்சினையில்லை - மஹிந்த ராஜபக்ஷ
(Tn) ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை. எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். விசாரணைகள் நடத்தப்பட்டால் அது யுத்தம் ஆரம்பித்த காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும். கடைசி ஐந்து நாள் என்றோ, 2010 ற்குப் பிறகோ நடத்தப்படக் கூடாது. இவ்வாறு செயற்படுவது சிலரைப் பாதுகாக்கவே என்பதை நாம் அறிவோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு நகரில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்திகளை அனைத்து மக்களும் அறிவர்.
30 வருட காலம் இந்த நாட்டில் கொடூரமான யுத்தம் நிலவியது. இந்த யுத்தத்தில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்களென அனைத்து இன மக்களும் கொல்லப்பட்டனர்.
இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமல்ல. இது இனவாத யுத்தமுமில்லை. அன்று பிரபாகரன் என்ற பயங்கரவாதி ஏற்படுத்திய பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எமது பொறுப்பாக அமைந்தது.
இரண்டு மணித்தியாலங்களில் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டனர். அதற்கு முன்னரே சிங்களவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு விட்டனர். தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். துரையப்பாவில் ஆரம்பிக்கப்பட்ட படுகொலை அமிர்தலிங்கம், சாம் தம்பிமுத்து, அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் என தொடர்ந்தது. இந்த வகையில் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், காமினி திசாநாயக்க போன்ற அமைச்சர்கள், ஜனாதிபதியான ஆர். பிரேமதாச, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி போன்றோரும் கொல்லப்பட்டனர்.
இதுபோன்று படுகொலை அலை நாட்டில் தொடர்ந்தது. அத்தகைய பயங்கரவாதத்துக்கே நாம் முற்றுப்புள்ளி வைத்தோம். 2005 ல் நான் தேர்தலில் நின்றபோது பயங்கரவாதத்தை இல்லாதொழிக்குமாறு மட்டுமே மக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். யுத்தம் நிறுத்தப்பட்டால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்றனர். 2010ல் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வாக்குறுதியை நாம் மக்களுக்கு வழங்கினோம். அதை நாம் நிறைவேற்றினோம். எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்கள் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றன. அதை உணரக்கூடியதாகவுமுள்ளது.
ஓலைக் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து அங்கு அவர்களைக் குடியமர்த்துவதாகக் கூறினோம். அதனை நாம் நிறைவேற்றி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் அவ்வாறு 20,000 வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டு விடும். எதிர்வரும் வருடங்களில் இது 50 ஆயிரமாக அதிகரிக்கும். நாம் இந்த திட்டத்தை ஒத்திப்போடவில்லை தொடர்ச்சியாக முன்னெடுப்போம். இத்திட்டத்தைச் சீர்குலைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.
நாட்டில் ஒரு அபிவிருத்தி இடம்பெறும்போது அதில் சகலரும் பங்கேற்க வேண்டும். எதிர்கால சந்ததிக்கு சிறந்த நாடு ஒன்றைக் கட்டியெழுப்புவது எமது பொறுப்பு.
இதுபோன்று நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் போது ஜெனீவாவிற்குப் பதில் சொல்ல நேர்ந்துள்ளது. இன்று சிலர் மத வாதத்தைக் கிளறுகின்றனர். பிரபாகரன் இனவாதத்தைத் தொடர்நது கடைப்பிடித்தாலும் மத வாதத்தைப் பயன்படுத்தியதில்லை. சிலர் இப்போது மதவாதத்தைப் பரப்பி வருகின்றனர். இலங்கையில் எப்போது மத நல்லிணக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிகழ்விலும் கூட அது வெளிப்படுகிறது. அனைத்து மதத் தலைவர்களும் இங்கு உள்ளனர் என்பதும் சான்று.
கடந்த காலங்களில் காத்தான்குடி பள்ளியிலும் தலதா மாளிகையிலும் ஸ்ரீமாபோதியிலிருந்து குண்டு வைத்து மக்களைக் கொலைசெய்த போது அது பற்றி அன்று எவரும் பேச முன்வரவில்லை. அவர்களே இப்போது மத நல்லிணக்கம் பற்றி பேசுகின்றனர். நாம் மத நல்லிணக்கத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பி வரும்போதே சிலருக்கு ஜெனீவா ஞாபகத்துக்கு வருகிறது. ஜெனீவா விவகாரம் நெருங்கும் போதே அவர்கள் இத்தகைய அனைத்துப் பிரச்சினைகளையும் முன்வைக்கின்றனர். சிலரது எதிர்பார்ப்பானது. வெளிநாடுகளுடன் சேர்ந்து அதன் மூலம் பலமடைந்து எம்மைக் கவிழ்ப்பதே.
வெளிநாடுகளில் அல்லது ஜெனீவாவில் நாம் வெற்றியீட்டினாலும் தோல்வியுற்றாலும் அதில் எமக்குப் பிரச்சினையில்லை. எனினும் எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக முன்னோக்கிக் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதனால் ஜெனீவா பற்றி நான் கணக்கிலெடுப்பதே இல்லை. விசாரணைகள் நடத்த கோரும் போது நாம் கூறினோம் யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து விசாரணை நடத்த வேண்டுமென்று. அது அவர்களின் நோக்கமல்ல. கடைசி ஐந்து தினங்கள் பற்றியே விசாரணை நடத்த வேண்டுமாம். இன்னும் சிலர் 2010 லிருந்து ஆரம்பிப்போம் என்கின்றனர்.
ஏன் எதற்காக? சிலரைப் பாதுகாப்பதற்காகவே! நாம் கூறுகிறோம் யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து விசாரணை நடத்த வேண்டுமென்று. அதற்கு நாம் தயார். நாம் மனசாட்சிக்கு நீதியானதையே செய்தோம். இந்த நாட்டிலுள்ள சகல மக்களினதும் நன்மைக்காகவே அதைச் செய்தோம். இந்த நாட்டை நாம் அபிவிருத்தியில் கட்டியெழுப்புவோம். எனினும் எதிர்க் கட்சித் தலைவர் ஒரு மேடையில் பேசும்போது நாம் நாட்டைக் குறைத்து விட்டதாகக் கூறுகிறார். நாட்டின் பாதியை ஒப்பந்தம் மூலம் பிரித்துக்கொடுக்க தயாரானவர்களே நாடு சிறிதாகிவிட்டதாகக் கூறுகின்றனர். நாம் 500 ஏக்கரில் புதிய தீவு ஒன்றை நாட்டிற்குள் அமைக்கின்றோம் என்றார்.
Post a Comment