கல்முனை சபைபிரதேசத்திலும் மாடுகளிலும், ஆடுகளிலும் கால்வாய் நோய்த் தாக்கம்
கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தொற்று நோய்ப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை பிரதேசத்திலும் மாடுகளிலும், ஆடுகளிலும் கால்வாய் நோய்த் தாக்கம் அதிகாரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபைப்பிரதேசத்தின் நற்பிட்டிமுனைக் கிராமத்தில் நோய்த்தாக்கத்துக்குள்ளான மேலும் பல மாடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் கல்முனை பிரதேசத அரசாங்க மிருகவைத்திய அதிகாரி (டாக்டர்) ஏ.எம். ஜிப்ரி, அம்பாறை மாவட்ட விலங்கு நோய்ப் புலனாய்வு உத்தியோகத்தர் (டாக்டர்) எம். ஏ. எம். பாஸி மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் கால்நடை சட்டவிவகாரங்கள் மற்றும் கால்நடைவளப்பாதுகாப்பு ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான உதவிப்பணிப்பாளர் (டாகடர்) சுல்பிகார் அபூபக்கர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி சுகாதாரப்பணிப்பாளர் நாயகத்தின் தடையுத்தரவின் பிரகாரம் மூன்று மாத காலப்பகுதிக்கு ஆடு மாடு பன்றி ஆகிய விலங்குகளை அறுப்பதும், அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாயினும், அண்மையில் கல்முனை மாநகர சபையால் எதிர்வரும் மார்ச்சு மாதம் 12 ஆம் திகதி வரை கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை அறுப்பதில்லை என கடந்த 27.02.2014 ஆம் திகதி கல்முனை மாநகர சபை முதல்வருக்கும், இறைச்சிக்கடைக்காரர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை சட்டவிவாகரங்களுக்குப் பொறுப்பான உதவிப்பணிப்பாளர் (டாக்டர்) சுல்பிகார் அபூபக்கர் அவர்களிடம் வினவிய போது, 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்குநோய்கள் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவு அமுலில் இருக்கும் வரை நோய்த் தொற்றுப்பிரதேசத்தில் மாடு, ஆடு மற்றும் பன்றி ஆகிய இன விலங்குகளை அறுப்பதும் அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டிருக்குமெனவும், தடையுத்தரவை நீக்கும் அல்லது நீடிக்கும் அதிகாரம் கால்நடை உற்பத்தி சுகாதாரப்பணிப்பாளருக்கு மாத்திரமே உண்டெனவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கோ மாநகர முதல்வர்களுக்கோ, உள்ளூராட்சி ஆணையாளருக்கோ, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கோ அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கோ அல்லது பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கோ அத்தகைய அதிகாரம் இல்லையெனவும், நோய்த்தொற்றுப்பிரதேசத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும், அவற்றின் தலைவர்கள் அல்லது முதல்வர்களும், சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட சகல சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களும் குறிப்பிட்ட தடையுத்தரவுக்கமைய செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அவசியமெனக் கருதினால் நோய்த்தொற்றுப்பிரதேசத்தினுள் உள்ள இறைச்சிக்கடைகளையும், விலங்கறுமளைகளையும், நீதிமன்றக் கட்டளையைப் பெற்று சீல் வைத்து மூடிவிடுவதற்கு 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீPழ் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கு அதிகாரமுள்ளது. மேலும் நோய்த்தொற்றுப்பிரதேசத்தினுள் விற்கப்படும் அல்லது உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் உள்ள (சமைத்த அல்லது பொரித்த இறைச்சி உள்ளிட்ட) மாடு. ஆடு, மற்றும் பன்றி ஆகியவற்றின் இறைச்சியைக் கைப்பற்றி அழிக்கவும் அச்சட்டத்தின் 10 ஆம் மற்றும் 11 ஆம் பிரிவின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தேவையேற்படின் இத்தடையுத்தரவை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடிப்பதற்கும் அச்சட்டத்தின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதெனவும் (டாக்டர்) சுல்பிகார அபூபக்கர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தடையுத்தரவை அமுல்படுத்தும் பொறுப்பு அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி (டாக்டர்) எம். சீ. முஹம்மட் ஜுனைட் அவர்களுக்கும், அவரது மேற்பார்வையின் கீழ் உள்ள பிரதேச அரசாங்க மிருகவைத்திய அதிகாரிகளுக்கும், பிரதேசத்தின் பொலிஸ் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment