Header Ads



கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பிரயாணக் கொடுப்பனவு அதிகரித்தமைக்குப் பாராட்டு

கடந்த 18.02.2014அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட, ஆசிரிய ஆலோசகர்களின் பிரயாணக் கொடுப்பனவை ரூ.25000 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு அனுமதி வழங்கிய கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக்கு கிழக்கு ஆசிரிய ஆலோசகர்களது ஒன்றியம் பாராட்டுத் தெரிவிக்கின்றது. கிழக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தின் கீழ் வலயக் கல்வி அலுவலகங்களில் சேவையாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்கள் தங்களுடைய வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்குத் தரிசித்து அங்குள்ள மாணவர்களின் கற்றல் சிறப்பிக்கவும், ஆசிரியர்களின் வாண்மைத்துவ மேம்பாட்டிற்கும், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி  வருகின்றனர். வலயத்திலுள்ள தூரத்திலுள்ள பாடசாலைகளுக்கும் இவர்கள் சென்று தங்களது சேவையினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வழங்கப்படுகின்ற பிரயாணக் கொடுப்பனவு குறைவாக இருந்தது.

தற்போதைய அதிகரித்த வாழ்க்கைச் செலவு, பெற்றோல் விலையேற்றம் போன்ற காரணங்கள் இருந்தும், தங்களது கடமையை சிறப்பான முறையில் நிறைவேற்றியே வந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு சேவையாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்களது பிரயாணக் கொடுப்பனவை அதிகரிக்கக் கோரும் மகஜர் ஒன்றை அண்மையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைப் பேச்சாளருமான கௌரவ அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையிடம் கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களின் ஒன்றியம் அக்கரைப்பற்றில் சந்தித்து கையளித்திருந்தனர். இதன் பின்னணியில், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் திரு. விமலவீர திஸநாயக்கா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியை வழங்கிய கிழக்கு மாகாண அமைச்சரவைக்கு கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களது ஒன்றியம் பாரட்டினைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவிக்கின்றார்.

மேலும், கிழக்கு மாகாணத்தின் அமைச்சரவைத் தீர்மானத்தின்பிரகாரம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவினை  அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை கல்வித்திணைக்களம் மேற்கொள்ளுமாறும் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.