Header Ads



யாருடைய பருப்பு விரைவாக வேகும்...?


(இவன்)

அரசியற் புரட்சிகளுக்கு பிரபலமானதொரு இடம் தான் கல்முனைத் தேர்தல் தொகுதி. அதற்கு தேர்தலொன்று வரவேண்டிய அவசியமே இல்லை. கிழமைக்கொரு தடவை அல்லது குறைந்தது மாதத்திற்கொரு தடவையாவது ஏதாவது ஒரு புதினம் நிகழும்.

அங்கே இறுதியாக நடந்த புதினம் தான், கல்முனையின் முன்னாள் முதல்வரும் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான சிராஸ் மீராசாஹிபு கௌரவ அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டது. சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் 24. 03. 2014 அன்று நடந்த, சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை மாநாட்டில் வைத்து இணைந்து கொண்டார்.

பலவிதமான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வின் பிரதிபலிப்பானது இன்னும் எத்தனை வருடங்களுக்கு புரியாத புதிராக இருக்கப் போகின்றது என்பதை காலம் தான் அறியும். பலவிதமான வினாக்களை இலவசமாக பரப்பியுள்ள இந்நிகழ்விலே உரையாற்றிய சிராஸ், ஒருவர் தான் பிறந்த பிரதேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் தனது பிரதேசத்தைப் பற்றி சிந்திப்பதும் பிரதேசவாதமாக கருதமுடியாது. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்று வேண்டுமென்ற கோரிக்கை இன்று, நேற்று உருவான விடயமல்ல. அது பல வருடங்களுக்கு முன்னராக வலுப்பெற்று வருகின்றது எனக் கூறினார். இதனைத் தெரிந்து கொள்வதற்கு சுமார் இரண்டு வருடங்கள் தேவைப்பட்டதா எனக் கேட்கப்படுகின்றது. 

முதல்வர் பதவி எனும் ஆசனத்தில் அமர்ந்திருந்த அந்த இரண்டு வருடங்களும், அவரது ஊர் மக்களின் நீண்ட காலத்தேவையான அந்த உள்ளுராட்சி மன்றம் பற்றிய எண்ணம் வராமல் போனதன் மர்மம் என்னவாக இருக்கலாம். இதனைத் தான் காலம் கடந்த ஞானம் என்பதா அல்லது மந்த புத்தி என்பதா?

இது இவ்வாறிருக்க, அந்த நிகழ்வில் வைத்து கௌரவ அமைச்சர் அதாவுல்லா உறுதியளித்த விதமும் பல விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. அதாவது, அவர் உரையாற்றும் போது, எந்தவொரு சமூகமும் எந்தவொரு பிரதேசமும் பாதிக்காதவாறு அதனை வழங்குவதற்கு என்னாலான நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றார். அது எப்போது என்ற விடையில்லாத கேள்வியை தொடாமலே சொன்ன விதமும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தான் அமைச்சர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஏனெனில், அவரும் ஒரு அரசியல்வாதி தானே. தான் சாய்ந்தமருது மக்களிடம் வாக்குக் கேட்டு வரமாட்டேன் என்று கூறிய அமைச்சர், உங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினரைப் பெற முயற்சியுங்கள் என்று கூறத் தவறவில்லை. தனியான உள்ளுராட்சி மன்றம் எப்போது மலரும் என்ற கேள்வி எவ்வளவு காலத்துக்கு உலாவும் என்பதே இப்போது பரவலாகப் பேசப்படுகின்ற விடயமாக இருக்கிறது. 

இந்த நிலை இவ்வாறிருக்க, பலரது வாயிலும் இப்போது மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போல பேசப்படுகின்ற விடயமும் நியாயமானது தான். சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்திற்கான கோரிக்கை ஏதோவொரு வகையில் வலுப்பெற்றிருக்கின்ற வேளையில், அந்த ஊரிலே ஆழமாக தனது ஆணிவேரையே பதித்திருக்கின்ற முஸ்லிம் காங்கிரசு இப்போது என்ன செய்யப் போகின்றது என்ற நியாயமான கேள்வி எழுகின்றது. அந்தக் கட்சியைச் சேர்ந்த உள்ளுர் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகின்றார்கள். இதுவரை காலமும் அந்த தனியான உள்ளுராட்சி மன்றத்திற்கு முஸ்லிம் காங்கிரசு தடையாக இருந்தது என்று சொல்வதை விடவும், அதனை விரும்பாமல் இருந்தது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

எப்படிப் பார்த்தாலும் அந்தக் கட்சிக்கு இப்போது இருப்பது மூன்று தெரிவுகளே. முதலாவது...அதனை வேறு வழியில்லாமல் ஆதரிப்பது. இவ்வாறு செய்கின்ற போது, தனது ஆதரவாளர்களில் கணிசமானோரும், தேர்தல் நேரத்தில் தீர்மானம் எடுக்கின்ற மக்களில் பலரும் தேசிய காங்கிரசின் பக்கம் சாய்ந்து விடுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. ஏனெனில் மக்கள் நினைக்கக் கூடும் தேசிய காங்கிரசு முயற்சித்ததால் தான் உள்ளுராட்சி மன்றம் கிடைத்தது என்று. இதன் காரணமாக இரண்டாவது பாராளுமன்ற ஆசனத்தை இழந்து விடுவதற்கும் ஏதுவாகிவிடும் என்பதை அந்தக் கட்சி யோசிக்காமல் விடாது.

இரண்டாவது...அதனை எதிர்ப்பது. இது அந்தக் கட்சிக்கு தூக்குக் கயிறாகவே அமையும் என்பதை புத்தியில்லாதவர்களும் அனுமானித்து விடுவார்கள். ஒருவேளை அவ்வாறு செய்ய வேண்டி வந்தால், அது தேசிய காங்கிரசிற்கு பலவகையிலும் நன்மையாகவே அமையும். ஊள்ளுராட்சி மன்றத்தை அமைப்பதற்கான முயற்சிகளை எடுக்காமலேயே அந்தப் பழியை முஸ்லிம் காங்கிரசு மேல் இலேசாகப் போட்டு விடலாம். இப்போது ஏற்பட்டுள்ள இந்த நிலமையானது முஸ்லிம் காங்கிரசுக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு ஆப்பாகக் கூட இருக்கலாம்.

மூன்றாவது...பிரதேச சபைக்கும் மேலான ஒன்றை சாய்ந்தமருதுக்கு வழங்குகின்ற அதேவேளை ஏனைய பகுதிகளுக்கும் அவரவருக்குரியதை கொடுப்பதற்கான முஸ்தீபுகளை மேற்கொள்வது. இதனால் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதுடன், தேசிய காங்கிரசின் திட்டங்களையும் தவிடுபொடியாக்கி விடலாம். சில காலங்களுக்கு தொடர்ந்தும் தனது ஆதிக்கத்தை அந்தப் பகுதியிலே இறுக்கமாக வைத்திருக்கலாம். இந்த முயற்சி தான் முஸ்லிம் காங்கிரசுக்கு உசிதமாக இருக்கும். இதற்கு முஸ்லிம் காங்கிரசு தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் இடையேயான நெருக்கத்தின் தன்மை முக்கியமானது. ஏனெனில் உள்ளுராட்சி சபைகளுக்கு பொறுப்பான அமைச்சு தேசிய காங்கிரசு தலைவர் கௌரவ அமைச்சர் அதாவுல்லாவின் பொறுப்பிலிருப்பதால், ஜனாதிபதியின் தலையீடு நிச்சயமாக தேவைப்படும்.

இதுவொரு இக்கட்டான கால கட்டம் என்பதை உள்ளுர் முஸ்லிம் காங்கிரசு பிரமுகர்கள் உணர்ந்ததனாலேயே, கடந்த இரண்டு வருடங்களாக கூட்டப்படாதிருந்த அதுவும் கல்முனை மாநகர முதல்வர் பிரச்சினை ஏற்பட்ட போதும் கூட கூடாதிருந்த சாய்ந்தமருது முஸ்லிம காங்கிரசின்; மத்திய குழுவும் நேற்று 24.03.2014 கூடியிருந்தது. அதிலும் விசேடம் என்னவென்றால் இரு துருவங்களாக இருந்த முஸ்லிம் காங்கிரசு பிரமுகர்கள் அருகருகே அமர்ந்திருந்து தங்களுக்கிடையே எதுவுமே நடவாதது போல இருந்தார்கள்.

முதல்வர் பிரச்சினை ஏற்பட்ட போது, சிராசுக்கு ஆதரவாக தனது தலமையைக் கூட விமர்சித்த மாநகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் இப்போது என்ன சொல்லப் போகிறார். தனியான உள்ளுராட்சி மன்றம் எமது தாகம் என்று பீற்றிக் கொள்கின்ற அவர் என்ன செய்யப் போகிறார்.

இதற்கிடையில் கல்முனையைத் துண்டாட ஒருபோதும் விட மாட்டேன் என்று வீராவேசத்துடன் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் சகோ. ஹரீஸ் என்ன செய்யப் போகின்றார். தலைவர் ஹக்கீம் பிரிக்க முற்படும் போது ஹரீஸ் அதனை எதிர்த்துக் கொண்டு அதாவுல்லாவோடு சேர்வாரா அல்லது தனது வீரவசனங்களை மறந்து விட்டு தலைவரோடு கைகோர்த்துக் கொண்டு பிரிப்பதற்கான முயற்சியிலே தானும் உன்னிப்பாக கலந்து கொண்டு தனது ஆசனத்தை தக்கவைக்க முயற்சிப்பாரா?

பொறுத்திருந்து பார்ப்போம். யாருடைய பருப்பு விரைவாக வேகுதென்று.  

No comments

Powered by Blogger.